சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி பிரகடனம் ரத்து: அமைச்சர் பந்துல அறிவிப்பு

🕔 February 20, 2020

சாய்ந்தமருது பிரதேசத்துக்கு நகர சபையை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன இன்று வியாழக்கிழமை அறிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோது, இதனைக் கூறினார்.

சாய்ந்தமருதுக்கான நகர சபையை வழங்குவது தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கிகாரம் கிடைக்காமையினால், சாய்ந்தமருதை நகர சபையாகப் பிரகடனப் படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல இதன்போது தெரிவித்தார்.

“நாடு முழுவதுமுள்ள தனியான உள்ளூராட்சி மன்ற உருவாக்க கோரிக்கைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, ஏனய அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கி, பொதுவானதொரு தீர்மானத்துக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில், சாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்துக்கான வர்த்தமானி அறிவித்தலை அமைச்சரவை செல்லுபடியற்றதாக்கி உள்ளது” என்றும் அவர் இதன்போது கூறினார்.

கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருதைப் பிரித்து, அதற்கென நகர சபையொன்றை வழங்கும் வர்த்தமானி அறிவித்தல், கடந்த 14ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் சர்ச்சை; வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்படுமா?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்