சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் சர்ச்சை; வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்படுமா?

🕔 February 20, 2020

சாய்ந்தமருது நகரசபை பிரகடனம் செய்யப்பட்டமை குறித்து நேற்று புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை எழுந்ததாகவும், அதனையடுத்து, குறித்த பிரகடனம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிக்கை ரத்துச் செய்யப்படும் அபாய நிலை தோன்றியுள்ளதாகவும் ‘தமிழன்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் சாய்ந்தமருது நகர சபையைப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தமையே தனக்கு தெரியாதென அமைச்சரவையில் பொதுநிர்வாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் கையை விரித்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று அமைச்சரவை கூடியது. இதன்போது இந்த விடயத்தை பிரஸ்தாபித்த அமைச்சர் விமல் வீரவன்ச, சாய்ந்தமருது நகரசபை பிரகடனமானது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.

அது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தையும் சாய்ந்தமருது நகரசபை விடயத்தையும் சேர்த்து தீர்வைக்கண்டு ஒரே வர்த்தமானியில் உள்ளடக்கி வெளியிட்டிருந்தால் இனங்களுக்கிடையில் சர்ச்சை எழுந்திருக்காதென சுட்டிக்காட்டினார்.

இதன்போது பொதுநிர்வாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோனிடம் அமைச்சர்கள் வினவியபோது, இப்படியொரு வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தது தனக்கே தெரியாதெனவும் அது குறித்து தாம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சாய்ந்தமருது நகரசபை தொடர்பில் ஏற்கனவே வெளிவந்த வர்த்தமானி ரத்துச் செய்யப்படுமென தெரிகிறது’ என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: சாய்ந்தமருது நகர சபை உதயம்; வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்