வீதி நிர்மாண மோசடி: அட்டாளைச்சேனை உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்

🕔 December 17, 2019

– அஹமட்

ட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம் மேற்கொண்டதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்ட அராசங்க அதிபரின் உத்தரவுக்கிணங்க, அவர் நியமித்த விசேட அதிகாரி இந்த விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு கடந்த வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனை பிரதே செயலகத்துக்கு வருகை தந்து அங்கு விசாரணைகளை நடத்தினார்.

உஹன பிரதேச செயலாளராக் கடமையாற்றும் ஏ.எம்.ஏ. குமாரி என்பவரே, மேற்படி மோசடிகளை விசாரணை செய்யும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட புட்டி வீதியை நிர்மாணிப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை, தனது வயற்காணிக்கு அருகிலுள்ள மணல் புட்டி வீதியை அமைப்பதற்காக, சட்ட முறையற்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்ட உதவித் திட்டப் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம், அந்த வீதி அமைப்பதற்காக கொண்டு வரப்பட்ட மணலை, தனது சொந்தக் காணியில் கொட்டிக் கலைத்தார் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

பின்னர், இந்த மோசடி பொதுமக்களுக்குத் தெரியவந்ததை அடுத்து, மணல் புட்டி வீதி அமைக்கும் வேலையைக் கைவிட்டு, மீண்டும் புட்டி வீதியை அமைக்கும் நடவடிக்கையை உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லம் மேற்கொண்டதாகவும் புகார்கள் உள்ளனர்.

இந்த மோசடி குறித்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் போன்றோருக்கு உள்ளுர் மக்கள் முறையிட்டதோடு, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில், மேற்படி மோசடி தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், விசேட அதிகாரி ஒருவரை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிணங்க கடந்த வெள்ளிக்கிழமை காலை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு வருகை தந்த விசாரணை அதிகாரி; அங்கு பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி, உதவித் திட்டப் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம் மற்றும் கணக்காளர் ஏ.எல்.எம். றிபாஸ் உள்ளிட்ட பலரிடம் விசாரணைகளை நடத்தியதாகவும், அங்கு குற்றச்சாட்டுடன் தொடர்பான பல்வேறு ஆவணங்களை விசாரணை அதிகாரி கைப்பற்றியதாகவும் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறிக் கிடைக்கிறது.

இதேவேளை இந்த விசாரணையை தொடர்ந்தும் நடத்துவதற்காக, நாளை மறுதினமும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு, குறித்த அதிகாரி வருகை தரவுள்ளார் எனவும் தெரியவருகிறது.

ஏற்கனவே, பயனாளி ஒருவருக்கு வழங்கிய 60 ஆயிரம் ரூபா பணத்தை மீளப் பெற்று, அதனை பிரதேச செயலக நிதிப் பிரிவில் கையளிக்காமல், சுமார் இரண்டரை மாதங்கள் சட்டவிரோதமான முறையில் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லம் என்பவருக்கு எதிராக லஞ்ச, ஊழல்களை விசாரணைகளை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: பண மோசடியில் இருந்து தப்பிக்க, உதவித் திட்டப் பணிப்பாளர் தயாரித்துள்ள ‘பெட்டக’ ஆவணம்: குற்றத்தை மறைக்க, மேலும் குற்றங்கள்

Comments