முஸ்லிம் காங்கிரஸிருந்து வெளியேறுகிறார் மாஹிர்; தனியொருவரின் ஆதிக்கத்தின் கீழ், கட்சி வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு

🕔 January 31, 2020

– முன்ஸிப் –

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறுவதற்கு தான் தீர்மானித்துள்ளதாக, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எல்.எம். மாஹிர் – ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் – தனியொருவரின் ஆதிக்கத்தின் கீழ் வந்துள்ளமையே, தான் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறுவதற்கான முடிவை எடுக்கக் காரணம் எனவும் அவர் கூறினார்.

தான் தொடர்ச்சியாக கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டு வருவதாகவும், தனக்கான அரசியல் வாய்ப்புகளை வழங்காமல் தலைவர் ரஊப் ஹக்கீம் இருந்து வந்தமையும், தன்மை ஏமாற்றமடையச் செய்துள்ளதாக மாஹிர் இதன் போது கவலை தெரிவித்தார்.

சம்மாந்துறையைச் சேர்ந்தவரும் முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூருக்கே, முஸ்லிம் காங்கிரஸின் அனைத்து அரசியல் வாய்ப்புகளும் வழங்கப்படுவதாகத் தெரிவித்த மாஹிர்; நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூருக்கு கிடைக்கப்பெற்ற அரசியல் அதிகாரங்களைக் கொண்டு, மு.காங்கிரஸ் தலைவரின் வசமிருந்த நகர அபிவிருத்தி அமைச்சிலிருந்து ஒரு சதத்தையேனும் சம்மாந்துறைக்கு மன்சூர் கொண்டுவரவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

“கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை எனக்கு வழங்குமாறு கட்சித் தலைவரிடம் நான் கேட்டேன். அது கிடைக்கவில்லை.

கிழக்கு மாகாண சபையில் அமைச்சராக இருந்த மன்சூருக்கே நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, மாகாண சபையில் மன்சூர் வகித்த அமைச்சர் பதவியை சம்மாந்துறை சார்பாக எனக்கு வழங்குமாறு கட்சித் தலைவரிடம் கேட்டேன். ஆனால், அதையும் அவர் வழங்கவில்லை.

சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலின் போதும், என்னை முதன்மை வேட்பாளராக கட்சித் தலைவர் அறிவிப்பார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதையும் அவர் செய்யாமல் ஏமாற்றி விட்டார்.

இந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் சமகால நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற வகையில் மன்சூருக்கே போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படும்.

அப்போதும் அவருக்காகவே நான் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு பகடைக்காயாக தொடர்ந்தும் இருக்க முடியாது” என்றும் மாஹிர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்