கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த சீனப்பெண்; குணமடைந்த நிலையில் நாடு திரும்பினார்

🕔 February 19, 2020

கொவிட் -19 எனப் பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சீனப்பெண் முழுவதுமாக குணமடைந்து இன்று புதன்கிழமை முற்பகல் வைத்தியசாலையில் இருந்து வௌியேறி தனது சொந்த நாடான சீனாவிற்கு பயணித்தார்.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

சீனாவிலிருந்து ஜனவரி 19ஆம் திகதியன்று இலங்கை வந்திருந்த மேற்படி பெண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி ஏற்பட்ட காய்ச்சலை அடுத்து, அவர் 26ஆம் திகதி தொற்று நோயியல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவரின் இரத்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே கொரோனாவைரஸ் தாக்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

40 வயதுடைய மேற்படி பெண்ணுக்கு சுமார் ஒரு மாதம் சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர், அவர் இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய நிலையில் நாடு திரும்பினார்.

இவர் இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வந்திருந்த நிலையில் இலங்கையின் பல்வேறு இடங்களுக்கும் சென்றிருந்தார். இவருடன் வந்த குழுவினர் ஏற்கனவே நாட்டை விட்டு சென்று விட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்