ஜனாதிபதித் தேர்தலும் சாத்தியங்களின் கலையும்

🕔 August 20, 2019

முகம்மது தம்பி மரைக்கார்

ணர்ச்சி அரசியல் ஒன்றுக்கும் உதவாது. அவ்வாறான அரசியல் நிலைப்பாடானது, ஆண்டாண்டு காலமாக, மக்களைப் படுகுழியில் தள்ளியதைத் தவிர, வேறெதையும் செய்யவில்லை.   

மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில், முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக, கடந்த தேர்தலில், கண்களை மூடிக்கொண்டு, உணர்ச்சி வேகத்தில் மைத்திரி – ரணில் கூட்டணிக்கு வாக்களித்த முஸ்லிம்கள், தற்சமயம் கைசேதப்பட்டு நிற்பதாகக் கூறிக் கொள்கின்றனர்.   

இப்போது, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் அண்மித்து விட்டது. மைத்திரி – ரணில் ஆட்சிக் காலத்திலும், முஸ்லிம்களுக்குப் பெரும் அநியாயங்கள் நடந்து விட்டன என்றும், இதற்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் முஸ்லிம்கள் கோபப்படுகின்றனர்.   

இந்த உணர்ச்சிக் கொந்தளிப்புடன், அடுத்து வரும் ஜனாதிபதிபதித் தேர்தலின் போது, யாருக்காவது முஸ்லிம்கள் வாக்களிப்பார்களேயானால், அதுவும் தவறான முடிவாகவே அமைந்து விடும்.   

வேட்பாளர்கள்   

அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில், பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் இளைய சகோதரர் கோட்டாபய ராஜபக்‌ஷ களமிறக்கப்பட்டுள்ளார்.   

நேற்று முன்தினம், ‘தேசிய மக்கள் சக்தி’ எனும் கூட்டணியின் வேட்பாளராக, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.   

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று, இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதனை அறிவிப்பதில் பெரும் இழுபறி நிலவுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக, ரணில் விக்கிரமசிங்க உள்ளபோதும், அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில், அவரைக் களமிறக்க வேண்டுமென்று ஐ.தே. கட்சிக்காரர்களோ, அந்தக் கட்சியின் பங்காளிக் கட்சிகளோ இதுவரை கூறவில்லை.   

ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்த வரையில், ரணில் விக்கிரமசிங்க, வெல்ல முடியாத ஒரு குதிரை என்பதை, அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றனர். குறிப்பாகச் சொல்லப் போனால், இந்த விடயத்தை ரணில் கூட, மிக நன்றாக அறிந்துள்ளார் போலவே தெரிகிறது. அதனால்தான், நடந்து முடிந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களின் போதும், நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும், தான் போட்டியிடப் போகிறேன் என்று, அவர் விளையாட்டுக்குக் கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை.   

இவ்வாறான சூழ்நிலையில்,“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி” என்று, ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியிருக்கின்றார்.   

ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் உறுதியாகாத நிலையில், சஜித் இப்படிக் கூறியுள்ளதில், வேறு உள்ளர்த்தங்களும் இருக்கலாம் என்றும் அரசியலரங்கில் பேசப்படுகிறது. அதாவது, ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டாலும், அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்பதே, அந்த உள்ளர்த்தமாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.   

முஸ்லிம்கள் முன்னாலுள்ள கேள்வி   

எது எவ்வாறு இருப்பினும், இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் ஆகக் குறைந்தது, மூன்று பிரதான வேட்பாளர்கள் களமிறங்குவார்கள். அவர்களில் யாரை முஸ்லிம்கள் ஆதரிப்பது என்பதே, இங்குள்ள முக்கிய கேள்வியாகும்.   

பொதுஜன பெரமுன சார்பான வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மீது, சிறுபான்மைச் சமூகத்தினர் இழந்த நம்பிக்கை, இன்னும் கட்டியெழுப்பப்படவில்லை. மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் கோட்டா, அளவுக்கதிகமாகவே ‘ஆடி’ விட்டதாகக் கூறப்படுகிறது. வெள்ளை ‘வேன்’ கடத்தல், ‘கிறிஸ்’ மனிதன், பொதுபல சேனாவின் அட்டூழியங்கள் போன்றவற்றுக்குக் கோட்டாவே பொறுப்பு எனக் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.   

மேற்சொன்ன விவகாரங்களால், அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சிறுபான்மையின மக்கள்தான். அதிலும், முஸ்லிம்கள் மிக அதிகமாகவே இவற்றால் நொந்து போயினர்.   

சிங்கள மக்களைத் தம்வசப்படுத்தி, அவர்களின் ஆதரவுடன், மஹிந்த ராஜபக்‌ஷவை ஆட்சியில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்கிற திட்டம், கோட்டாவிடம் இருந்ததாகக் கூறப்படுகிறது.   
ஜனாதிபதி வேட்பாளராக, மஹிந்த போட்டியிட்ட 2005ஆம் ஆண்டிலும், 2010ஆம் ஆண்டிலும், பெருமளவான முஸ்லிம்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. முஸ்லிம் சமூகத்தில் அப்போது பெரும் செல்வாக்குடன் இருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான வேட்பாளருக்கே ஆதரவளித்தது.   

இதனால், சிறுபான்மையினரை இனி நம்ப முடியாது என்கிற முடிவுக்கு, கோட்டா வந்திருக்கக் கூடும். வாக்களிக்காத அவர்கள் மீது, வஞ்சம் தீர்க்க அவர் நினைத்திருக்கலாம். அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவுடன், மஹிந்த ராஜபக்‌ஷவை ஆட்சி பீடமேற்றும் முடிவுக்கு அவர் வந்திருக்கக் கூடும்.   

ஆனால், சிங்கள மக்களின் வாக்குகளை மட்டும் வைத்துக் கொண்டு, ஒருவரால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை, நடப்பிலுள்ள தேர்தல் முறைமையும், கள நிலைவரமும் ராஜபக்‌ஷ அணியினருக்கு 2015ஆம் ஆண்டு நிரூபித்து விட்டது.  அந்தத் தேர்தல் முடிவிலிருந்து, ராஜபக்‌ஷ அணியினர் பாடமொன்றை நிச்சயமாகக் கற்றிருப்பார்கள். ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கு, கோட்டாபய ராஜபக்‌ஷ சென்று வருகின்றமையைக் காணும் போது, அவர் கற்றுக் கொண்ட பாடம், எதுவாக இருக்கும் என்பதை, அனுமானிக்க முடிகிறது.   

முன் தீர்மானம் தேவையில்லை   

முன் தீர்மானம் ஒன்றுடன் – நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முஸ்லிம்கள் செயற்படுவது சாதுரியமாக இருக்காது. 

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில், முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயங்களை விடவும், மைத்திரி – ரணில் ஆட்சிக் காலத்தில் மிக அதிகமாகவே முஸ்லிம்களுக்கு எதிரான அட்டூழியங்கள் நடந்திருக்கின்றன.  அதன்படி பார்த்தால், ராஜபக்‌ஷவினரை விடவும், ரணிலும் மைத்திரியுமே முஸ்லிம்களுக்கு அநியாயக்காரர்களாக உள்ளனர். அதற்காக, ரணில் அல்லது மைத்திரி மீதும் அவ்வாறானதொரு முத்திரையை, உணர்ச்சிவசப்பட்டு முஸ்லிம்கள் குத்தி விடத் தேவையில்லை.   

எழுத்து மூல ஒப்பந்தமும் கசப்பான உண்மைகளும்   

எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும், முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஆதரவளிக்கும் பொருட்டு, அவர்களுடனோ அல்லது அவர்கள் சார்ந்த கட்சிகளுடனோ, இதுவரை சமூகம் சார்பான எந்தவோர் எழுத்து மூல ஒப்பந்தங்களையும் செய்து கொள்ளவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும்.   

ஆனால், ஜனாதிபதி வேட்பாளர்களிடமிருந்தும் அவர்களின் கட்சிகளிடமிருந்தும், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், பணப்பெட்டிகளை பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் ஏராளமான குற்றச்சாட்டுகள் இன்னும் உள்ளன.   

அதாவது, எல்லா ஜனாதிபதித் தேர்தல்களின் போதும், முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுத் தருவதாகக் கூறிக் கொள்ளும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், தத்தமது ‘கஜானா’க்களை நிரப்பிக் கொண்டார்களே தவிர, முஸ்லிம் சமூகத்தின் தேவைகள் தொடர்பில், ஜனாதிபதி வேட்பாளர்களுடன் உடன்படிக்கைகள் எதையும் செய்து கொள்ளவில்லை என்பதுதான், ஜீரணிக்க முடியாத உண்மைகளாகும்.   

உதாரணமாக, மைத்திரி – ரணில் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு முஸ்லிம்கள் கிட்டத்தட்ட 90 சதவீதம் வாக்களித்தனர். விரும்பியோ விரும்பாமலோ, முஸ்லிம் கட்சிகளில் பெரும்பான்மையானவை மைத்திரி – ரணில் தரப்புக்கே ஆதரவளித்தன.   

ஆனாலும், மிக நீண்ட காலமாக, முஸ்லிம்கள் கோரிவரும் கரையோர மாவட்டத்தைக் கூட, இந்த ஆட்சியாளர்களிடமிருந்து, முஸ்லிம் தலைவர்களால் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்பது, வெட்கத்துக்கு உரியதாகும். 

முஸ்லிம்களின் தேவைகளைக் கேட்டுப் பெறுவதற்குப் பதிலாக, முஸ்லிம் அரசியல் தலைவர்கள், தத்தமது தனிப்பட்ட தேவைகளையே ஆட்சியாளர்களிடம் நிறைவேற்றிக் கொள்கின்றமையால் ஏற்படும் இழி நிலையைத்தான், முஸ்லிம் சமூகம் இப்போது அனுபவித்து வருகிறது என்பதுதான் யதார்த்தமாகும்.   

அநுர மாற்றுத் தீர்வு?   

இவ்வாறான பின்னணியில், தற்போது ஜனாதிபதி வேட்பாளராக ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளமையை, முஸ்லிம்களில் சில தரப்பினர் கொண்டாட்டமாகவும் ஆறுதலாகவும் பேசியும் எழுதியும் வருகின்றனர்.   

நாட்டிலுள்ள பிரதானமான, பெரிய அரசியல் கட்சிகளில் முற்போக்கானதும் ஒப்பீட்டளவில் இனவாதத்தைக் கையில் எடுக்காததுமான கட்சிகளில், ஜே.வி.பி முக்கியமானதாகும். ஆனாலும், வெற்றிக்கான குறைந்தபட்ச வாய்ப்பைக் கொண்ட ஒரு வேட்பாளரை, முஸ்லிம்கள் ஆதரிப்பதிலும், அவரிடம் முஸ்லிம் சமூகத்தின் தேவைகளைக் கோரி நிற்பதிலும் என்ன பலன் ஆகிவிடப் போகிறது என்கிற கேள்வியும் முக்கியமானதாகும்.   

“நாங்கள், எங்கள் சமூகத்தின் வாக்குகளை உங்களுக்குப் பெற்றுத் தருகிறோம்; பதிலுக்கு எங்கள் சமூகத்துக்கு நீங்கள் என்ன தருவீர்கள்? அல்லது எங்கள் சமூகத்தினருக்கு இவற்றையெல்லாம் தருவீர்களா” என்று, ஜனாதிபதி வேட்பாளர்களிடத்தில் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கேட்க வேண்டும்.   

அதன்போது அதிகமானவற்றை, எந்த வேட்பாளர் செய்து தருவதாகக் கூறுகின்றாரோ, அவருடன் அல்லது அவரின் கட்சியுடன், முஸ்லிம் கட்சிகள் எழுத்து மூலம் ஓர் உடன்படிக்கையைச் செய்து கொள்ளுதல் வேண்டும். பிறகு, அந்த வேட்பாளருக்கு முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கலாம்.   

ஏமாற்று வேலை   

கடந்த காலங்களில் பொதுத் தேர்தல்களின்போது, பெருந் தேசிய அரசியல் கட்சியொன்றுடன் கூட்டணியமைத்துப் போட்டியிட்ட முஸ்லிம் கட்சியொன்று, மேற்சொன்னவாறான எழுத்து மூல உடன்படிக்கையைச் செய்து கொண்டதாகக் கூறியது. அதன்படி, தமது கூட்டணிக்கு வாக்களிக்குமாறும் அந்த முஸ்லிம் கட்சி தமது ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்தது.   

ஆனால், உண்மையில் அவ்வாறான ஒப்பந்தங்கள் எதையும் அந்தக் கட்சி செய்து கொள்ளவில்லை. குறித்த முஸ்லிம் கட்சியின் முக்கியஸ்தர்கள், அந்தக் கட்சியிலிருந்து வெளியேறிய போது, இந்த உண்மை அம்பலமானது.   

எனவே, எந்தவொரு தேர்தலையும் முன்னிறுத்தியேனும் முஸ்லிம் கட்சிகள் செய்து கொள்கின்ற மேற்சொன்னவாறான ஒப்பந்தங்களை, மக்களுக்கு வெளிப்படுத்துதலும் அவசியமாகும். எந்தவொரு காரணத்தைக் கூறியும், அவ்வாறான ஒப்பந்தங்களை மறைக்கக் கூடாது.   

வேண்டாம் ‘ஹராம்’   

எனவே, கோட்டா உள்ளிட்ட அனைத்துப் பிரதான வேட்பாளர்களுடனும் முஸ்லிம் கட்சிகள், திறந்த மனதுடன் பேச்சுகளை நடத்துதல் வேண்டும். யாருடனும் முஸ்லிம்கள், பகைமை அரசியல் செய்ய முற்படவில்லை என்பதை, நேர்மைத் தன்மையுடன் முஸ்லிம் அரசியல் கட்சிகள் வெளிப்படுத்த வேண்டும். கோட்டாவை மட்டும் தொடர்ந்தும் முஸ்லிம்கள் பிழை காணுமளவுக்கு, ரணிலும் – மைத்திரியும் முஸ்லிம் சமூகத்தின் தெருவெங்கிலும் பாலாற்றையும் தேனாற்றையும் ஓட விடவில்லை.

பிரதமர் மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் பதவிகளை ரணில் விக்கிரமசிங்க வைத்திருக்கும் போதுதான், ‘திகன’ முஸ்லிம்களின் சொத்துகள் பற்றி எரிந்தன என்பதை, மறந்து விட முடியாது.   
ஆனால், இதை ஐக்கிய தேசியக் கட்சியினரும் அவர்களின் அரசியல் பங்காளிகளும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. தற்போதைய அரசாங்கத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த அனைத்துச் சம்பவங்களின் பின்னாலும் ராஜபக்‌ஷவினரே இருந்தாக, அவர்கள் கூறுகின்றனர்.   

இவர்கள் கூறுவது, சிலவேளை உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால், ஆட்சியிலும் அதிகாரத்திலும் இல்லாத ராஜபக்‌ஷவினர், முஸ்லிம்களுக்கு இத்தனை அநியாயங்களையும் செய்வதைத் தடுக்க முடியாமல், இந்த ஆட்சியாளர்கள் இருப்பது, அவர்களின் கையாலாகாத்தனமாகும்.   

எந்தவோர் அரசியல் கட்சியையோ, அரசியல் தலைவரையோ முஸ்லிம்கள் ஹராம் (விலக்கப்பட்டது) எனச் சொல்லி விடக் கூடாது. அப்படிக் கூறுவது, முஸ்லிம்களுக்கான அரசியல் தெரிவுகளின் சாத்தியங்களைக் குறைவடைய அல்லது இல்லாமல் செய்து விடக் கூடும்.   

அரசியல் என்பது, சாத்தியங்களின் கலையாகும். அரசியலரங்கில் எதுவெல்லாம் சாத்தியமோ, அதையே சாதித்துக் கொள்ள வேண்டும். அதற்கு உணர்ச்சி அரசியல், அங்கு சரிப்பட்டு வராது. புத்திசாலித்தனமாக யோசிப்பவர்களுக்கே, அரசியல் என்பது சாத்தியங்களின் கலையாக எப்போதும் இருக்கும்.   

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (20 ஓகஸ்ட் 2019)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்