ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு, அமெரிக்காவுக்குள் நுழையத் தடை

🕔 February 15, 2020

ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு நிறைவு பெற்றத் தருணத்தில், இலங்கை ராணுவத்தின் 58ஆவது பிரிவினரால் மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது.

அந்த ராணுவப் பிரிவுக்கு அப்போது ஷவேந்திர சில்வாவே தலைமை தாங்கினார்.

குறித்த காலப் பகுதியில் மனித உரிமை மீறல்கள், சட்டவிரோத கொலைகள் இடம்பெற்றுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்திருப்பதனால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மனித உரிமை மீறல்கள் அல்லது குறிப்பிடத்தக்க ஊழல்கள் இடம்பெற்றுள்ளமை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளருக்கு நம்பகரமான தகவல்கள் கிடைத்திருப்பதனால், அந்த நபர்களும், அவர்களின் உறுப்பினர்களும் அமெரிக்காவிற்குள் நுழைய தகுதி அற்றவர்கள் என அமெரிக்கா கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளினால் ஆவணப்படுத்தப்பட்ட ஷவேந்திர சில்வா மீதான மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு தீவிரமானவை மற்றும் நம்பகரமானவை என அந்த திணைக்களத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கும் தண்டனை விதிக்கப்படுவது குறித்து தமது அக்கறை, பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கான தமது ஆதரவு மனித உரிமைகளை ஊக்குவித்தல், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், மனித உரிமைகளை ஊக்குவித்தல், பாதுகாப்புத்துறை சீர்திருத்தல், நீதி மற்றும் நல்லிணக்கம் மற்றும் அதன் பிற கடமைகளை ஆதரித்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை தாம் கேட்டுக்கொள்வதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துடனான தமது ஒத்துழைப்பு மற்றும் இலங்கை மக்களுடனான தாம் பகிர்ந்து கொள்ளும் நீண்ட கால ஜனநாயக பாரம்பரியத்தை மதிப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், வளர்ந்துவரும் அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கும் அதன் பாதுகாப்பு படைகளை மாற்றியமைப்பதற்கும் தாம் உறுதியுடன் உள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சி, உதவி மற்றும் ஈடுபாடுகளின் அடிப்படை அங்கமான மனித உரிமைக்கான மரியாதை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்