சஹ்ரான் குழுவினருக்கு வாகனம் வழங்கிய தமிழர்கள்: அழைத்தால் மட்டும் ஆஜராகுமாறு நீதிமன்றம் அறிவிப்பு

🕔 September 4, 2019

பாறுக் ஷிஹான்

சஹ்ரான் குழுவினருக்கு வாடகைக்கு வேன் வழங்கிய சந்தேக நபர்களான  இளைஞர்கள் இருவரும், நீதிமன்றில் அழைப்பாணை விடுக்கப்பட்டால் ஆஜராகுவது போதுமானது என்று கல்முனை நீதவான் நீதிமன்றம் அறிவித்தது.

குறித்த வழக்கு கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என். றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு புஇன்று தன்கிழமை   எடுத்துக்கொள்ளப்பட்டது.

பயங்கரவாதிகளால் தென்னிலங்கை பகுதியில் வெள்ளை உடுப்புகள் கொள்வனவு செய்வதற்கு என வாடகை அடிப்படையில்  கடைக்கு செல்ல பயன்படுத்தப்பட்ட வேன் தொடர்பாக மட்டக்களப்பை சேர்ந்தவர்களான யூட், தனுசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு இந்நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட  பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்

தனுசனின் உடைமையில் இருந்த குறித்த வேனை, யூட் மூலமாக பயங்கரவாதிகள் வாடகைக்கு பெற்றனர் என்கிற வழக்குத் தொடர்பில் பிணையில் சந்தேக நபர்கள் விடுவிக்கப்படுவதை வழக்காளியான பொலிஸ் தரப்பு ஆட்சேபித்து இருக்கவில்லை.

இந்நிலையில் இவ்வழக்கு இடம்பெற்றபோது நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டால் ஆஜராக வேண்டும் என்று சந்தேக நபர்களுக்கு நீதிவான் ஐ. என். ரிஸ்வான் உத்தரவிட்டார்.

இருவரையும் ஆதரித்து சட்டத்தரணிகளான என். சிவரஞ்சித், தெய்வநாயகம் மதிவதன் ஆகியோர் ஆஜராகினர்.
அத்துடன் இதன்போது பயங்கரவாதிகளுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் தொடர்புகளை கொண்டிருந்ததாக சந்தேகத்தின் பெயரில் கைதாகி பல மாதங்களிற்கு மேலாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான மற்றொரு வழக்கின் விசாரணைகள் யாவும் நீதிவானின் பிரத்தியேக அறையில்  இன்று   மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதனடிப்படையில்  தொடர்ச்சியாக  கடந்த காலங்களில்   தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சில சந்தேக நபர்கள் தொடர்பாக, சட்டமா அதிபர் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் ஆராயப்பட்ட நிலையில், அவர்களை கடந்த தவணையில் சில வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போதுள்ள சந்தேகநபர்கள்  14 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு,  இவ்வழக்கு விசாரணை அடுத்த எதிர்வரும்  செப்டம்பர் 18ஆம்  திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதான சந்தேக நபர்கள் அனைவரும் காத்தான்குடி கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

இதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு கல்முனை, சாய்ந்தமருதில் உதவி ஒத்தாசை வழங்கிய சந்தேக நபர்களும் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்