தலைப்புச் செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் நேற்று முன்தினம் உயிரிழந்தவரின் மனைவி, இன்று மரணம்

களுத்துறை – நாகொடப் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றிற்கு வெளியே நேற்று முன்தினம் (09) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த உணவக உரிமையாளரின் மனைவி இன்று (11) உயிரிழந்துள்ளார்.

கடந்த 09-ஆம் திகதி காலை சுமார் 7.40 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள், உணவகத்திற்கு முன்னால் இருந்த உரிமையாளர் மற்றும் அவரது மனைவி மீது – துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

உணவக உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த அவரது மனைவி நாகொட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தபோது இன்று (11) அதிகாலை உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண் 52 வயதுடையவர் என்றும், அவர் டொடங்கொடப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

கொழும்பு மத்திய பஸ் நிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பஸ்-இல் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகநபர், நாவலடிச் சந்தியில் பொலிஸார் அமைத்திருந்த சோதனைச் சாவடியில் பஸ் நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சந்தேகநபரிடமிருந்து 40 கிராம் ‘கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன்’ (ஐஸ் போதைப்பொருள்), ஒரு ஸ்மார்ட்போன் மற்றும் 06 சிம் (SIM) கார்டுகள் ஆகியவற்றையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.