வஞ்சம்
– முகம்மது தம்பி மரைக்கார் –
முஸ்லிம் சமூகம் மீது வஞ்சம் தீர்க்கக் காத்திருந்தோருக்கெல்லாம் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விட்டது. ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும், பயங்கரவாதிகளாக சில கூட்டம் சித்தரித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறத்தில், இந்தத் தாக்குதலைச் சாட்டாக வைத்து முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றில் காடைத்தனங்கள் இடம்பெற்றுள்ளன.
இத்தனைக்கும் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்கள் மிகவும் பொறுமையுடனும், சகிப்புத்தன்மையுடன் இருக்கத்தக்கதாகவே இவ்வளவு கூத்துக்களும் அரங்கேறியுள்ளன.
ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் நடைபெற்று இரண்டு வாரங்கள் கடந்த பிறகு சிங்கள மக்கள் மத்தியில் வாழும் முஸ்லிம்கள் மீது, மிகவும் திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
நீர்கோழும்பு, மினுவாங்கொட ஆகிய பிரதேசங்களிலும் குருணாகல் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிர் மற்றும் சொத்து இழப்புகள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளன. அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் இந்தத் தாக்குதல்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியதாக குற்றச்சாட்டுகளும், ஆதாரங்களும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் கும்பல் நடத்திய ஈஸ்டர் தினத் தாக்குதலுக்கு, முஸ்லிம் சமூகத்தில் எந்த வகையான ஆதரவும் இல்லை என்பதை, முஸ்லிம்களின் எதிராளிகள் கூட அறிவார்கள். சஹ்ரானின் சகோதரர்கள், தந்தை மற்றும் தாய் உள்ளிட்ட 15 பேர் இடுப்பில் குண்டுகளைக் கட்டிக் கொண்டு சாய்ந்தமருதில் மறைந்திருந்த போது, அவர்களைப் பற்றிய தகவல்களை பாதுகாப்பு தரப்பினருக்கு அந்தப் பகுதியிலுள்ள முஸ்லிம் மக்கள்தான் வழங்கினார்கள்.
படையினரிடம் தங்களைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் எனக் கோரி, சாய்ந்தமருது முஸ்லிம் மக்கள் முன்பாக அந்தப் பயங்கரவாதிகள் கட்டுக் கட்டாக பணத்தை அள்ளி வீசிய போதும், அதனை மக்கள் கணக்கில் எடுக்கவேயில்லை.
இவ்வாறு, சஹ்ரான் கும்பலை முஸ்லிம் மக்கள் புறக்கணித்தமை காரணமாகத்தான், இத்தனை சீக்கிரத்தில் அந்தக் கும்பலுடன் தொடர்புபட்ட துரும்புகளைக் கூட, படையினரால் பிடிக்க முடிந்தது என்பதுதான் யதார்த்தமாகும். பாதுகாப்புத் தரப்பினரும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
இப்படி இருக்கத்தக்கதாக, சஹ்ரான் கும்பலின் கொடூரமான செயலுக்கான ஒட்டு மொத்தப் பழியினையும், முஸ்லிம் சமூகத்தின் மீது இறக்கி வைக்கும் செயலானது நியாயமற்றதாகும்.
ஈஸ்டர் தின தாக்குதலை சாட்டாக வைத்து முஸ்லிம் மக்கள் மீதும், அவர்களின் சொத்துக்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் அயோக்கியத்தனமானவை.
இந்தத் தாக்குதலை நடத்தியவர்களில் அநேகமானோர் கொள்ளையர்கள் என்பதை களத்திலிருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. ஈஸ்டர் தின பயங்கரவாதச் செயல்களால் கோபமடைந்து உணர்ச்சிவசப்பட்ட எவரும் இந்தத் தாக்குதலில் ஈடுபடவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையொன்றினை கட்டவிழ்த்து விடுவதற்கு நாள் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்தான், இந்தக் காடையர்களைக் களத்தில் இறக்கி விட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக திகன மற்றும் அம்பாறை தாக்குதல்களை நடத்துவதற்கு, இவ்வாறானவர்கள் அப்போது வேறு காரணங்களைத் தேடிப்பிடித்திருந்தார்கள்.
அம்பாறை நகரில் முஸ்லிம் ஒருவரின் கடையில் விற்கப்பட்ட கொத்து ரொட்டியில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்தை கலந்திருந்ததாகக் கூறித்தான், அங்கு முஸ்லிம்களின் கடைகளையும் பள்ளிவாசலையும் பேரினக் காடையர்கள் அடித்து நொறுக்கினார்கள் என்பது நினைவுகொள்ளத்தக்கது.
இதேவேளை, முஸ்லிம்கள் மீது இறுதியாக நடத்தப்பட்ட தாக்குதல்களின் போதும், அவற்றுக்கு முன்னரும் பின்னரும் முக்கிய அரசியல்வாதிகள் பலர் களத்திலும் களத்துக்கு வெளியிலும் நின்றிருந்தார்கள் எனக் கூறப்படுகிறது. அவ்வாறான அரசியல்வாதிகளிடம் ஏன் அங்கு சென்றீர்கள் என்று கேட்டால்; காதில் பூச்சுற்றும் கதைகளைக் அவர்கள் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.
குருணாகல் மாவட்டத்தில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்கள் ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளருமான தயாசிறி ஜயசேகர, அங்கு சென்று – அவர்களை தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றதையும், அவர்களை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுத்தார் என்பதையும் ஊடகங்கள் பகிரங்கப்படுத்தியிருந்தன.
இந்த நிலையில், தான் அவ்வாறு நடந்திருக்காது விட்டால், கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவானவர்கள் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியிருப்பார்கள் என்றும், அதனைத் தவிர்ப்பதற்காகவே தான் அவ்வாறு நடந்து கொண்டதாகவும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.
அதாவது, வன்முறையாளர்களுக்கு எதிராக உச்சபட்ச பலத்தைப் பிரயோகிக்குமாறு பாதுகாப்பு தரப்புக்கு அரசாங்கம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஒரு பொலிஸ் நிலையத்தையே தனியாளாகச் சென்று காப்பாற்றியதாக தயாசிறி கூறியிருக்கின்றார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால், தயாசிறி அங்கு வந்து சென்ற பிறகுதான், முஸ்லிம்கள் மீது அந்தப் பகுதியில் தாக்குதல் தொடங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தயாசிறியை அழைத்து வாக்கு மூலம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கும் வகையில்தான் நடந்து முடிந்த வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. முஸ்லிம் மக்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் இதனைச் செய்த காடையர்கள் அங்கு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். பொலிஸாரும் படையினரும் பார்த்திருக்கத் தக்கதாகவே, இந்த அடாவடிகள் நடந்திருக்கின்றன என்பதை, அங்கு பதிவான சிசிரிவி வீடியோ காட்சிகள் அம்பலப்படுத்தியுள்ளன.
அதுமட்டுமன்றி வன்முறைகளைப் புரிந்த காடையர்களை சட்டத்தின் பிடியில் சிக்காமல் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளையும் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
தாக்குதல் நடந்த பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களின் வீடியோக்கள் பதிவாகும் ‘ஹார்ட் டிஸ்க்’ இனை, சீருடையில் வந்த படையினர் எடுத்துச் சென்றதாக, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
வன்முறைகளால் பாதிக்கப்பட்ட குருணாகல் மாவட்டத்துக்குச் சென்றிருந்த மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமிடம் இதனை மக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்கத்கது.
இப்படி வேலியே பயிரை மேய்ந்ததாகக் கூறப்படும் முறைப்பாடுகள் ஏராளமுள்ளன.
இந்த நிலையில், புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைகளின் போது, கொட்டாரமுல்ல பகுதியில் பௌசுல் அமீர்தீன் என்பவர் காடையர்களால் கொல்லப்பட்டார். தச்சுத் தொழிலாளியான அமீர்தீன் 04 பிள்ளைகளின் தந்தை. அவரின் வீடு மற்றும் வாகனங்களையும் காடையர்கள் நாசம் செய்துவிட்டுப் போயிருந்தனர். வாளால் வெட்டப்பட்டு அமீர்தீன் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இரண்டு நாட்கள் நடந்த இந்த வன்முறைகளில் 30 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. அநேகமான பள்ளிவாசல்களுக்குள்ளிருந்த குர்ஆன் பிரதிகள் தீயிடப்பட்டிருந்தன.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரங்கள் நாட்டில் வெகுவாக இடம்பெற்று வந்தமையை நாம் அறிவோம். ஞானசார தேரர் போன்ற பௌத்த மதகுருமார்களே இந்த வெறுப்பு பிரசாரங்களைத் தலைமையேற்று நடத்தி வந்தனர். அந்தப் பிரசாரங்களினூடாக ஏற்றப்பட்ட ‘வெறி’ எத்தகையது என்பதை, பள்ளிவாசல்கள் மீதான தாhக்குதல்களை வைத்துப் புரிந்து கொள்ள முடிந்தது.
இத்தனைக்கு மத்தியில், நாட்டின் ஆட்சியாளர்கள் இந்த விவகாரம் தொடர்பில் நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமானதாகும். குறிப்பாக, நாடு பற்றியெரிந்த சமயத்தில் சீனா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நடந்த வன்முறை தொடர்பில் ஒரு கண்டனத்தைக் கூட அங்கிருந்து வெளியிடவில்லை என்பது, முஸ்லிம்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
தன்னிடமிருந்த பாதுகாப்பு அமைச்சை, ஐக்கிய தேசியக் கட்சி சார்பான ருவன் விஜேவர்த்தனவிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றதால், நாட்டில் நடந்த வன்முறைகள் தொடர்பில் தான் தலையிட வேண்டிய அவசியமில்லை என்று ஜனாதிபதி நினைத்திருந்தாரோ தெரியவில்லை.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நடைபெறும் அதிகாரச் சண்டைதான், நாட்டின் தற்போதைய நிலைக்குப் பெரிதும் காரணம் என்கிற குற்றச்சாட்டு முக்கியமானது. நாட்டில் சஹ்ரான் கும்பல் தாக்குதலொன்றை நடத்தப் போகிறது என்று புலனாய்வுப் பிரிவினர் மிகத் துல்லியமாக தகவல்களை வழங்கியிருந்த போதும், ஆட்சியாளர்கள் அது தொடர்பில் கணக்கில் எடுக்கவில்லை என்பது பாரதூரமானதாகும்.
அந்தவகையில், சஹ்ரான் கும்பலின் பயங்கரவாதச் செயல்களுக்கும், அதனைச் சாட்டாக வைத்து முஸ்லிம்கள் மீது ஏவி விடப்பட்ட பயங்கரவாதச் செயல்களுக்குமான முழுப் பொறுப்புக்களையும் ஆட்சியாளர்களே ஏற்க வேண்டும் என்பதே, பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.
இன்னொருபுறம், முஸ்லிம்கள் மீது – ஒவ்வொரு தடவையும் இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறும் போது, ஆட்சியிலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் மீது கோபப்படுவது போல் காட்டிக் கொள்வதும், பின்னர் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிவதுமான ‘காட்சி’கள் முஸ்லிம் மக்களுக்கு அலுத்துப் போய் விட்டது.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்தின் பக்கமாக இருக்கத்தக்க நிலையிலேயே, முஸ்லிம் சமூகத்தின் மீது இத்தனை வன்முறைகள் ஏவி விடப்படுகின்றமையானது, முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் வெட்கக் கேடானதாகும்.
மறுபுறமாக, கடந்த ஒக்டோபரில் இடம்பெற்ற அரசியல் பிரளயத்தின் போது, ரணில் விக்ரமசிங்கவின் பதவியைக் காப்பாற்றுவதற்காக நீதிமன்றம் சென்ற முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு – ஏன் நீதிமன்றம் செல்லவில்லை என்று சமூக வலைத்தளங்களில் முஸ்லிம் இளைஞர்கள் கேட்கின்றார்கள் என்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது.
முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகத்தை சரியாக வழிநடத்தும் தலைமைகளாக இருந்திருந்தால், பயங்கரவாதி சஹ்ரானையும் அவன் கூட்டத்தையும் முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க முடியும்.
ஆனால், இஸ்லாத்துக்குள் ஏற்படுகின்ற இயக்கப் பிளவுகளை வைத்துக் கொண்டு, அதன் மூலம் எப்படி தமது கல்லாக்களை வாக்குகளால் நிரப்பிக் கொள்ளலாம் என்று கணக்குப் பார்க்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை, சஹ்ரான் போன்ற நச்சு விதைகளை ஒழிப்பதென்பது கடினமாகும்.
எனவே, தற்போதைய சூழ்நிலையில் அரசியல் ரீதியாகவும் முஸ்லிம் சமூகம் சுய பரிசோதனையொன்றைச் செய்து கொள்தல் அவசியமாகும்.
நடந்து முடிந்த அத்தனை நிகழ்வுகளுக்குப் பின்னாலும் அரசியல் உள்ளது.
அரசியலை முன்னிறுத்தியே அத்தனை விடயங்களும் நடந்து முடிந்திருக்கின்றன.
நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (21 மே 2019