நிதி மோசடியில் சிக்கிய அஸ்லத்தைக் காப்பாற்ற, லியாக்கத் அலி முயற்சிக்கிறாரா: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடப்பது என்ன?

🕔 December 25, 2019

– அஹமட் –

ம்பெரலிய திட்டத்தின் கீழ் வீட்டுக் கூரை அமைப்பதற்காக பயனாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட 60 ஆயிரம் ரூபாவை வலுக்கட்டாயமாகத் திரும்பப் பெற்றுக் கொண்டு, அதனை இரண்டரை மாதங்களாக தன்வசம் சட்டவிரோதமாக வைத்திருந்து விட்டு, பின்னர் அவ்விவகாரம் அம்பலமானதும் அந்தப் பணத்தை கடந்த 13ஆம் திகதி, அட்டாளைச்சேனை பிரதேச செயலக நிதிப் பிரிவில் செலுத்திய, அங்கு உதவித் திட்டப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ஏ.எல். அஸ்லம் என்பவர், இதுவரை அந்தப் பணத்தை தன்வசம் வைத்திருந்தமைக்கான காரணம் என்ன என்பது குறித்து, பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலம் விளக்கமளிக்கவில்லை என தெரியவருகிறது.

அட்டாளைச்சேனை பிரதேச செலயகத்தின் திட்டமிடல் பிரிவினால், அட்டாளைச்சேனை 03ஆம் பிரிவில் வசித்த ஏ.ஆர். இஸ்மாயில் என்பவருக்கு கம்பெரலிய திட்டத்தின் கீழ், வீட்டுக் கூரை அமைப்பதற்காக வழங்கப்பட்ட 60 ஆயிரம் ரூபா நிதியை, அங்கு உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த ஏ.எல். அஸ்லம் என்பவர் கடந்த ஒக்டோபர் மாதம் வற்புறுத்தலாக மீளப்பெற்றிருந்தார்.

ஆயினும், அந்தப் பணத்தை பிரதேச செயலகத்தின் நிதிப் பிரிவில் ஒப்படைக்காமல், அவர் கடந்த இரண்டரை மாதங்களாக தன்வசம் வைத்திருந்தார்.

இந்த விவகாரத்தை ‘புதிது’ செய்தித்தளம் அம்பலப்படுத்தியதை அடுத்து, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த – சமூக ஆர்வலர்கள் குழுவொன்று முறையிட்டது.

பின்னர் லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிலும் இந்த விவகாரம் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், ‘இவ்வாறான ஒரு தொகைப்பணம் உங்கள் வசம் இருக்குமாயின், அதனை நிதிப் பிரிவில் மீளச் செலுத்துங்கள்’ என்று, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலுக்கிணங்க, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லத்துக்கு எழுத்து மூலம் பிரதேச செயலாளர் கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து – தான் சட்டவிரோதமாக இரண்டரை மாதங்கள் மறைத்து வைத்திருந்த 60 ஆயிரம் ரூபா பணத்தை, உதவித் திட்டப் பணிப்பாளராக பணியாற்றிய ஏ.எல். அஸ்லம், கடந்த 13ஆம் திகதியன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் நிதிப் பிரிவில் செலுத்தினார்.

ஆனால், இவ்வாறு பணத்தை இரண்டரை மாதங்கள் தன்வசம் சட்டவிரோதமாக வைத்திருந்தமைக்கான காரணத்தை எழுத்து மூலம் வழங்குமாறு உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லத்துக்கு, பிரதேச செயலலாளர் வழங்கிய கடிதத்தில் கூறப்பட்டிருந்த போதும், இதுவரை அதற்கான விளக்கத்தை அஸ்லம் வழங்கவில்லை என அறிய முடிகிறது.

அதேவேளை, பணத்தை செலுத்தாமல் தாமதித்தமைக்கான காரணத்தை எழுத்தில் வழங்குமாறு பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலியும் உதவித் திட்டப் பணிப்பாளராக கடமையாற்றிய ஏ.எல். அஸ்லமிடம் வலியுறுத்திக் கேட்கவில்லை என்றும் தெரியவருகிறது.

அவ்வாறாயின் உதவித் திட்டப் பணிப்பாளராகக் கடமையாற்றிய அஸ்லம் என்பவரை, இந்த விவகாரத்திலிருந்து காப்பாற்றுவதற்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் லியாகத் அலி முயற்சிக்கிறாரா என்கிற நியாமான சந்தேகம் தமக்கு எழுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த ஏ.எல். அஸ்லம், பல்வேறு ஊழல் மற்றும் மோசடி தொடர்பான பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதை அடுத்து, கடந்த 18ஆம் திகதியன்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தரவுக்கிணங்க அம்பாறை கச்சேரிக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அம்பாறை மாவட்டக் கச்சேரிக்கு இடம்மாற்றம் வழங்கப்பட்ட அஸ்லம், அங்கு எவ்வித பொறுப்புகளும் வழங்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிய வருகிறது.

தொடர்பான செய்தி: பண மோசடியில் இருந்து தப்பிக்க, உதவித் திட்டப் பணிப்பாளர் தயாரித்துள்ள ‘பெட்டக’ ஆவணம்: குற்றத்தை மறைக்க, மேலும் குற்றங்கள்

பணத்தை நிதிப் பிரிவில் அஸ்லம் செலுத்தியமைக்கான பற்றுச் சீட்டு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்