அட்டாளைச்சேனை பிரதேச செயலக விவகாரம்: அஸ்லம் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில், சாட்சியங்கள் பதிவு

🕔 January 22, 2020

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றிய ஏ.எல்.எம். அஸ்லம் என்பவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரி, நேற்று செவ்வாய்கிழமை முறைப்பாட்டாளர்கள் மற்றும் சாட்சிகளிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்டார்.

அட்டாளைச்சேனை பிரதேச செலயகத்தில் வாக்கு மூலம் பெறும் இந்த நடவடிக்கை இடம்பெற்றது.

மேற்படி அஸ்லம் மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரியாக, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தரவுக்கிணங்க, உஹன பிரதேச செயலாளர் ஏ.எம்.ஏ. குமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச நிதியைக் கொண்டு ஏ.எல்.எம். அஸ்லம் என்பவர் தனது நெற்காணிக்கு மணல் இட்டு நிரப்பியமை, வீட்டுக் கூரை அமைப்பதற்காக பயனாளிக்கு வழங்கிய அரச பணத்தை மீளப் பெற்றுக் கொண்டு, அதனை பிரதேச செயலகத்தின் நிதிப் பிரிவில் ஒப்படைக்காமல் பல மாதங்களாக தன் வசம் வைத்திருந்தமை, வீதிகள் அமைப்பதில் மோசடி செய்தமை, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தனது தேவைக்கேற்றவாறு தனக்கு அதிகாரம் இல்லாத நிலையிலும் திட்டமிடல் பிரிவிலுள்ள சிலருக்கு உள்ளக இடமாற்றம் வழங்கியமை போன்ற பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் இதன்போது விசாரணை அதிகாரியிடம் சாட்சியமளிக்கப்பட்டது.

இதன்போது அட்டாளைச்சேனை பிரதேச செலயகத்திலுள்ள பல உத்தியோகத்தர்கள் தானாக முன்வந்து, அஸ்லம் மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் சாட்சியமளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராக் கடமையாற்றி வந்த அஸ்லம், கடந்த மாதமளவில் அரசாங்க அதிபரின் உத்தரவுக்கிணங்க அம்பாறை மாவட்ட செயலகத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

அங்கு எதுவித பொறுப்பும் வழங்கப்படாத நிலையில், மாவட்ட செயலகத்துக்கு அஸ்லம் கடமைக்குச் சென்று வருவதாகத் தெரியவருகிறது.

தொடர்பான செய்தி: நிதி மோசடியில் சிக்கிய அஸ்லத்தைக் காப்பாற்ற, லியாக்கத் அலி முயற்சிக்கிறாரா: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடப்பது என்ன?

Comments