சும்மாயிருக்கும் இஸ்மாயில்: பிரயோசனமற்றுப் போன, மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல்

🕔 March 20, 2019

– அஹமட் –

கில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்துக்கான தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், மக்கள் நலனை முன்னிறுத்திய செயற்பாடுகளிலோ, கட்சியை வளக்கும் நடவடிக்கைகளிலோ இறங்கிச் செயற்படவில்லை என, அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எச்.எம். நவவிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழங்கியிருந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்று, சம்மாந்துறையைச் சேர்ந்த இஸ்மாயிலுக்கு அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வழங்கியிருந்தார்.

கடந்த பொதுத் தேர்தலின் போது – தான் வழங்கியிருந்த வாக்குறுதியொன்றை நிறைவேற்றும் பொருட்டு, இஸ்மாயிலுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, றிசாட் பதியுதீன் வழங்கினார்.

ஆயினும், மேற்படி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொண்ட இஸ்மாயில், இதுவரை அம்பாறை மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க எந்தவித மக்கள் பணிகளையும் மேற்கொள்ளவில்லை என, மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் கட்சியை வளப்பதற்கான நடவடிக்கைகளிலும், இஸ்மாயில் களமிறங்கிச் செயற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்னொருபுறம் இஸ்மாயில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பின்னர், அம்பாறை மாவடத்திலுள்ள முஸ்லிம் ஊர்களுக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டபோதும், பல ஊர்களுக்கு அவர் இன்னும் செல்லவில்லை எனவும் அறிய முடிகிறது.

இது இவ்வாறிருக்க, பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்பட்ட 56 நாள் அரசியல் பிரச்சினையின் போது, தனது கட்சித் தலைவர் றிசாட் பதியுதீனுக்குத் தெரியாமல், மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, பிரதியமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்ளச் சென்று, இறுதி நேரத்தில் இஸ்மாயில் திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை, அம்பாறை மாவட்டத்தில் இஸ்மாயிலுக்கு கொடுப்பதற்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தீர்மானித்த போது, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பலர் அதற்கு அதிருப்தி வெளியிட்டிருந்தமையும் நினைவு கொள்ளத்தக்கது.

ஆயினும், தனது வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, இஸ்மாயிலுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அமைச்சர் றிசாட் வழங்கினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்