கல்முனை தமிழர்கள் பிரதேச செயலகம் கோரி, ஆர்ப்பாட்டம் செய்வதில் தவறில்லை: அமைச்சர் மனோ கணேசன்

🕔 March 16, 2019

– அஹமட் –

ல்முனையில் வாழும் தமிழ் மக்கள், தமக்கான உப – பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தும்படி கோரி ஆர்ப்பாட்டம் செய்வதை தவறாக கருத முடியவில்லை என்று, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைப்பாட்டை தனது பேஸ்புக் பக்கத்தில் அமைச்சர் பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

முஸ்லிம் பெரும்பான்மையினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகரசபைக்கு உள்ளே, கல்முனை தெற்கு (முஸ்லிம்) பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை வடக்கு (தமிழ்) உப-பிரதேச செயலகம் ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளன.

இதில் 17 கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் சுமார் 33,000 சாய்ந்தமருது முஸ்லிம் மக்கள், தமது தனியான பிரதேச செயலகத்துக்கு மேலதிகமாக, அங்கே இன்று தமக்கு தனியான பிரதேச சபை வேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள்.

இந்நிலையில் கல்முனை வடக்கில், 29 கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் சுமார் 35,000 தமிழ் மக்கள் தமது ‘உப-பிரதேச செயலகம்’ முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

அதேவேளை கிழக்கு மாகாண மாவட்டங்களான மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை ஆகியவற்றில், சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற இனரீதியான பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், கல்வி வலயங்கள் போன்றவை, அரசியல் செல்வாக்குகளின் மூலம் உருவாக்கப்பட்டு செயற்படுகின்றன.

உதாரணமாக, தமிழ் பெரும்பான்மை மட்டக்களப்பு மாவட்டத்தில், ஆக ஏழு கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் முஸ்லிம் மக்கள் – தமக்கென தனியான ஒரு பிரதேச செயலகத்தை பெற்றுள்ளார்கள்.

மேலும் தனியான முஸ்லிம் கல்வி வலயம் ஆகியவையும் (இதில் சில நிலத்தொடர்பற்றவை) அங்கு இருக்கின்றன.

இத்தகைய பின்னணிகளில், கல்முனை வடக்கு (தமிழ்) உப-பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள், தமது ‘உப-பிரதேச செயலகத்தை’ , முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தும்படி கோரி ஆர்ப்பாட்டம் செய்வதை தவறாக கருத முடியவில்லை.

இலங்கையில் தேசியரீதியாக சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ்வது என்பது சக தரப்பின் உரிமைகள், அடுத்த தரப்புகளினால் புரிந்து உள்வாங்கி கொள்வதில் இருக்கின்றது.

அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம், ஒழுங்கு, கொள்கை நடைமுறையாக வேண்டும் என்பதுவே சிங்கள பெரும்பான்மையை நோக்கிய தமிழ், முஸ்லிம் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அதேபோலவே தமிழ், முஸ்லிம் தரப்புகளின் ஒற்றுமையும் இருக்கின்றது. இங்கேயும் ஒரே மாதிரியான சட்டம், ஒழுங்கு, கொள்கை நடைமுறையாக வேண்டும்.

Comments