மு.கா. தலைவரின் மேய்ச்சல் தரையும், ‘கண்கெட்ட’ வாக்குறுதிகளும்: 20 வருட கிழிசல்கள் பற்றிய சிறு அலசல்

🕔 August 3, 2020

– அபூ ஸைனப் –

இந்தக் கட்டுரை – இலங்கை முஸ்லிம்களை ஒன்றிணைத்த ஒரு சிறிய அலசல் என்பதுவும், பிரதேசவாத, இனவாதக் கருத்துக்களை உள்ளடக்காதது என்ற பொறுப்புத் துறத்தலை முதலிலேயே கூறிக்கொள்ளவும் விளைகிறது.

“பொத்துவில் மக்கள் 15000 வாக்குகளைத் தாருங்கள், உங்களுக்கு நான் எம்.பி தருகிறேன்”, இது றவூப் ஹக்கீம் அவர்களால் சமீபத்தில் பொத்துவிலில் பேசப்பட்ட வாசகமாகும். பண்டைய வர்த்தக முறையில் நோக்கினால் இது பண்ட மாற்று வியாபாரமாகும் (Barter System). அதாவது, ஒன்றைக் கொடுத்து இன்னொன்றைப் பெற்றுக் கொள்ளல். றவூப் ஹக்கீம் தேர்தல்களையும் வாக்குகளையும் வியாபார சந்தையாக மாற்றி இருக்கிறார் என்பதற்கு இதை விடவும் பல உதாரணங்கள் இருக்கின்றன.

20 வருடமாக மு.கா தலைவராகப் பதவி வகிக்கும் ஹக்கீம், முஸ்லிம்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுக் கொண்ட கட்சி மு.கா என அவ்வப்போது மேடைகளில் முழங்குவார்.

2015 யிற்குப் பிறகு தாபிக்கப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன கடந்த 03 வருடங்களில் இலங்கையின் அதிகமான உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி இருக்கிறது. ஜனாதிபதியை உருவாக்கி இருக்கிறது. எதிர்வரும் பாராளுமன்றத்தை இலகுவாகக் (Cakewalk) கைப்பற்றப் போகிறது. இவ்வளவு குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியை பொதுஜன பெரமுனவினால் பெற முடிந்திருக்கிறது என்றால், 20 வருட காலத்தில் மு.கா வினை றவூப் அவர்கள் எவ்வளவு வளர்த்திருக்க வேண்டும்.

கடந்த முறை மு.கா பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெறும் 05 (கண்டி – 01, திகாமடுல்ல – 03, மட்டக்களப்பு – 01). மு.கா வின் வரலாற்றில் இது மிகப் பெரும் சரிவாகும். 20 வருட காலத்தில் மு.கா வினை இலங்கையின் நாலாபுறத்திலும் வளர்த்திருக்க வேண்டும். களுத்துறை, ஹம்பாந்தொட்டை, காலி, அனுராதபுரம், கொழும்பு, மாத்தளை, குருணாகலை என முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் கட்சியை வியாபித்திருக்க வேண்டும். மரச் சின்னம் இலங்கையின் தெருக்களில் கோலோச்சியிருக்க வேண்டும்.

வடக்கு – கிழக்கில் முஸ்லிம்கள் மூன்றில் ஒரு பங்கு மாத்திரமே வாழுகின்றனர். ஏனைய 07 மாகாணங்களிலும் மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள் வாழுகின்றனர். அப்படியாயின் அதிக முஸ்லிம் பிரதிநிதிகளை வடகிழக்குக்கு வெளியில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டு. கிழக்கில் 04 எம்.பி கள் என்றால் வடக்கு கிழக்குக்கு வெளியே குறைந்தது 08 எம்பிக்களை அல்லவா அவர் உருவாக்கி இருக்க வேண்டும்.

மு.கா தலைவர் செய்தாரா? அல்லது செய்ய முயற்சித்தாரா ? இல்லவே இல்லை. ஆகக் குறைந்தது தனக்கு வாக்கு இல்லாவிட்டாலும் சொந்த மாவட்டமாக அவர் கருதும் கண்டியிலாவது மரச் சின்னத்தில் போட்டி போடும் நிலையை உருவாக்கினாரா? கிடையவே கிடையாது. வாடகைச் சின்னங்களிலே கேட்டுக் கேட்டு தன்னை வளர்த்தாரே தவிர அவர் கட்சி வளர்க்க முயற்சிக்கவில்லை.

அப்படியாயின் அவர் 20 வருடமாக என்ன செய்தார்?

  • உயர்பீடத்தில் தனக்கு சார்பானவர்களை அதிகரித்து மரணிக்கும் வரைக்கும் கட்சியின் தலைவராக தன்னை உறுதிப்படுத்திக் கொண்டார்.
  • கிழக்கு மாகாணத்தை மேய்ச்சல் தரையாகப் பயன்படுத்தி அங்கு வரும் எம்பிக்களைக் காட்டி தனக்குரிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சினை எடுத்துக் கொண்டு, அதன் மூலம் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்குரிய அரசியல் உரிமைசார் விடயங்களை வலுப்படுத்தாமல் தன்னையும் தனது உறவினர்களையும் மாத்திரம் வலுப்படுத்தினார்.
  • வெளி நாட்டு சுற்றுப் பயணங்கள் மேற்கொள்கிறார்.
  • தேர்தல் காலங்களில் மாத்திரம் தலா ஒரு நாள் வீதம் புத்தளம், களுத்துறை, குருணாகல ஆகிய பகுதிகளையும், தலா இரண்டு நாட்கள் வீதம் திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் செய்கிறார்.
  • கிழக்கு மாகாண மக்களுக்கு விஷேடமாக டுபாய், பஹ்றைன், கடல் நீர் சுத்திகரிப்பு, கரையாரக் கச்சேரி, காணி விடுவிப்பு ஆகிய பொய் வாக்குறுதிகளுடன், ஆதவன் பாட்டையும் போட்டு மசாலாத் தனமான அரசியல் கலப்பில் அந்த அப்பாவி மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறார்.
  • தோப்பூர் போன்ற கிராமப்பகுதிகளில் ஹெலிகொப்டரில் இறங்குகிறார்.
  • மும்மொழிகளிலும் கவர்ச்சியாகப் பேசுகிறார்.
  • கேள்விகளுக்கு மழுப்பலாகப் பதிலளித்து சாணக்கியன் எனப் பெயர் எடுத்திருக்கிறார்.
  • ஒவ்வோரு ஊர்களிலும் அதிகாரம் தருவதாக ‘கண்கெட்ட’ வாக்குறுதி அளித்து வருகிறார்.
  • எல்லா அரசாங்கங்ளுடனும் ஒட்டிக் கொண்டு; ‘முஸ்லிம்கள் தொப்பி பெரெட்டிகள்’ என பெயர் எடுத்துக் கொடுத்துக் கொடுத்திருக்கிறார்.
  • வாக்குறுதிகள் வழங்கி விட்டு; “எலெக்ஷன வெண்டு கொள்வதற்கு தாளில் எழுதிக் கொடுத்தேன்” என்று சமூகத்தை ஏமாளிகளாக இழிவபடுத்தியிருக்கின்றார்.
  • ஜே.பி (சமாதான நீதவான்) நியமனங்களை வழங்கியிருக்கிறார்.

கடந்த 20 வருடமாக இதனைத்தான் செய்தார். இன்னும் பல உள்ளன. நீளமும் நேரமும் கருதி உள்ளடக்கவில்லை.

இத்தகைய குற்றச்சாட்டுகள் ஏனைய முஸ்லிம் தலைமைகளுக்கும் இல்லாமலில்லை.

இருப்பினும், முஸ்லிம்களின் ஏகோபித்த கட்சியாக தம்மை அவர்கள் பிரகடனம் செய்வதனாலும், குர்ஆன் ஹதீஸை யாப்பாக அவர்கள் கொண்டிருப்பதனாலும், முஸ்லிம்களின் உரிமைகளை தம் மூலம் மாத்திரமே பெறலாம் என அவர்கள் வெளிப்படுத்துவதனாலுமே மு.கா. வினை நோக்கியும் அதன் தலைவரை நோக்கியும் இந்த அலசல் முன்வைக்கபடுகிறது.

வடக்கு – கிழக்கினை மேய்ச்சல் தரையாகப் பயன்படுத்தி இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைக்கக் கூடிய, இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரது உரிமைகளையும் வென்றுகொடுக்கக் கூடிய, வடக்கு – கிழக்குக்கு வெளியிலும் அதிக முஸ்லிம் எம்.பிக்களை உருவாக்கக்கூடிய கூடிய தன்னலமற்ற நல்ல தலைவர், நல்ல கட்சி, அதில் கடினமாக உழைக்கக் கூடிய துடுப்புள்ள இஹ்லாசுள்ள இளைஞர்கள் என்பனவே இன்றைய இலங்கை முஸ்லிம்களின் உடனடித் தேவையாகும்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்