சம்பத் வங்கிக் கணக்கை மூடுவதாக மங்கள அறிவிப்பு

🕔 July 3, 2020

ம்பத் வங்கியிலுள்ள தனது கணக்கை மூடுவதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பில் மங்கள சமரவீர பதிவொன்றை இட்டுள்ளார்.

‘சம்பத் வங்கி அனைத்து இலங்கையர்களுக்கும் இல்லை என்ற உண்மையை எனக்கு வெளிப்படுத்தியதற்கு நிமல்பேராவுக்கு நன்றி. எனது கணக்கை இனம், சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்யும் வங்கிக்கு மாற்றுமாறு எனது அலுவலகத்துக்கு அறிவுறுத்தியுள்ளேன். உங்கள் வங்கிக்கு பெரிய இழப்பு இல்லை, ஆனால் கொள்கைகள் எனக்கு முக்கியம்’ என, தனது ட்விட்டர் பதிவில் மங்கள குறிப்பிட்டுள்ளார்.

சம்பத் வங்கியின் தெஹிவல கிளைக்கு நேற்று சென்றிருந்த முஸ்லிம் பெண் வாடிக்கையாளர் ஒருவரிடம், அவரின் ஹிஜாபை கழற்றி விட்டு, வங்கி அலுவலகத்துக்குள் நுழையுமாறு, நிருவாகம் கூறியது.

இதனை குறித்த பெண்ணும் அவர் சார்பானோரும் எதிர்த்து நீண்ட நேரம் வாதிட்டனர். இதன் இறுதியில் வங்கி அலுவலகத்துக்குள் ஹிஜாபுடன் நுழைய அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பான வீடியோ நேற்று வெளியாகியிருந்த நிலையில், இதற்காக சம்பத் வங்கி மன்னிப்புக் கோரி, அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

தொடர்பான செய்தி: ஹிஜாப் கழற்றச் சொன்ன விவகாரம்: சம்பவத்தை ‘பூசி மெழுகி’, மன்னிப்பு கோரியது சம்பத் வங்கி

Comments