
சஊதி அரேபியாவின் – தமாம் மத்திய சிறைச்சாலையிலுள்ள அனோஜன் சிவராசாவைச் சந்தித்து, அவரது நலம் மற்றும் தற்போதைய நிலை குறித்து விசாரித்ததாக ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இச்சிறைச்சாலை சஊதி தலைநகர் ரியாத்திலிருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
சஊதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த 27 வயதுடைய அனோஜன்; நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகத்தில் பதிவிட்ட கருத்துக்காக கைது செய்யப்பட்டார்.
இதன் காரணமாக மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள அனோஜனுக்கு – மன்னிப்பு பெற்றுத் தருவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தச் சந்திப்பின்போது, அனோஜனுடன் தூதுவர் கலந்துரையாடி, அவரது தேவைகளைக் கேட்டறிந்தார். அத்துடன், இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் – தூதரகம் வழங்கும் தூதரக மற்றும் சட்ட உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதற்கான உறுதிப்பாட்டையும் அவர் மீண்டும் தெரிவித்தார்.
நேரடித் தொடர்பை எளிதாக்கும் வகையில், தூதுவர் அஜ்வத் தனது தொடர்பு விவரங்களையும் அனோஜனுக்கு விழங்கியதாக தூதரகம் தெரிவித்தது.
சந்திப்புக்குப் பிறகு கருத்துத் தெரிவித்த தூதுவர்; அனோஜன் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், சஊதி சிறைச்சாலை அதிகாரிகள் அவரது நலனைக் கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், தமாம் மத்திய சிறைச்சாலையின் பணிப்பாளர் மற்றும் சிறைச்சாலை வைத்தியர் ஆகியோரையும் சந்தித்த அஜ்வத், இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தமைக்கும் அனோஜனுக்கு அளித்து வரும் கவனிப்பிற்கும் – அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் அனோஜன் சிவராசாவிற்கான மேன்முறையீட்டு நடவடிக்கைகளிலும் தூதரகம் உதவி வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



