முஸ்லிம் சமூகம் இல்லாத பிரச்சினையை உருவாக்கி ஆர்ப்பாட்டம் செய்கிறது: சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர்

🕔 January 3, 2021

நாட்டின் சட்டத்திற்கு இணங்கவும், மனித சமூகத்தின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வேண்டுமாயின் தற்போது உலகில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளுக்கு அமைய, கொரோனாவால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்வது மிகவும் பொருத்தமான நடவடிக்கை என சப்ரகமுவ பல்லைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் கும்புறுகம்முவே வஜிர தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

“அனைத்து தரப்பு மக்களின் ஒத்துழைப்பும் இதற்கு கிடைக்க வேண்டும். உலக நாடுகள் தேசிய அனர்த்தம் ஒன்று ஏற்படும் போது எவ்வித அரசியல் பேதங்களும் இன்றி ஒரு நிலைப்பாட்டில் இருந்து செயற்படுகின்றன.

ஆனால் இலங்கையில் அப்படியான ஒன்றை காணமுடியவில்லை. நாட்டின் எதிர்க்கட்சி இரண்டு தேர்தல்களில் வெற்றியை பெற்றுக்கொள்வதற்காக தவறான நிலைப்பாட்டை முன்வைத்து மக்களை ஏமாற்றி தவறான சிந்தனையை தூண்டி வருகிறது.

அனைத்து அரசியல்வாதிகளும், அனைத்து இனங்களும் நாட்டின் பாதுகாப்பு குறித்தே சிந்திக்க வேண்டும். தத்தமது தேவைகள் பற்றி சிந்திக்கக் கூடாது. சிங்கள பௌத்தர்கள் அல்லது கத்தோலிக்க சமூகங்களுக்கு இடையில் இது பற்றிய பேச்சுக்கள் இல்லை.

எனினும் துரதிஷ்டவசமாக முஸ்லிம் சமூகம் இல்லாத பிரச்சினையை உருவாக்கி, தொற்று நோயால் இறப்பவர்களின் உடல்களை ஏற்காது அடக்கம் செய்யும் உரிமையை கோரி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

நாட்டில் ஒரு சட்டமே உள்ளது. அந்த சட்டத்துக்கு அமைய முழு சமூகமும் செயற்பட வேண்டும். இல்லாவிட்டால் நாடு ஒன்றை முன்னெடுத்துச் செல்ல முடியாது.

நாட்டில் ஒரு அரசாங்கம் உள்ளது. அந்த நாட்டின் சட்டத்திற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.

கொரோனா தொற்று நோயில் இருந்து தப்பிக்க வேண்டுமாயின் செய்ய வேண்டிய மிகவும் சாதாரண – நியாயமான நடவடிக்கை, அதனால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்வதாகும்” எனவும் வஜிர தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Comments