காத்தான்குடியில் கைத்தொலைபேசி திருடியவர் மற்றும் அதனைக் கொள்வனவு செய்த இருவருக்கும் விளக்க மறியல்

🕔 April 26, 2020

– முன்ஸிப் –

காத்தான்குடியில் மதரஸா கட்டட நிர்மாண வேலைகள் நடக்கும் இடமொன்றில் நுழைந்து பெறுமதியான கைத் தொலைபேசி மற்றும் பணம் உள்ளிட்ட ஆவணங்கள் கொண்ட ‘பேர்ஸ்’ ஆகியவற்றை திருடிய நபரையும், அந்த நபரிடமிருந்து குறித்த கைத் தொலைபேசியை கொள்வனவு செய்த நபரையும் எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

காத்தான்குடி – சேர் ராசிக் பரீட் வீதியில் நிர்மாணிக்கப்படும் மதரஸா கட்டடமொன்றுக்குள் புகுந்து, அங்கு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவரின் 60 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம், அடையாள அட்டைகள், பணம் உள்ளடங்கிய ‘பேர்ஸ்’ ஆகியவற்றை கடந்த 21ஆம் திகதி நபரொருவர் திருடிச் சென்றிருந்தார்.

குறித்த நபர் மேற்படி இடத்துக்கு வந்திருந்த காட்சிகள், அங்கிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகி இருந்தன.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொருட்களைப் பறிகொடுத்தவர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையில், திருட்டில் ஈடுபட்ட நபர் குறித்து, காத்தான்குடி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, நிலைய பொறுப்பதிகாரியின் நெறிப்படுத்தலுக்கு இணங்க, குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி முஸ்தபா குழுவினர் சந்தேக நபரை மட்டக்களப்பு – திருப்பெருந்துறைப் பகுதியில் வைத்து வெள்ளிக்கிழமையன்று கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர் திருடிய 60 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத் தொலைபேசியை செங்கலடியிலுள்ள தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் 08 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்தமை தெரியவந்தது.

இதனையடுத்து திருட்டு கைத் தொலைபேசியை கொள்வனவு செய்த நபரும் கைது செய்யப்பட்டார்.

பொருட்களை திருடிய நபரையும், கைத்தொலைபேசியை கொள்வனவு செய்தவவரையும் நேற்றைய தினம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் காத்தான்குடி பொலிஸார் ஆஜர் செய்த போது, அவர்கள் இருவரையும் எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்