முட்டுச் சந்தியில், முஸ்லிம் கட்சிகள்

🕔 February 4, 2020

– முகம்மது தம்பி மரைக்கார் –

நாடாளுமன்றத் தேர்தலொன்றுக்கான முன் ஆயத்தங்களில், அரசியல் கட்சிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளன.   

இவற்றில், வேட்பாளர்களை இனங்காணும் நடவடிக்கை என்பது முக்கியமானதாகும்.   

தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை, யாருக்கெல்லாம் வழங்குவது என்பது குறித்தும், யாருக்கெல்லாம் வழங்கக் கூடாது என்பது பற்றியும் தீர்மானங்களை எடுப்பதென்பது, கட்சித் தலைவர்களுக்குப் பெரும் அவஸ்தையான விடயமாகும்.  

இந்த நிலையில், தற்போது கட்சி விட்டுக் கட்சி மாறும் படலமும் ஆரம்பித்துள்ளது. இந்தக் கட்சியில் இருந்தால், நமது அரசியல் ‘படுத்துவிடும்’ என்கிற முடிவுக்கு வந்துள்ள சிலர், மிக நீண்ட காலமாகத் தாம் உறுப்பினர்களாக இருந்து வந்த கட்சிகளிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன.  

இந்தநிலையில், சிறுபான்மைக் கட்சிகள் கூட்டணியமைத்துப் போட்டியிடுவதா, தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து முடிவெடுப்பதிலும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.  

யார், எந்தப் பக்கம்?  

குறிப்பாக, முஸ்லிம் கட்சிகளுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தல் பெரும் சவாலாகவே இருக்கப் போகிறது. தற்போது, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்தே, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நிலையில் உள்ளன.  

மறுபுறமாக, அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், பஷீர் சேகுதாவூத் தலைமையிலான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள், பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்தே, களமிறங்கும் நிலைப்பாட்டில் இருக்கின்றன.  

இருந்த போதும், முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் அனைத்து மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைத்துப் போட்டியிடுமா என்பதிலும் கேள்விகள் உள்ளன. 

உதாரணமாக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனித்துப் போட்டியிடலாம் என நம்பப்படுகிறது.  

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், அம்பாறை மாவட்டத்துக்கு வந்திருந்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக அறிய முடிகிறது.  

நம்பிக்கையும் சூழ்நிலையும்  

கடந்த பொதுத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் தனது மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சுமார் 32 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தது. 

இந்த நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால், சுமார் 50 ஆயிரம் வாக்குகளைப் பெறலாம் என்று, மக்கள் காங்கிரஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.  

ஆனால், இந்த நம்பிக்கை சாத்தியமாகுமா என்கிற கேள்வியும் உள்ளது. கடந்த பொதுத் தேர்தலில், மக்கள் காங்கிரஸுக்குக் கிடைத்த 32 ஆயிரம் வாக்குகளில் கணிசமானவை, அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸுக்கு உரித்தானவை ஆகும்.   

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், முஸ்லிம் மக்களில் மிகப் பெரும்பான்மையானோர், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக வாக்களித்த நிலையில், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்,  மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவளித்தார்.   

இதனால், அடுத்து வந்த பொதுத் தேர்தலில், அதாவுல்லாஹ்வின் ஆதரவாளர்களே, அவருக்கு வாக்களிக்கவில்லை. அவர்கள், அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட மக்கள் காங்கிரஸுக்குத் தமது வாக்குகளை வழங்கினார்கள் என்பது வெளிப்படையான உண்மையாகும்.   

ஆனால், இப்போது நிலைவரம் வேறாக உள்ளது. கடந்த நல்லாட்சியாளர்கள் மீது, முஸ்லிம்களுக்குப் பரந்துபட்ட வெறுப்பு உள்ளது. மேலும், மஹிந்த ராஜபக்‌ஷ மீதிருந்த கசப்பும் முஸ்லிம்களிடையே, இப்போது குறைந்து போயுள்ளது.   

எனவே, ராஜபக்‌ஷ தரப்புடன் கூட்டணியமைத்து அதாவுல்லாஹ் போட்டியிட்டாலும், அவரின் ஆதரவாளர்கள் இம்முறை அதாவுல்லாஹ்வுக்கு வாக்களிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன.   

மேலும், எப்போதும் அதிகாரத்தின் பக்கமாக, மக்களில் ஒரு சாரார் சாயும் நிலையும் இருப்பதால், அவ்வாறான முஸ்லிம் வாக்காளர்கள், எதிர்வரும் பொதுத் தேர்தலில், அதாவுல்லாஹ்வுக்கு வாக்களிக்கக் கூடும்.  

எனவே, கடந்த முறை அம்பாறை மாவட்டத்தில், மக்கள் காங்கிரஸ் பெற்றுக் கொண்ட 32 ஆயிரம் வாக்குகளில் கணிசமானதொரு தொகை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸுக்குக் கிடைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதால், இம்முறை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு, அம்பாறை மாவட்டத்தில் 50 ஆயிரம் வாக்குகளை எப்படிப் பெறும் என்கிற கேள்வியும் உள்ளது.  

அம்பாறை மாவட்டத்தில், மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும்போது, மக்கள் ஆதரவுள்ள பிரபல்யமான வேட்பாளர்களைக் களமிறக்குவதன் மூலமாகவே, அவர்கள் எதிர்பார்க்கும் வாக்குகளின் இலக்கை நோக்கி நகர முடியும்.   

ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில், பொதுத் தேர்தலொன்றில் போட்டியிடும் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவொன்று, 10 வேட்பாளர்களைக் களமிறக்க வேண்டும். ஆனால், ஒரு கட்சி அல்லது சுயேட்சைக் குழுவொன்று, ‘முத்தான’ 10 வேட்பாளர்களைத் தேடிப்பிடிப்பதென்பது சமானியமான காரியமல்ல.  

முஸ்லிம் காங்கிரஸ் எதிர்நோக்கவுள்ள சவால்கள்  

மறுபுறமாக, முஸ்லிம் காங்கிரஸுக்கும் தனது அடித்தள ஆதரவுத் தளமான அம்பாறை மாவட்டத்தில், எவ்வாறு போட்டியிடுவது என்பதில் சிக்கல்கள் உள்ளன.   

அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் அதுவே, அந்தக் கட்சிக்கு நல்லது என்றும், முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்திருக்கிறார். அப்போதுதான்,  இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையாவது முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொள்வதற்கான சாத்தியங்கள் உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.  

கடந்த பொதுத் தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸில் வெற்றி பெற்ற மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது அம்பாறை மாவட்டத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  எதிர்வரும் பொதுத் தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடுவதற்குத் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாகப் பலர் ஆர்வத்துடன் உள்ளனர். 

ஆனால், அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன், முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியமைத்துப் போட்டியிட்டால், தற்போதைய தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான நஸீர் போன்றோருக்கு, வேட்பாளர் ஆசனம் கிடைக்குமா என்கிற கேள்வியும் உள்ளது.   

எனவேதான், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என, நஸீர் போன்றோர் விரும்புகின்றனர். ஆனால், அதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன.   

எதிர்வரும் பொதுத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில், அநேகமாக முஸ்லிம் காங்கிரஸ், கூட்டணி அமைத்தே போட்டியிடும் என்பதை, அந்தக் கட்சிக்குள் இருக்கும் பலர் அனுமானித்துள்ளனர்.   

அவ்வாறு போட்டியிட்டால், தனக்கு வேட்பாளர் ஆசனம் கிடைக்காது என்பதை, இப்போதே கணித்துக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினரும் அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எல்.எம். மாஹிர், முஸ்லிம் காங்கிரஸிருந்து விலகுவதற்கான தனது தீர்மானத்தைச் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்துள்ளார். 

சம்மாந்துறை என்பது, ஒரு காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை.   

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர்,  சம்மாந்துறையைச் சேர்ந்தவராக இருக்கின்ற போதிலும், சம்மாந்துறைப் பிரதேச சபையைக் கூட, இம்முறை முஸ்லிம் காங்கிரஸால் கைப்பற்ற முடியவில்லை என்பதுதான் அங்குள்ள நிலைவரமாகும்.   

இவ்வாறான சூழ்நிலையில், அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவர், முஸ்லிம் காங்கிரஸை விட்டுப் பிரிந்து செல்வது, அந்தக் கட்சிக்கு, சம்மாந்துறையில் இன்னும் வீழ்ச்சியையே ஏற்படுத்தும் என, அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.  

முஸ்லிம் காங்கிரஸிருந்து வெளியேறியுள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர், எந்தக் கட்சியில் இணைவார் என்கிற கேள்வியும் மக்களிடம் உள்ளது. 

அநேகமாக, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸில், அவர் இணைவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக அறிய முடிகிறது.  

தேர்தலில் களமிறங்கப்போகும் நிர்வாக சேவை அதிகாரி  

இந்த நிலையில், அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவரும், கைத்தொழில், ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகக் கடமையாற்றியவருமான ஏ.எல்.எம். சலீம், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளமை, அந்த மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்கள் மத்தியில், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பொதுத் தேர்தலில் போட்டியிடுதவற்காக, தனது சேவையிலிருந்து சுயவிருப்பில் வெள்ளிக்கிழமை (31) சலீம் ஓய்வு பெற்றுள்ளார்.  

இந்த நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில், தமது ஊர் சார்பாக ஏ.எல்.எம். சலீம் களமிறங்குவார் என்று, சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் ஏற்கெனவே அறிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.   

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவளிப்பதாக, சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் அறிவித்திருந்தது. 

எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தலில் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலின் ஆதரவுடன் களமிறங்கும் சலீம், பொதுஜன பெரமுன கூட்டணி சார்பாகவே போட்டியிடுவார் என நம்பப்படுகிறது.  

ஐ.தே.கட்சி: பிரச்சினைகள் முடிந்து விட்டனவா?  

இவை ஒருபுறமிருக்க, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிப்பதாக, ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. 

மேலும், பொதுத் தேர்தலில் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும், முடிவுக்கு வந்து விட்டன என்று நினைத்து விட முடியாது.  

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், வேட்பாளர் ஆசனங்களைப் பங்கிடும் போது, சஜித், தனது அணியினருக்கு முன்னுரிமை வழங்குவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்பதையும் மறுத்து விட முடியாது. 

அப்படி நடந்தால், சஜித் அணியுடன் ரணில் தரப்பினர், மீண்டும் முட்டி மோதும் நிலைவரம் நிச்சயமாக எழும்.   

அந்த நிலைவரமானது, ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமன்றி, அந்தக் கட்சியுடன் கூட்டு வைத்திருக்கும் கட்சிகளுக்கும் பாதகமான சூழ்நிலையையே ஏற்படுத்தும்.  

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொள்ளும் சிறுபான்மைக் கட்சிகள், இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேரம் பேசி, கோரிக்கைகள் எவற்றையும் முன்வைக்க முடியுமா என்கிற கேள்விகளும் உள்ளன.   

முஸ்லிம் காங்கிரஸ்,  மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இப்போதைய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டால், கூட்டுச் சேர்வதற்கு வேறு தெரிவுகள் இல்லை. 

அநேகமான, மாவட்டங்களில் சிங்களப் பெருந் தேசியக் கட்சியொன்றுடன் இணைந்து, பொதுத் தேர்தலில் போட்டியிடுவதுதான் முஸ்லிம் காங்கிரஸ்,    மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு சாதகமாக அமையும்.  

 அதனால், கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியிடம் பேரம் பேசியது போன்று, இம்முறை அந்தக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் முஸ்லிம் கட்சிகளால் பேரம் பேச முடியாது என்பதுதான் நிலைவரமாக உள்ளது.  

‘முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுத்துத் தருவோம்’ என்கிற கோசத்துடன், அரசியல் செயற்பாட்டில் ஈடுபடத் தொடங்கிய முஸ்லிம் கட்சிகளுக்கு, இன்றைய நிலையில், தாம் கூட்டணி வைத்துக் கொள்ளும் சிங்களப் பெருந்தேசியக் கட்சியுடன் பேரம் பேசவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலை, மிகவும் கவலைக்குரியதொரு விடயமாகும்.  

தங்களின் பேரம் பேசும் சக்தியை, முஸ்லிம் கட்சிகள் இழந்து நிற்பதற்கு, அந்தக் கட்சிகளின் அரசியல் செயற்பாடுகள்தான் காரணமாகவும் அமைந்துள்ளன.     

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (04 பெப்ரவரி 2020)

Comments