காணாமல் போன வாழ்க்கையின் வரைபடம்

🕔 May 18, 2020

– முகம்மது தம்பி மரைக்கார் –

“கொத்திருக்கோ கொத்து”
“என்ன கொத்து”
“வேப்பங் கொத்து”
“போட்டுட்டு போங்க”
“போட்டாலென்ன”
“அடிதான் கிடைக்கும்”
“அடிங்களன் பார்ப்பம்”
“அதையும் பார்ப்பம்”

ஆகக் குறைந்தது முப்பது வருடங்களுக்கு முன்னர், சிறுவர்களின் விளையாட்டின் போது இடம்பெற்ற – ராகத்துடனான உரையாடல்தான் மேலேயுள்ளது.

வட்டமாக சிறுவர்கள் கூடி நிற்பார்கள். ஒருவர் மட்டும், கையில் மரத்திலிருந்து பறித்த கொத்துடன், அந்த வட்டத்தைச் சுற்றி வருவார். அதன்போதுதான் மேலுள்ள உரையாடல் இடம்பெறும். இதன்போது, கையில் கொத்து வைத்திருப்பவர் – வட்டமாக நிற்பவர்களில் ஒருவரிடத்தில் கொத்தைப் போட்டு விட்டு ஓடுவார். யாரிடம் கொத்து விழுகிறதோ, அவர் கொத்தை எடுத்துக் கொண்டு, அதைப் போட்டவரை துரத்திப் பிடிக்க வேண்டும். அதற்குள், தன்னைத் துரத்துகின்றவர் வட்டத்தில் எங்கு நின்றாரோ, அந்த இடத்தில் வந்து கொத்தைப் போட்டவர் நின்றுவிட வேண்டும். பிறகு, கொத்தினை வைத்துக் கொண்டிருப்பவர் ‘கொத்திருக்கோ கொத்து’ என்று ஆரம்பிப்பார். வட்டத்தில் நிற்பவர்கள் ‘என்ன கொத்து’ என்று கேட்க – விளையாட்டு தொடரும்.

கிழக்கு மாகாணத்தில் – ஒரு காலத்தில் சிறுவர்களுக்குப் பிடித்ததாக இருந்த இந்த விளையாட்டு, இப்போது இல்லை. காலம் – நம்மிடமிருந்து இது போன்ற ஏராளமானவற்றினைக் களவாடி விட்டது. ஆனால், அவை குறித்து நாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

ஒரு காலத்தில் நம்மிடமிருந்த உணவுகள், விளையாட்டுகள், ஆடை வகைகள், இலக்கியங்கள் மற்றும் கலாசாரங்கள் என்று, ஏராளமானவற்றினை நாம் இழந்து விட்டோம். அந்த இழப்புக்கள் குறித்து நம்மில் அதிகமானோர் அலட்டிக் கொள்வதில்லை. இன்னொருபுறம், அந்த இழத்தலினை – நாகரீகம் என்று நம்மவர்களில் – ஒரு பெருங்கூட்டம் நம்பிக் கொண்டிருக்கிறது. நாம் இழந்தவைதான் நமது அடையாளங்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கும் நம்மவர்கள் தயாராக இல்லை.

ஒவ்வொரு இனத்துக்கும், சமூகத்துக்கும் பிரத்தியேக அடையாளங்கள் உள்ளன. அந்த அடையாளங்கள்தான், குறித்த சமூகங்களின் வரலாற்றினைப் பேசுவதற்கான ஆதாரங்களாகும். ஆனால், யாரோ ஒரு கூட்டத்தின் அடையாளங்களை, நாம் இரவலாகப் பெற்றுக் கொண்டு, அவற்றினை நமது அடையாளங்களாக நம்பிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு காலத்தில் குழுந்தைகளை உறங்கச் செய்வதற்கு தாலாட்டுப் பாடல்கள் இருந்தன. இப்போது தாலாட்டுப் பாடல்களுக்குப் பதிலாக குழந்தைகளின் கைகளில் கைத்தொலைபேசிகள் உள்ளன. அவற்றில், ‘ஜோனி… ஜோனி – யெஸ் பப்பா’ வகையறாக்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

‘ஆராரோ ஆரிவரோ
ஆராரோ ஆரிவரோ
நித்திரைக்கோ நீயழுதாய்
நேசமுள்ள என்மகனே
கத்துறத கேட்டு மனம்
கலங்கிறதே, நித்திரை செய்
நித்திரை மவுத்தாகும்
நினைவெல்லாம் அயாத்தாகும்
பத்திரமாய் என் மகனே
பக்தியுடன் நித்திரை செய்’
என்கிற தாலாட்டுப் பாடல் கேட்டு தூங்கிய குழந்தைகள் – கொடுத்து வைத்தவர்கள்.

கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் நாட்டார் பாடல் வகைகளுக்குள் இந்தத் தாலாட்டுப் பாடலும் வருகிறது. ஒரு காலத்தில் இந்தப் பாடல் கேட்டு குழந்தைகள் தூங்கினார்கள். ஆனால், இப்போதுள்ள இளம் தாய்மாருக்கு இப்படியொரு தாலாட்டுப் பாடல் இருப்பதே தெரியாது. நிலைமை அப்படி மாறி விட்டது.

நவீனமும், நாகரீகமும் என்று நாம் நம்பிக் கொண்டிருப்பவை, நமது பாரம்பரியங்களையெல்லாம் வேட்டையாடி விட்டன.

ஆகக்குறைந்தது, ஒரு காலத்தில் நமது உணவுகளில் சேர்க்கப்பட்ட மசாலா உருண்டை – எத்தனை பேரின் நினைவில் உள்ளது எனத் தெரியவில்லை. கறிக்கு சுவையும், மணமும் வழங்கும் மசாலாப் பொருட்களை அம்மியில் வைத்து அரைத்து – ஓர் உருண்டையாக எடுத்து, அதை கறிக்குள் சேர்த்த காலம், கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்னர் மறைந்து விட்டது. இப்போது நமது வீடுகளில் அம்மியே இல்லை. ஆனாலும், அந்த மசாலா உருண்டைகளின் வாசம் மட்டும் நினைவுகளில் இருக்கிறது.

நெல் வயல்களில் ‘சூடு போடுதல்’ அல்லது ‘சூடடித்தல்’ என்பது இப்போது இல்லாமலேயே போய்விட்டது. நெல் அறுவடை இயந்திரங்களின் வருகைக்குப் பிறகு ‘சூடு போடுதலை’ நாம் இழந்து விட்டோம்.

வயலில் நெற்கதிர்களை வெட்டிக் கட்டி, குவியலாக வைப்பார்கள். அதனை ஒரு காலத்தில்; மாடுகளை வைத்து மிதித்தார்கள். பின்னர் ‘ட்ரக்டர்கள்’ மூலம் மிதித்தார்கள். அதை ‘சூடடித்தல்’ என்பர். சூடடிக்கப்படும் இடத்துக்கு ‘களவெட்டி’ என்று பெயர். மிதிக்கப்பட்ட நெற்கதிர்களிலிருந்து வைக்கோலை வேறாக்கி விட்டு, நெல்லினை எடுத்து – ஆட்கள் காற்றில் தூற்றுவார்கள். நெற் கதிரிலிருந்து வைக்கோலை வேறாக்குவதற்கு நீண்ட கம்பு பயன்படுத்தப்படும். அதற்கு ‘வேலைக்காரன் கம்பு’ என்று பெயர். நீளமான அந்தக் கம்பின் முன்பகுதி சற்றே வளைந்திருக்கும்.

வயலில் சூடடிக்கும் கூலியாட்களுக்கு, வயற்காரரின் வீட்டிலிருந்துதான் உணவு செல்லும். சோற்றுடன் இறைச்சிக் கறியும், புளியாணமும்தான் சூடடிப்பவர்களுக்கான பிரதான உணவாகும். அதிகாலையில், சூடடிப்பவர்களுடன் சேர்ந்து ‘ட்ரக்டர்’களின் பெட்டிகளில் – தங்கள் வயல் வெளிகளுக்குச் செல்வதில் சிறுவர்களுக்கு அதிக விருப்பம். வீட்டில் சமைக்கப்பட்ட உணவை, சூடடிப்பவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு, வாய்க்கால் நீரைப் பருகுவதில் தனி ஆனந்தம். இப்போது, எத்தனை கோடி கொடுத்தாலும், இந்த அனுபவம் கிடைக்காது. நெல் அறுவடை செய்யும் ராட்சத இயந்திரத்திரத்தின் வருகையுடன் அந்த மகிழ்ச்சியான காலம் மறைந்து போயிற்று.

நவீன விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால், சிலவற்றினை நாம் இழந்தேயாக வேண்டியுள்ளது என்பது உண்மைதான். உதாரணமாக, நெல் அறுவடை இயந்திரங்களின் வருகைக்குப் பிறகு, ‘சூடடித்தலை’ இழந்துதான் ஆக வேண்டும். அது தவிர்க்க முடியாதது. ஆனால், நமது மூத்தோர்கள் நமக்குத் தந்த – குழந்தைகளுக்கான தாலாட்டுப் பாடல்களை, நாம் ஏன் இழந்தோம் என்பதற்குரிய – நியாயமான காரணங்களென்று எதுவும் படவில்லை.

‘மால பட்டா ஆறு மணிநேரம், வில்லு வாய்க்கட்டு தொங்கலப் பாருங்கடி…
இற்றைக்கு முன்னொரு காலமும் காணாத எஞ்சின் லைற்றொண்டிலங்குதடி
இலக்றிக் கரண்டில் மெசின் பூட்டி, அந்த எஞ்சின் லைற்றை ஸ்டாட்டாக்கி…
மூலைக்கு மூல லையிற் பூட்டி, தண்ணி தாங்கியும் ஒவ்வொண்டு வெச்சிருக்கார்…’

1951 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தின் இறக்காமல் பிரதேசத்தில் ஓட்டுத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டபோது, அதை வர்ணித்து – அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த கருதுலெப்பைப் புலவர் என்பவர் இயற்றிய கவிதையின் சில வரிகள்தான் மேலுள்ளவை.
இறக்காமம் பிரதேசத்தில் ‘பொல்லடி’யில் ஈடுபடுகின்றவர்கள், இந்தக் கவிதையை ‘பொல்லடிப் பாடல்’களாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், இப்போது ‘பொல்லடி’ என்கிற கலை வடிவம் அந்தப் பகுதியில் அருகி வரும் நிலையில் உள்ளது. பொல்லடி இல்லாமல் போகும் போது, அதனுடன் சேர்த்து பாடப்படும் – பொல்லடிப் பாடல்களும் மறைந்து விடும் அபாயம் உள்ளது.

பொல்லடி என்பது கோலாட்டத்தினை ஒத்த ஒரு கலை வடிவமாகும். கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் பாரம்பரிய கலை வடிவங்களில் பொல்லடியும் ஒன்றாகும். முன்னொரு காலத்தில் வைபவங்களுக்கு வருகின்ற அதிதிகள் பொல்லடித்து வரவேற்கப்பட்டனர். ஆனால், இப்போது – பேண்ட் வாத்தியக் குழுவினர்தான் அதிதிகளை அழைத்து வருகின்றனர். பேண்ட் வாத்தியத்தின் பேரிரைச்சலுக்குள் பொல்லடிக் கலைஞர்கள் காணாமல் போய் விட்டார்கள்.

முஸ்லிம்களின் திருமண வைபவங்கள் – ஒரு காலத்தில் தனித்த அடையாளங்களுடன் இருந்தன. குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்களின் திருமணங்கள் தனித்துவம் கொண்டவையாக இருந்தன. மணமகன் – மணமகளுக்கான உடைகள், திருமண நிகழ்வில் பயன்படுத்தப்படும் பொருட்கள், சம்பிரதாயங்கள் என்று – ஒவ்வொன்றிலும் தனித்த அடையாளங்கள் இருந்தன.

மணமகனை அழைத்துச் செல்லும் போது, பாடப்படும் ‘மாப்பிள்ளை பைத்’ பற்றி, இப்போதுள்ள இளைஞர்களுக்குத் தெரியாது. இவை அனைத்தும் தொலைந்து விட்டன. மேலைத்தேய கிறிஸ்தவர்களின் திருமண ஆடைகளைத்தான், இப்போது முஸ்லிம் மணமகனும், மணமகளும் உடுத்திக் கொள்கின்றனர். ஆனால், தமிழர்கள் தமது பாரம்பரிய திருமண முறைமையை ஓரளவாயினும் தக்க வைத்துக் கொண்டுள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

இவ்வாறு நாம் இழந்த ஒவ்வொரு விடயம் பற்றியும் ஒவ்வொரு தனிக் கட்டுரையாக எழுத முடியும்.

‘தூப்புள்’ என்று கிழக்கு மாகாணத்தில் அழைக்கப்படும் கிட்டிப்புள் விளையாட்டு, வார் மற்றும் கட்டைப்பந்து உள்ளிட்ட பல விளையாட்டுக்கள் குறித்து – நமது சிறுவர்களுக்குத் தெரியாது. இப்போதுள்ள சிறுவர்கள் – விளையாடுவதற்கு மைதானம் கூடச் செல்வதில்லை என்பது வேறு கதையாகும். அவர்களின் கணிணிகள்தான் அவர்களின் மைதானமாகும். அவற்றிலேயே அவர்கள் விளையாடிக் களைத்து விடுகின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர் ‘கிண்ணம் பழங்கள்’ இரண்டினை நண்பரொருவர் கொண்டு வந்திருந்தார். அதன் சரியான பெயர் கிண்ணை. ஆற்றங்கரை மற்றும் நீர் நிலைகளின் அருகிலுள்ள களித் தரையில் கிண்ணை மரம் வளரும். முப்பது வருடங்களுக்கு முன்னர் ‘கிண்ணம் பழம்’ என்பது மிகச் சாதாரணமாகக் கிடைக்கக் கூடியதாக இருந்தது. தேங்காய்பாலை பழைய சோற்றில் ஊற்றி, அதில் கிண்ணம் பழத்தைப் பிசைந்து, தேவையான அளவு சீனி போட்டு சாப்பிட்டால் – ருசி தூக்கும். கிண்ணம் பழத்தின் புளிப்புச் சுவையும், அதன் மணமும் மனசை விட்டு மாற நாளாகும்.

ஆனால், இப்போது கிண்ணம் பழங்கள் கிடைப்பதே அரிதாக உள்ளது. ஆறுகளையும், நீர் நிலைகளையும் சட்டவிரோதமாக நிரப்புகின்றவர்களால், அங்கு வளரும் கிண்ணை மரங்களும் அழிக்கப்பட்டு விட்டன. இப்போதுள்ள சிறுவர்களுக்கு கிண்ணம் பழம் என்றால் என்ன என்று தெரியாது. இன்னும் சில காலம் கழியும்போது, புகைப்படங்களில் மட்டுமே கிண்ணம் பழங்களை நமது குழந்தைகள் ருசிக்க நேரிடும்.

இப்படி நமது வாழ்க்கையிலிருந்து ஒவ்வொன்றாய் காணாமல் போகத் தொடங்கியது. இப்போது நமது வாழ்க்கையும் – அதன் அடையாளங்களும் காணாமல் போய் விட்டன.

நாம் வாழுகின்ற வாழ்க்கை நம்முடையதல்ல. நமது வாழ்க்கை காணாமல்போய் கன காலமாகி விட்டது. காணாமல் போன நமது வாழ்க்கையை, இனி – முழுவதுமாகக் கண்டெடுப்பதென்பது சாத்தியமில்லை. இருப்பதையாவது காப்பாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதுவே – பெருங் காரியமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்