அட்டாளைச்சேனை கடற்கரையில் மீனவர்களுக்கான வீதிகளை அமைக்க தீர்மானம்: உறுப்பினர் ஹமீதாவின் பிரேரணைக்கு பலன்

🕔 June 18, 2020

– கே எ ஹமீட் –

ட்டாளைச்சேனை 08ஆம் பிரிவு கடற்கரைப் பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்டு, அதிகாரிகளின் உத்தரவுக்கிணங்க அகற்றப்பட்ட மீனவர்களுக்கான வீதியை, உரிய தரப்பினரின் அனுமதியைப் பெற்று அந்த இடத்தில் அமைப்பதோடு, அதேபோன்று மேலும் சில பகுதிகளிலும் வீதிகளை நிர்மாணிப்பதற்கு அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தீர்மானிக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அறபா வட்டார உறுப்பினர் ஜெமீலா ஹமீட், இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற சபை அமர்வில் இதற்கான பிரேரணையை சமர்ப்பித்த போது, சபை ஏகமனதாக அங்கீகரித்து, தீர்மானம் நிறைவேற்றியது.

ஒலுவில் மீன்பிடி துறைமுகம் மணலால் மூடப்பட்டதன் பிற்பாடு அங்கு தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் தத்தமது பிரதேசங்களுக்கு தங்களது படகுகளை நகர்த்திக்கொண்டு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒலுவில் பிரதேசம் தவிர்ந்த பாலமுனை, அட்டாளைச்சேனை கடற்கரையின் கரைப்பகுதி மிக நீளமாகவுள்ளதால் மீனவர்கள் தங்களது படகுகளுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வதிலும், படகின் இயந்திரம் பழுதடைந்தால் அவற்றினை கரையிலிருந்து கொண்டுவருவதிலும் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

இதனால் மீனவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக அண்மையில் அரசியல்வாதிகளினால் அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவு கடற்கரையில் வீதியொன்று நிர்மாணிக்கப்படது. ஆனால், அந்த வீதியை நிர்மாணிக்கும் பொருட்டு உரிய அனுமதி பெறப்படவில்லை என கரையோரம் பேணல் திணைக்களம் தெரிவித்ததை அடுத்து, அந்த வீதி அகற்றப்பட்டது.

இந்த நிலையினைக் கருத்திற்கொண்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அறபா வட்டார உறுப்பினர் ஜெமீலா ஹமீட், இன்று நடைபெற்ற சபை அமர்வில் குறித்த வீதியினை உரிய அனுமதிகளைப் பெற்று அமைப்பதோடு, கடற்கரையில் மற்றும் சில வீதிகளை அமைக்க வேண்டுமெனத் தெரிவித்து பிரேரணை ஒன்றினை சமர்ப்பித்தார்.

குறித்த பிரேரணையை சபை ஏக மனதாக அங்கீகரித்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்