ஜனாதிபதி அலுவலகத்துக்கு தொலைபேசி அழைப்பெடுத்து, மைத்திரியை விமர்சித்த ஊடகவியலாளர்; பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை

🕔 August 19, 2019

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அலுவலத்துக்கு 2017ஆம் ஆண்டு தொலைபேசி அழைப்பெடுத்து, முஸ்லிம்கள் மீது சிங்கள இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் தொடர்பில் தனது விசனங்களைத் தெரிவித்ததோடு, ஜனாதிபதி தொடர்பான தனது விமர்சனங்களையும் வெளிப்படுத்திய ஊடகவியலாளர் அஸீஸ் நிசார்தீனை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இன்று திங்கட்கிழமை விசாரித்ததாக, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் 2017ம் ஆண்டு பேஸ்புக் பக்கத்தில் அவர் இட்ட பதிவு தொடர்பாகவும் அவர் இன்று விசாரிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இட்டுள்ள அந்தப் பதவில்;

‘2017ம் ஆண்டு காலி கிந்தோட்டை பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களை அடுத்து, ஜனாதிபதி சிறிசேனவின் அலுவலகத்துக்கு நான் தொலைபேசி அழைப்பை எடுத்து அவரோடு கதைக்க முயற்சி எடுத்தேன்.

ஆனால் அவரோடு கதைக்கும் சந்தர்ப்பம் எனக்கு வழங்கப் படவில்லை. ஜனாதிபதி முக்கியமான கலந்துரையாடல் ஒன்றில் இருப்பதால் இணைப்பை வழங்க முடியாது என்று எனக்கு அறிவிக்கப்பட்டது. பதிலுக்கு அவரின் அலுவலக பெண் அதிகாரி ஒருவர் எனது பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதற்கு முன் வந்தார்.

எனது தகவலை கட்டாயம் ஜனாதிபதிக்கு கொண்டு செல்வதாக எனக்கு வழங்கப் பட்ட உறுதி மொழியைத் தொடர்ந்து, ஜனாதிபதி சிறிசேனவின் மீதான எனது அதிருப்தியை காரசாரமாக வெளியிட்டேன்.

தன்னை ஜனாதிபதியாக அமர்த்திய சிறுபான்மை சமூகங்களின் ஒப்பற்ற உதவியை மறந்து நன்றி கெட்ட நிலையில் சிறிசேன இருப்பதாகவும், சிங்கள இனவாதிகள் அப்பாவி முஸ்லிம்கள் மீது தொடுக்கும் வன்முறையை கண்டும் காணாமல் இருப்பதாகவும் ஜனாதிபதி சிறிசேன மீது குற்றம் சுமத்தினேன்.

சிறிசேனவை ஆறடி புதை குழிக்குள் தள்ளவிருந்த மஹிந்த தரப்பினரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இந்நாட்டு சிறுபான்மை சமூகங்கள் அவரை ஜனாதிபதியாக்கியதை நினைவு படுத்திய அந்த தொலைபேசி உரையாடலை எனது முகப்புத்தக பக்கத்தில் பதிவேற்றம் செய்தேன்.

அன்று சமூக ஊடகங்களில் வைரலான அந்த ஓடியோ பதிவினால் ஓரிரு நாட்களில் ஜனாதிபதியின் புலனாய்வு பிரிவின் அச்சுறுத்தலுக்கும் உள்ளானேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இடப்பட்ட அந்தப் பதிவு தொடர்பாக மீண்டும் என்னை விசாரணை செய்வதற்கு எனது வீட்டுக்கு வந்து விசாரித்த குறித்த அதிகாரிகள், பின்னர் எனது அலுவலகம் தேடி வந்தனர்.

எனது வாக்குமூலத்தை அவசரமாக பெற்றுக் கொண்டு, குறுகிய நேரத்தில் விடைபெற்று சென்றனர்.

நான் சிறிசேனவை அன்று தொலைபேசியில் கடிந்து கொண்டது எனது ஜனநாயக உரிமை என்று அவர்களுக்கு தெளிவு படுத்தினேன்.

அதுமட்டுமல்லாமல், ஜனநாயகத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையில் வித்தியாசம் தெரியாமல் சிறிசேன தடுமாறிக்கொண்டிருப்பதாகவும் கூறி, எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி அந்த பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகளை வழியனுப்பி வைத்தேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்