ஹிஜாப் கழற்றச் சொன்ன விவகாரம்: சம்பவத்தை ‘பூசி மெழுகி’, மன்னிப்பு கோரியது சம்பத் வங்கி

🕔 July 3, 2020

ம்பத் வங்கியின் தெஹிவல கிளைக்குச் சென்ற முஸ்லிம் பெண் வாடிக்கையாளரிடம், அவர் அணிந்திருந்த ஹிஜாப்பை கழற்றி விட்டு உள்ளே வருமாறு, அந்தக் கிளை நிருவாகம் கூறியமை தொடர்பில், நேற்றைய தினம் சம்பத் வங்கி மன்னிப்புக் கோரி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த வங்கிக் கிளைக்கு நேற்று வியாழக்கிழமை சென்ற முஸ்லிம் பெண் வாடிக்கையாளர் ஒருவரிடம் – அவர் அணிந்திருந்த ஹிஜாப்பை கழற்றி விட்டு, உள்ளே வருமாறு வங்கிக் கிளை நிருவாகம் கூறியிருந்தது.

இதற்கு அந்த பெண் மற்றும் அவர் சார்பானோர் எதிர்ப்புத் தெரிவித்து வெளியிட்ட வீடியோ ஒன்று, நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனையடுத்து சம்பத் வங்கிக்கு எதிரான கண்டனங்களும் பாரியளவில் எழுந்தன.

இந்த நிலையில், குறித்த சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரி, சம்பத் வங்கி மும்மொழிகளிலும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் மன்னிப்புக் கோருவதாக தெரிவித்துள்ள வங்கி, இது தொடர்பில் உரிய நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவர்கள் வெளியிட்டுள்ள மன்னிப்பு கோரும் அறிக்கையில்; ‘வாடிக்கையாளரின் அடையாளம் சம்பந்தமாக நடைபெற்ற சம்பவம்’ என்று, அந்த விடயத்தைக் குறிப்பிட்டு, நடந்த விடயத்தை பூசி மெழுகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வீடியோவை, நேற்றைய தினம் புதிது செய்தித்தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்