முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பூனைகளை விடவும் மோசமாகி விட்டனர்: அதாஉல்லா

🕔 May 23, 2019

– மப்றூக் –

ட்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை நாட்டுக்குள் நீங்கள்தான் கொண்டு வந்தீர்கள்” என்று, அண்மையில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றில் வைத்து, ரணில் விக்ரமசிங்கவிடம் – தான் கூறியதாக, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

‘தமிழ் லெட்டர்’ ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்களுடனான இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு, ‘சமகாலம் தொடர்பில்’ எனும் தலைப்பில் நேற்று புதன்கிழமை உரையாற்றிய போதே, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா இதனைக் கூறினார்.

அக்கரைப்பற்று மாநகரசபை மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

வெட்கமில்லையா

ஐ.எஸ் அமைப்பு என்கிற பெயரில், இரண்டு மூன்று நாடுகள் நமது நாட்டை ஆக்கிரமிக்கப் போகிறது என்று, அந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தான் எச்சரித்ததாகவும், இதனைப் புரிந்து கொள்ளாமல் சஹ்ரானைப் பற்றியும், இப்றாகிம் ஹாஜியாரைப்பற்றியும் பேசிக் கொண்டிருக்க உங்களுக்கு வெட்கமில்லையா என்று கேட்டதாகவும் முன்னாள் அமைச்சர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பின்னர், இந்த நாட்டுக்கு தலைவர் யார் என்பதே தெரியாமலுள்ளதாகவும் அங்கு – தான் குற்றம்சாட்டியதாகவும் அவர் கூறினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்;

“நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நடைபெறும் என, புலனாய்வுப் பிரிவினர் மிகத் துல்லியமாக அறிக்கை வழங்கியிருந்தும், அதுபற்றி தனக்குத் தெரியாது என்று ஜனாதிபதி சொல்கிறார்.

இதே சமயம், பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களுக்கு தன்னை அழைப்பதில்லை என்று, பிரதமர் கூறுகிறார். அதனால்தான் கேட்டேன், இந்த நாட்டுக்கு தலைவர் யார் என்று.

அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பு

“பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர், ஜனாதிபதி இந்த நாட்டில் இருக்கத் தக்கதாக, அமெரிக்க ஜனாதிபதி தொலைபேசி மூலம் பிரதமரைத் தொடர்பு கொண்டு பேசினாரே, அதற்குரிய நியாயம் என்ன” என்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நான் கேட்டேன்.

“நாட்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுடன் ஐ.எஸ் அமைப்பு தொடர்புபட்டிருக்கிறது என்றவுடனேயே, இதனை அமெரிக்காதான் செய்தது என்பது புரிகிறது. அதற்கு இந்தியாவும் துணை போகிறது.

அந்தத் தாக்குதலுக்கு அரை வேக்காட்டுத்தனமான சஹ்ரான் போன்றோர் காசு கொடுத்து வாங்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான பயங்கரவாதச் செயல்களுக்கு சிங்களவர்கள், தமிழர்கள் என்று பலரும் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

யார் செய்தாலும் பிழைதான்

மாகந்துர மதுஷ் என்பவர் முஸ்லிமா? இல்லையே. அவர் செய்த அநியாயத்துக்காக, அவர் பௌத்தர்தான் என்பதற்காக யாரும் விகாரைகளை உடைத்தோமா? இல்லையே. மதுஷ் என்பவர் தேவைப்பட்டவரைக் கொல்லலாம், வேண்டிய இடங்களுக்கு போதைப் பொருள் கடத்தலாம். ஆனால் அதுபற்றி கேட்க மாட்டார்கள்.

இன்றைய நிலையை வைத்து தமிழர்களும் முஸ்லிம்களைப் பார்த்து ‘பயங்கரவாதிகள்’ என்கின்றனர். பயங்கரவாதச் செயல்களைப் பிரபாகரன் செய்யவில்லையா? யார் செய்தாலும் பிழைதான்.

கேவலமான, மனிதாபிமானத்துக்கு அப்பாற்பட்ட கொலைகளை பிரபாகரன் செய்தார். குழந்தைகள், கர்ப்பிணிகள், தொழுது கொண்டிருந்தவர்கள் என்று கொன்று குவித்தார். அப்போது நாங்கள் சொன்னோம்; இது நீதியற்றது, இந்தப் போராட்டம் வெற்றி பெறாது, சண்டியனின் வாழ்வு சந்தியிலேதான் முடியும் என்றோம். அதுவே நடந்தது.

மனிதனை இப்படிக் கொன்று குவிக்குமாறு இந்து சமயத்தில், இஸ்லாத்தில், பௌத்தத்தில் சொல்லப்பட்டுள்ளதா? இல்லை.

பூனையை விடவும் மோசமாகி விட்டனர்

தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அளுத்கம முஸ்லிம்கள் மீது வன்முறை நடத்தப்பட்டபோது, அரசாங்கத்திலிருந்து விலகப் போகிறோம், ஆட்சியை மாற்றப் போகிறோம் என்று முஸ்லிம் தலைவர்கள் கூறியதோடு, அடுத்த தேர்தலில் வாக்குகளையும் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் இப்போது அந்த முஸ்லிம் தலைவர்கள் பூனையை விடவும் மோசமாக உள்ளார்கள்.

இருந்த உரிமைகளை விடவும் மேலதிகமான உரிமைகளை முஸ்லிம் மக்களுக்குப் பெற்றுத் தருவதாகக் கூறி, முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்ற முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள், இப்போது முஸ்லிம்களுக்கு இருந்த மத உரிமைகளையும் இல்லாமலாக்கி விட்டார்கள்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்