முகாமைத்துவ உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட பெண்களுக்கு, தூரப் பகுதிகளில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டமை குறித்து அதிருப்தி

🕔 October 16, 2015

Dissatisfaction - 01– முன்ஸிப் –

பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால், அண்மையில் முகாமைத்துவ உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்ட, அம்பாறை மாவட்டம் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களில் பலர், மிகத் தூரப் பகுதிகளிலுள்ள பிரதேச செயலகங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது.

அரச முகாமைத்துவ உதவியாளர் தரம் – 03 பதவிக்கு ஆட்சேர்ப்பதற்காக, கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிப் பரீட்சைக்கு தோற்றி – அதில் சித்தியடைந்தவர்களுக்கு, கடந்த 08 ஆம் திகதி கொழும்பில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்தவகையில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 73 பேர் இந்த நியமனத்தினைப் பெற்றனர். இவர்களில் 18 பேர் அம்பாறை மாவட்ட செயலகத்துக்கு இணைப்புச் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், அம்பாறை மாவட்ட செயலகத்துக்கு இணைப்புச் செய்யப்பட்ட சிலருக்கு தமண, மகாஓயா, தெஹியத்தகண்டி, லஹுகல மற்றும் உகன ஆகிய தூரப் பகுதிகளிலுள்ள பிரதேச செயலகங்களுக்குச் சென்று சேவையாற்றும் வகையில், மாவட்ட செயலாளரால் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, அம்பாறை மாவட்டம் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் பலருக்கு, இவ்வாறு 50 தொடக்கம் 100 கிலோமீற்றர் வரையிலான தூரப் பகுதிகளிலுள்ள பிரதேச செயலகங்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளன.

மேற்படி நியமனம் வழங்கப்பட்டுள்ள பகுதிகள் நூறு வீதம் சிங்களப் பிரதேசங்களாகும். ஆனால், நியமனம் பெற்றுள்ளவர்கள் சிங்களம் மொழியில் பரீட்சயமற்றவர்களாக உள்ளனர். இதனால், இவர்கள் – அங்கு கடமையாற்றுவதில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அம்பாறை மாவட்டம் கரையோரப் பகுதிகளிலிருந்து நியமனம் வழங்கப்பட்டுள்ள மேற்படி பிரதேசங்களுக்கு செல்வதாயின், இரண்டு மூன்று பஸ்கள் மாறிப் பயணம் செய்ய வேண்டியுள்ளமையும், ஒவ்வொரு நாளும் போக்குவரத்துக்காக 100 தொடக்கம், 200 கிலோமீற்றர் வரை பயணிக்க வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

எனவே, மேற்படி தூரப் பிரதேசங்களுக்குச் செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளவர்களின் நியமனங்களை ரத்துச் செய்து, அவர்களை அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளிலுள்ள பிரதேச செயலகங்களுக்கு நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

இதேவேளை, பாசை தெரியாத நபர்களை இவ்வாறு மிகத் தூரப் பகுதிகளுக்கு நியமனம் வழங்கி அவர்களை உளைச்சலுக்குள்ளாக்குவதை விடுத்து, மேற்படி நபர்களை அம்பாறை மாவட்ட செயலகத்தில் பணிக்கு அமர்த்தி விட்டு, அம்பாறை மாவட்ட செயலகத்திலுள்ள சிங்களம் தெரிந்த முகாமைத்துவ உதவியாளர்களை தமண, மகாஓயா, தெஹியத்தகண்டி, லஹுகல மற்றும் உகன போன்ற பகுதிகளுக்கு நியமிப்பது குறித்தும் மேலதிகாரிகள் கவனத்தில் கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்