சாய்ந்தமருது நகர சபை உதயம்; வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

🕔 February 15, 2020

– நூருல் ஹுதா உமர் –

சாய்ந்தமருதுக்கான புதிய நகர சபையை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளியானது.

2162/50 இலக்கத்தையுடைய மேற்படி வர்த்தமானி அறிவித்தலின் படி, 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி சாய்ந்தமருது நகர சபை அமுலுக்கு வருகிறது.

1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 04 உள்ளூராட்சி சபைகள் காணப்பட்ட நிலையில், அவை முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசா கொண்டுவந்த பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டன.

அதனை மீண்டும் பிரித்து சாய்ந்தமருது பகுதியை ஒரு நகர சபையாக உருவாக்கி தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில், சாய்ந்தமருது பள்ளிவாசலின் ஆதரவுடன் சுயேட்சைக் குழுவொன்று தோடம்பழம் சின்னத்தில் களமிறங்கியது. அதில் சாய்ந்தமருதில் உள்ள 06 வட்டாரங்களையும் அந்தக் குழு வென்றதற்கிணங்க விகிதாசார முறையில் மொத்தம் 09 உறுப்பினர்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் ஆகியோர் சாய்ந்தமருதுக்கு நகர சபை தருவதாக பகிரங்கமாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி இருந்தனர்.

அதன் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக உழைத்தனர். இதன்போது, சாய்ந்தமருதுக்கான நகர சபையை வழங்குவதாக அப்போது தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதியளித்தார்.

இந்த நிலையில், சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால கோரிக்கையை நன்கு அறிந்த தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ்; சாய்ந்தமருது நகர சபையை உருவாக்குவதற்கான தடைகள் அனைத்தினையும் தாண்டி, தனது அயராத முயற்சியினால், அந்தப் பிரதேசத்துக்கான நகரசபையை பெற்றுக் கொடுப்பதற்காக பாடுபட்டார்.

சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகவுள்ளதை அறிந்து கொண்ட அப்பிரதேச மக்கள், நேற்று பிற்பகல் தொடகம், பட்டாசு கொழுத்தி, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

Comments