ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தேரருக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு

🕔 January 3, 2021

யுள் தண்டனை விதிக்கப்பட்ட மாளிகாவத்தை போதிராஜாரம விஹாரையின் விஹாராதிபதி ஊவாதென்னே சுமன தேரருக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

இவர் மீதான ஆயுள் தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெறும் நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

முன்னாள் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சந்தர்ப்பத்தில், ஊவாதென்னே சுமன தேரர், சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக செயற்பட்டிருந்தார்.

2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு அண்மித்த திகதியொன்றில், மாளிகாவத்தை போதிராஜாரம விஹாரையிலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

இந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஊவாதென்னே சுமன தேரருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 2020ம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி கடூழிய சிறைத் தண்டனை விதித்திருந்தது.

50 கைக்குண்டுகளை வைத்திருந்தமை மற்றும் 210 துப்பாக்கி ரவைகளை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களிலிருந்து ஊவாதென்னே சுமன தேரர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டு வைத்திருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஊவாதென்னே சுமன தேரரை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையிலேயே, ஊவாதென்னே சுமன தேரர் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நன்றி: ட்ரூ சிலோன்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்