தலைப்புச் செய்திகள்

உலக முட்டை தினத்தில், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்வு

– றிசாத் ஏ காதர் –

உலக முட்டை தினம் நேற்று (09) அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், அட்டாளைச்சேனை அரச கால்நடை வைத்திய அலுவலகமும் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து, கர்ப்பிணித் தாய்மார்களின் போஷாக்கு நிலையை மேம்படுத்துவதோடு – முட்டை, பால் மற்றும் இறைச்சி போன்ற விலங்கின உணவுகளின் ஊட்டச்சத்து முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தும் வகையில், சிறியளவிலான கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கங்களுடன் – விசேட விழிப்புணர்வு நிகழ்வொன்று,அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது, கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான போஷாக்கு, போஷாக்குக் குறைபாட்டைத் தடுப்பதன் அவசியம், அன்றாட உணவில் முட்டை, பால் மற்றும் இறைச்சி போன்ற ஊட்டச்சத்துமிக்க உணவுகளைச் சேர்த்துக்கொள்வதன் நன்மைகள், முட்டைகளைச் சுகாதாரமான முறையில் கையாளுதல் மற்றும் நன்கு சமைத்து உட்கொள்வதன் முக்கியத்துவம் தொடர்பாக விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

மேலும், குடும்பங்களின் போஷாக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, மேலதிக வருமானத்தையும் பெற்றுக்கொள்ளக்கூடிய சிறிய அளவிலான கோழி வளர்ப்பின் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டது. இத்தகைய முயற்சிகள் மூலம் உள்ளூர் கோழிப் பண்ணையாளர்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதுடன், சமூகத்தின் உணவுப் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல். அலாவுத்தீன், அரச கால்நடை வைத்தியர் டொக்டர் ஏ. தாயுபா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி குலகலா, அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற 25 கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் தலா 25 புதிய முட்டைகள் வழங்கப்பட்டன.

“முட்டை உள்ளிட்ட ஊட்டச்சத்துமிக்க உள்ளூர் உணவுகளை ஊக்குவிப்போம்; போஷாக்கான சமூகத்தையும் ஆரோக்கியமான எதிர்காலத்தையும் உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் இந்நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.