தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றியால் எழுதிய இரண்டு நூல்கள்

🕔 February 4, 2020

– அஹமட் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எல்.எம். றியால் எழுதிய இரண்டு நூல்கள் அண்மையில் வெளியாகியுள்ளன.

விமர்சன சிந்தனையும் விஞ்ஞான முறைகளும் – 01 மற்றும் தொழில் வழிகாட்டல் ஓர் அறிமுகம் என்பவை மேற்படி நூல்களாகும்.

‘விமர்சன சிந்தனையும் விஞ்ஞான முறைகளும் – 01’ எனும் நூல், 180 பக்கங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

இளங்கலை மற்றும் பட்டதாரி மட்டங்களில் விமர்சன சிந்தனை மற்றும் விஞ்ஞான முறைகள் குறித்த விளக்கங்களை இந்நூல் விவரிக்கின்றது.

சிந்தனைகள், விமர்சன சிந்தனை, அர்த்தம் பற்றிய பகுப்பாய்வு, வாதங்களின் தன்மை, அளவையியல் போலிகள், விஞ்ஞான அறிவு, மூலோபாய சிந்தனை மற்றும் படைப்பாற்றல், உண்மைகளும் ஒழுக்க பெறுமானங்களும் ஆகிய தலைப்புகளில் ஆர்வமுள்ள வாசகர்களுக்கு, ஒருங்கிணைந்த தன்னிறைவான ஆய்வு வழிகாட்டியாகவும் இந்த நூல் அமையும்.

நூலின் விலை – 600 ரூபாய்.

தொழில் வழிகாட்டல் ஓர் அறிமுகம்

தொழில் வழி காட்டல் ஒழுங்காக முன்னெடுக்கப்படாத போது, மனிதனிடத்தில் தாழ்வுச் சிக்கல், விரக்தி, வெறுப்பு, மன அழுத்தம் போன்றன ஏற்பட்டு தற்கொலைகள், சமூக சீரழிவுகள், பிறழ்வு நடத்தைகள், சமூக முரண்பாடுகள், இளைஞர்கள் தங்களுக்கு பொருத்தமான தொழில்களை தெரிவுசெய்து கொள்ள முடியாத நிலை போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகள் அதிகரிக்கக் காரணமாகின்றன.

வழிகாட்டுதல் தொடர்பான கருத்துக்களையும், எண்ணக் கருக்களையும் அறிமுகம் செய்வதாக இந்நூல் அமைந்துள்ளது.

154 பக்கத்தில் வெளியாகியுள்ள ‘தொழில் வழிகாட்டல் ஓர் அறிமுகம்’ எனும் இந்த நூலின் விலை 500 ரூபாய்.

கலாநிதி றியால் எழுதிய ஏனைய நூல்கள்

இதற்கு முன்னரும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றியால் மேலும் 09 நூல்களை எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அவற்றின் விவரம் வருமாறு;

[01] இஸ்லாமிய விஞ்ஞானங்களின் தோற்றம், (The Origins of Islamic Science).

[02] மனித உரிமைகள்: தோற்றமும் வளர்ச்சியும், (Human Rights: The Origin and Development).

[03] பெறுமானங்கள், (Values).

[04] விஞ்ஞான முறைகள், மெய்யியல் உளவியல் உளவளத்துணை பிரிவு.

[05] சமீபகால பிராந்திய மெய்யியல் போக்குகள் , (Recent Trends in Continental Philosophy).

[06] சமாதானம் வன்முறை பற்றிய மெய்யியல், (Philosophy of Peace & Violence).

[07] ஒழுக்கப் பிரச்சினைகளும் சமூகநீதியும், (Moral Issues and Social Justice).

[08] அரசியல் மெய்யியல் மற்றும் மனித உரிமைகள், (Political Philosophy and Human Rights).

[09] உளவியல் மூலக்கோட்பாடுகள், (Psychology: Theories).

Comments