விருப்பு வாக்குகளை யாருடன் பகிர்வது; நஸீரின் முடிவுடன் உதுமாலெப்பை முரண்பாடு; அட்டாளைச்சேனை அரசியலில் விரிசல்?

🕔 August 2, 2020

– அஹமட் –

ம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களிடையே விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதில் மிகவும் கடுமையான குழிபறிப்புகள் நடைபெறுவதால் கட்சியின் முக்கியஸ்தர்களிடையே கடுமையான முரண்பாடுகளும் அதிருப்திகளும் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த – தொலைபேசி சின்ன வேட்பாளர் ஏ.எல்.எம். நஸீர் தனது ஆதரவாளர்கள் தனக்கும் தமது சினத்தில் போட்டியிடும் தொலைபேசி சின்ன வேட்பாளர்களான பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் வாசித் மற்றும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் கல்முனை ஹரீஸ் ஆகியோருக்கும் வாக்களிக்குமாறு தீர்மானித்து அறிவித்தமையினை அடுத்து, முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை முக்கியஸ்தர்களிடையே அதிருப்திகளும், முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மாகாண அமைச்சருமான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எஸ். உதுமாலெப்பை – இந்த முடிவுக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது, முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸுக்கு அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மு.காங்கிரஸ் ஆதரவாளர்கள் தமது விருப்பு வாக்குகளில் ஒன்றை வழங்க வேண்டும் என, நஸீர் தரப்பு தீர்மானித்தமை தொடர்பில் தனது அதிருப்தியை உதுமாலெப்பை வெளியிட்டுள்ளார்.

அட்டாளைச்சேனையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய உதுமாலெப்பை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் இருக்கத்தக்கதாகவே, இது தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய உதுமாலெப்பை;

“அட்டாளைச்சேனையில் தொலைபேசி சின்னத்துக்கு வாக்களிப்போர், பொத்துவில் பிரதேச வேட்பாளருக்கு வாக்களிப்பதென்றும், பொத்துவில் பிரதேசத்தில் தொலைபேசி சின்னத்துக்கு வாக்களிப்போர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த வேட்பாளர் நஸீருக்கு தமது விருப்பு வாக்குகளில் ஒன்றை வழங்குவதெனவும் உடன்பாடு ஒன்றுக்கு வந்திருந்தோம்.

அதேவேளை, மூன்றாவது விருப்பு வாக்கை யாருக்கு வழங்குவதென முடிவு செய்திருக்கவில்லை. இந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) கட்சியைச் சேர்ந்த சிலரைக் கூட்டிய வேட்பாளர் நஸீர், கல்முனையில் போட்டியிடும் ஹரீஸுக்கு மற்றைய விருப்பு வாக்கை வழங்குவதென தீர்மானித்துள்ளார். அவரின் இந்த தீர்மானத்துக்கு கட்சியின் உயர்பீட உறுப்பினர் வாஹிட் சேரும் உடன்பட்டுள்ளார்” எனக் கூறிய அவர், அந்த தீர்மானத்தில் தனக்குள்ள அதிருப்தியையும் அங்கு வெளிப்படுத்தினார்.

இதேவேளை, இன்று ஞாயிற்றுக்கிழமை அம்பாறைக்கு வருகை தந்து தேர்தல் பிரசார கூட்டங்களில் உரையாற்றிய மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்; “குழுவாக ஒன்று சேர்ந்து – விருப்பு வாக்குகளை யார் யாருக்கு வழங்க வேண்டும் எனத் தீர்மானித்து அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் வாக்களிக்கக் கூடாது” எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அது குறித்த முழுமையான செய்தியை விரைவில் வழங்கவுள்ளோம்.

உதுமாலெப்பையின் உரையை இங்கே காணலாம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்