ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் அரசாங்கம் நடந்துகொண்டது: மு.கா. தலைவர்

🕔 October 27, 2019

யிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நாடாளுன்ற தெரிவிக்குழுவின் அறிக்கையில் உளவுத்துறையின் ரகசிய நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்தால், உளவுத்துறையை அவர்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பது அம்பலத்துக்கு வந்துவிடும் என்ற அச்சத்தில், எதிரணியினர் அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்த கேள்வியெழுப்புகின்றனர் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து குருநாகல், சியம்பலாகஸ்கொடுவ பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்;

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் நடைபெற்றிருந்தால் அதன் பின்விளைவுகளை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. ஆயிரக்கணக்கானோர் வருடக்கணக்கில் சிறையில் வாடியிருப்பார்கள். ஆனால், நாங்கள் தற்போதைய அரசாங்கத்தில் பிரதமர் தலைமையில் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் குழுவொன்றை அமைத்து, சட்டத்தரணிகள் ஊடாக நூற்றுக்கணக்கானோரை விடுதலை செய்திருக்கிறோம்.

ஆனால், இன்னும் பலர் சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். சட்டம், நீதி என்ற விவகாரங்களில் நாங்கள் அளவுக்கு மீறி தலையிட முடியாது. இருந்தாலும் தொடர்சியாக இந்த விவகாரங்களை கையாள்வதற்கு அரசாங்கம் எங்களுக்கு பொறிமுறையொன்றை உருவாக்கித் தந்தது. இதன்மூலம் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் அரசாங்கம் மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டது.

முஸ்லிம்கள் மத்தியில் தீவிரவாதம் இருப்பதாக காட்டுவதற்கு மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் சர்வதேச சதி இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். எங்கள் மத்தியிலிருந்த கும்பலை கூலிக்கமர்த்தி செய்த விடயமாகவே இதனைப் பார்க்கவேண்டும்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையை சந்தேகத்துக்குட்படுத்தும் நோக்கில் இன்று எனக்கெதிராக அபாண்டத்தை சுமத்த முற்பட்டுள்ளனர். இதன்மூலம் அவர்கள் இரு விடயங்களை சாதிப்பதற்கு நினைக்கின்றனர்.

தெரிவிக்குழு அறிக்கையில் உளவுத்துறையின் ரகசிய நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்தால், உளவுத்துறையை அவர்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள் என்ற விவகாரம் அம்பலத்துக்கு வந்துவிடும் என்ற அச்சத்தில் அறிக்கையின் நம்பகத்தன்மையை இல்லாமல் செய்வது அவர்களின் முதலாவது நோக்கமாகும்.

இரண்டாவது, முஸ்லிம் தலைவர்கள் எல்லோருக்கும் பயங்கரவாத பட்டம் சூட்டிவிட்டார்கள். தற்போது எஞ்சியிருக்கின்ற எனக்கும் பயங்கரவாத சாயத்தை பூசுவதற்கு முனைகிறார்கள். இதன்மூலம் அவர்கள் தங்களது பலவீனத்தையே காட்டுகின்றனர். தேர்தலின் தோல்வியடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் அப்பாவி மக்களின் சிங்கள வாக்குகளை திசைதிருப்புவதற்கு முயற்சிக்கின்றனர்.  

சிங்கள மக்கள் மத்தியில் சஜித் பிரேமதாசவுக்குள்ள ஆதரவு, அவர்கள் நினைத்ததை விடவும் அதிகமாக இருக்கின்றது. வெவ்வேறு சமூக படித்தரங்களின் அடிப்படையில் சஜித் பிரேமதாசவுக்கு வெளித்தெரியாத செல்வாக்கு இருப்பதை அவர்கள் அடையாம் கண்டிருக்கின்றனர். இதற்காக தங்களது வாக்குகளை அதிகரிப்பதற்கு இப்படியான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம் தனியார் சட்டம் தற்போது பாரிய அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ளது. நாங்கள் எல்லோரும் அச்சப்படுகின்ற ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால், இந்தச் சட்டம் நிச்சயமாக இல்லாமலாக்கப்படும். மூதாதையர் காலத்திலிருந்து நாங்கள் அனுபவித்துவரும் இந்த தனியார் சட்டத்துக்கு வேட்டு வைப்பதற்கு எதிரணியில் பலர் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

எதிரணி தரப்பிலுள்ள ஒருசில முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகத்துக்கு வரக்கூடிய அச்சுறுத்தல்கள் பற்றிப் பேசாமல், ஆட்சியிலுள்ள அமைச்சர்களை குறை கூறுவதிலேயே குறியாக இருக்கின்றனர். இவர்கள் சமூகத்தின் நலனுக்கான ஒன்றுசேர்ந்தால் அதுபற்றி சிந்திப்பார்கள். ஆனால், ராஜபக்ஷ தரப்பை வெற்றிபெற வைப்பதே அவர்களின் தலையாய கொள்கையாகும்.

முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு குறித்த அச்சம் இப்போது எல்லோர் மத்தியிலும் இருக்கின்றது. ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால், நாம் அனுபவிக்கின்ற மிகக்குறைந்த உரிமைகளும் இல்லாமல் போய்விடும். நாட்டின் ஒரு சமயத்தினர் மாத்திரமே உயர்வாக நடத்தப்படுவார்கள். ஏனையவர்கள் வந்தேறு குடிகளாக மாற்றான்தாய் மனப்பாங்குடன் பார்க்கப்படுவார்கள்” என்றார்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்