‘குழுவாக’ செயற்படும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்:மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு; யாரைக் குறித்து இப்படிச் சொன்னார்

🕔 August 3, 2020

– அஹமட் –

விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக குழுவாகச் சேர்ந்து செயற்படும் மு.காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிக்குமாறு அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்த மு.கா. தலைவர் ஹக்கீம், ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே, இதனைக் கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசிச் சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக 06 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், அவர்களில் சிலர், விருப்பு வாக்குகளுக்காக குழுவாகச் சேர்ந்து செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே, விருப்பு வாக்குகளுக்காக குழுவாகச் சேர்ந்து இயங்கும் தமது கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என, ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் 06 வேட்பாளர்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நஸீர், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ். வாஸித் மற்றும் முன்னாள் ராஜாங்க அமைச்சரான கல்முனையைச் சேர்ந்த எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் மூவரும் ஒன்றினைந்து 1,4,9 ஆகிய தமது இலக்கங்களுக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்து வரும் நிலையிலேயே, இவ்வாறு குழுவாக செயற்படுகின்றவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என, மு.கா. தலைவர் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸின் எந்த வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதை, மு.கா. தலைவர் ஹக்கீம் மறுதலையாகக் கூறியுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: விருப்பு வாக்குகளை யாருடன் பகிர்வது; நஸீரின் முடிவுடன் உதுமாலெப்பை முரண்பாடு; அட்டாளைச்சேனை அரசியலில் விரிசல்?

மு.கா. தலைவர் ஒலுவிலில் ஆற்றிய உரை – வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்