கொவிட் காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு இறக்காமம், மறிச்சிக்கட்டி ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: அமைச்சர் வாசு

🕔 December 28, 2020

கோவிட் -19 தொற்று காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கான இரண்டு பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேச நாணயகார தெரிவித்துள்ளார்.

மேற்படி இடங்கள் குறித்த அறிக்கையினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அவர் ஒப்படைத்துள்ளார்.

கோவிட் -19 தொற்று காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு, நிலத்தடி நீர் ஆழமாக உள்ள பகுதிகளை அடையாளம் காணுமாறு பிரதமர் வழங்கிய உத்தரவுக்கிணங்க, இந்த அறிக்கையினை அமைச்சர் தயாரித்து வழங்கியுள்ளார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள இறக்காமம், மன்னார் மாவட்டத்தில் மறிச்சிக்கட்டி ஆகிய பிரதேசங்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளன.

“நிலத்தடி நீர் மிகவும் ஆழமாக இருக்கும் 02 பிரதேசங்கள் குறித்து, எமது அமைச்சிலுள்ள நிபுணர்கள் ஓர் அறிக்கையை வழங்கியுள்ளனர்.

மன்னாரில் மறிச்சிகட்டி மற்றும் கிழக்கு மாகாணத்தில் இறக்காமம் ஆகிய பகுதிகள் – தரை மட்டத்தில் 30 அடி கூட தண்ணீரைக் கண்டுபிடிக்க முடியாத இரண்டு இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன” எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

“கொவிட் பாதிப்பினால் மரணித்தோரை அடக்கம் செய்வது தொடர்பான விவகாரம் குறித்து ஆராய்வதற்காக சுகாதார நிபுணர்கள் மீண்டும் கூடும் போது, இந்த இரண்டு பகுதிகளையும் பரிசீலிக்க முடியும்” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்