ரணிலை பதவி நீக்கி, நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தமை: சட்டப்படி சரிதானா?

🕔 October 31, 2018

– வை எல் எஸ் ஹமீட் –

நாட்டில் குழப்பகரமானதொரு அரசியல் நிலைவரமொன்று உருவாகியுள்ளது. பதவியிலிருந்த பிரதமரை நீக்கி விட்டு, வேறொருவரை ஜனாதிபதி ஜனாதிபதி நியமித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தை எதிர்வரும் 16ஆம் திகதி வரை, ஜனாதிபதி ஒத்தி வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், உடனடியா நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பல்வேறு தரப்புக்களும் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தை கூட்டுதல் மற்றும் பெரும்பான்மையை நிரூபித்தல் தொடர்பில், சட்ட விளக்கமொன்றினை வழங்கும் பொருட்டு, இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல்

அரசியலமைப்புச் சட்டம் சரத்து (70) இன் பிரகாரம் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை காலத்திற்குக் காலம் ஒத்திவைக்கலாம். ஆனால் அவ்வொத்திவைப்புப் பிரகடனத்தில் மீண்டும் கூட்டப்படும் திகதி குறிப்பிடப்பட வேண்டும். அது இரண்டு மாதத்திற்கு மேற்படக்கூடாது. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை குறித்த திகதிக்கு முன்னர் ஜனாதிபதி கூட்டலாம். ஆனாலும் முதல் மூன்று நாட்களுக்குள் கூட்டமுடியாது.

இங்கு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை சபாநாயகர் தாமாகவோ, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகளின் பேரிலோ, அது மூன்றில் இரண்டு பங்காக இருந்தால் என்ன, மொத்த 225 பேராக இருந்தால் என்ன, கூட்டுவதற்கு சட்டத்தில் ஏற்பாடுகள் எதுவும் இல்லை.

அவ்வாறு சபாநாயகர் கூட்டினால் அவருக்கெதிராக எந்த சட்டநடவடிக்கையும் எடுக்கமுடியாது. ஆனாலும் அவர் கூட்டியதை பாராளுமன்றமாக கருதமுடியாது. இது தொடர்பாக மேலும் சில விளக்கங்களை பின்னர் பார்ப்போம்.

அதேநேரம் ஜனாதிபதி குறிப்பிட்ட திகதியில் ( 16/11/2018) நாடாளுமன்றத்தைக் கூட்டாமல், மேலும் காலத்தை நீடிக்கமுடியாது. கூட்டிவிட்டு அதன்பின்னர் மீண்டும் ஒத்திவைக்கலாம். எவ்வளவு காலத்திற்குப் பிறகு ஒத்திவைக்கலாம் என்பது தொடர்பாக எதுவித ஏற்பாடும் சட்டத்தில் இல்லை. ஒரு நாள் அல்லது இருநாள் கழித்துக்கூட மீண்டும் ஒத்திவைக்கலாம். ஆனால் அது ஜனநாயக விரோதம். அல்லது “காலத்திற்கு காலம்” ( from time to time) என்பதை உயர்நீதிமன்றம் பொருள்கோடல் செய்யவேண்டும்.

பெரும்பான்மை நிரூபித்தல்

16ம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ நாடாளுமன்றம் ஜனாதிபதியினால் கூட்டப்படுகிறது எனக் கொள்வோம். அதேநேரம் அந்தக்காலப் பகுதிக்குள் உயர்நீதி மன்றத்திடம் இருந்து தீர்வேதும் பெறப்படவில்லை எனவும் கொள்வோம்.

இப்பொழுது இருவர் பிரதமர் பதவிக்கு உரிமை கோருவதால், இதில் ஒருவரை பிரதமராக அங்கீகரிக்க வேண்டிய தேவை சபாநாயகருக்கு எழும்.

ரணிலை அங்கீகரித்தல்

ரணிலைத்தான் பிரதமராக சபாநாயகர் அங்கீகரிக்கின்றார் எனக் கொள்வோம். இப்பொழுது அவருக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பைக் கொண்டுவரமுடியும். பெரும்பாலும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படமாட்டாது. ஏனெனில் எதிரணியினர் அவரைப் பிரதமராக ஏற்றுக்கொள்ளாத நிலையில் அதனை எதிர்பார்க்க முடியாது.

ரணில் தோல்வி

இப்பொழுது நம்பிக்கைப் பிரேரணையில் ரணில் தோற்றால், அத்தோடு பிரச்சினை முடிந்துவிடும். மஹிந்தவை சபாநாயகரும் அங்கீகரிக்க வேண்டிவரும். அதற்காக, அவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர முடியாதென்பதல்ல. ஆனால், ரணில் தோற்கின்றார் என்றால் மஹிந்தவுக்குப் பெரும்பான்மை இருப்பது வெளிப்படையாகும். எனவே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருகின்ற சாத்தியம் குறைவு.

ரணில் வெற்றி

நம்பிக்கைப் பிரேரணையில் ரணில் வெற்றிபெற்றால் அவரது பெரும்பான்மை நிரூபிக்கப்படும். அப்போது ரணிலுக்கு பெரும்பான்மையில்லை என்று ஜனாதிபதி கொண்டிருந்த அபிப்பிராயம் பிழை எனவும் நிறுவப்படும். ஆனாலும் அந்தக் கணத்தில் இருந்து, ரணில் பிரதமராக செயற்படமுடியுமா? என்பதில் சட்டப்பிரச்சினை இருக்கின்றது. ஏனெனில் நியமிக்கின்ற அதிகாரம்கொண்ட ஜனாதிபதியினால், அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டிருக்கின்றார். புதிய பிரதமர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

இங்கு by operation of law என்று சொல்வதற்கு சட்ட ஏற்பாடு இல்லை. பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக நீக்கப்பட்டவர் பிரதமர் ஆகிவிட முடியாது. தானே பிரதமர் என ரணில் உரிமை கோருகின்றார். பெரும்பான்மையையும் நிரூபித்துவிட்டார். சபாநாயகரும் அவரையே பிரதமராக அங்கீகரிக்கின்றார். எனவே, அவர் தொடர்ந்தும் செயற்படமுடியாதா? என்றொரு கேள்வியை எழுப்பலாம். அது நியாயமான கேள்வி.

ரணில் பெரும்பான்மையை நிரூபிப்பதனால், நியமிக்கப்பட்ட அடுத்த பிரதமரும் அமைச்சர்களும் தாமாக பதவியிழக்க சட்டத்தில் ஏற்பாடு இல்லை. ஒன்றில் அதை உயர்நீதிமன்றம் சொல்லவேண்டும். அல்லது ரணிலை மீண்டும் பிரதமராக ஜனாதிபதி நியமிக்க வேண்டும். அதற்கு மஹிந்த ராஜினாமா செய்யவேண்டும். அல்லது ஜனாதிபதியினால் நீக்கப்படவேண்டும்.

எவ்வாறாயினும் ரணில் தனது பெரும்பான்மையை நிரூபித்தால், அவ்வாறு கட்டாயம் மைத்திரி நியமித்தே ஆகவேண்டும். இல்லையெனில் வேண்டுமென்றே அரசியலமைப்புச் சட்டத்தை மீறியவராவார். அது குற்றப்பிரேரணைக்கு தெட்டத்தெளிவான ஒரு காரணியாகிவிடும். குற்றப்பிரேரணைக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. அல்லது ரணில் நீதிமன்றத்தை நாடலாம்.

மஹிந்தவை பிரதமராக அங்கீகரித்தல்

மஹிந்தவை பிரதமராக சபாநாயகர் அங்கீகரிக்கின்றார் என வைத்துக்கொள்வோம். இப்பொழுது நம்பிக்கைப் பிரேரணை அவசியமில்லை. எதிர்த்தரப்பு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரலாம். அதில் மஹிந்த வெற்றிபெற்றால் அதாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தால் அல்லது யாரும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவராவிட்டால், மஹிந்த பிரதமராக நீடிப்பார். தோல்வியடைந்தால் பதவியிழப்பார். புதிய பிரதமர் நியமிக்கப்பட வேண்டும்.

அப்புதிய பிரதமர் ரணிலாகவும் இருக்கலாம். வேறொருவராகவும் இருக்கலாம். ரணில் ஏதோவொரு விதத்தில் தன்பெரும்பான்மையை நிரூபித்தால் (உதாரணம் சத்தியக்கடதாசி) ரணிலைப் பிரதமராக நியமிக்க வேண்டியேற்படும். சிலவேளை ஜனாதிபதி மறுக்கவும் கூடும். ஏனெனில் அவ்வாறு ஒரு ஏற்பாடு சட்டத்தில் இல்லை. ஆனாலும் அது ஜனநாய நிரூபணம் என்பதால், அவ்வளவு இலகுவாக மறுக்கமுடியாது.

எனவே, இவற்றின் சுருக்கம் என்னவென்றால், ரணில் பெரும்பான்மையை நிரூபித்தாலும், மீண்டும் நியமிக்கப்பட்டாலேயொழிய சுயமாக பிரதமராக தொடர்ந்தும் செயற்பட முடியாது. அல்லது நீதிமன்றம் அவ்வாறு கூறவேண்டும்.

மஹிந்த நம்பிக்கை வாக்கெடுப்பொன்றில் தோற்றாலேயொழிய அவர் தொடர்ந்தும் பிரதமராக செயற்படலாம்.

சிலவேளை இருவருக்கும் ஒரேநேரத்தில் வாக்களிக்கின்ற ஒரு போட்டி வாக்களிப்பொன்றுக்கு சபாநாயகர் உத்தரவிடுவாரா என்பது தெரியாது. அவ்வாறான ஒரு ஏற்பாடு நாடாளுமன்ற நிலையியல் கட்டளையில் இல்லை என்றே நினைக்கின்றேன். எதுஎவ்வாறானபோதிலும், யார் எந்த முறையில் வெற்றி பெற்றாலும், மேற்சொன்ன நடைமுறையே கைக்கொள்ளப்படும்.

சபாநாயகர் சுயமாக பாராளுமன்றத்தைக் கூட்டல்

சபாநாயகர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தைக் கூட்டப்போவதாக செய்திகள் அடிபடுகின்றன. அவ்வாறு கூட்டினால் அதனை நாடாளுமன்றமாகக் கொள்ள முடியாது. அதில் ரணில் பெரும்பான்மையை நிரூபித்தால் ஜனாதிபதிக்கும் நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் ரணிலுக்கு பெரும்பான்மை இருக்கின்றது என்ற செய்தியைச் சொல்லலாம். அதன்மூலம் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கலாம். அவ்வளவுதான்.

மறுபுறம் மஹிந்தவுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து தோற்கடித்தால் அதுவும் தேசிய, சர்வதேச ரீதியில் ஒரு விளம்பரத்திற்கு பயன்படுத்தலாமே தவிர, மஹிந்த பதவியிழக்கமாட்டார். ஏனெனில் அது நாடாளுமன்றமல்ல. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் மாத்திரமேயாகும். எனவே, எதனைச் செய்வதாக இருந்தாலும் ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை ஜனாதிபதியே கூட்டவேண்டும்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தது சட்டத்தின் பார்வையில்

“சரத்து 70 இன் அடிப்படையில் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கின்றது என மேலே பார்த்தோம். எனவே நாடாளுமன்றத்தை சட்டப்படியே ஒத்திவைத்திருக்கின்றார்”.

“இம்முறை நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க அவருக்கு அதிகாரமில்லை. அவர் சட்டப்படி ஒத்திவைக்கவில்லை”.

இங்கு ஒன்றுக்கொன்று முரணான கூற்றுக்கள் இருக்கின்றன. இவற்றை சற்று ஆழமாகப் பார்ப்போம்.

தேசிய அரசாங்கம் கலைந்ததா?

ஜனாதிபதிக்கு சார்பான சிலர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெளியேறிவுடன், தேசிய அரசாங்கம் கலைந்துவிட்டது. அதனால் அமைச்சரவை கலைந்துவிட்டது. எனவே, பிரதமர் பதவியிழந்துவிட்டார் என்கிறார்கள். இது ஒரு அர்த்தமற்ற வாதம். பிரதமர் பதவி இழந்திருந்தால் பிரதமராக இருந்த ரணிலை நீக்கி, ஏன் ஜனாதிபதி கடிதம் அனுப்பினார்?

அரசியலமைப்பில் தேசிய அரசாங்கத்தைப்பற்றி சொல்லியிருப்பது என்னவென்றால், ஒரு சாதாரண அரசாங்கமாக இருந்தால் அமைச்சர்கள் 30 பேராக இருத்தல் வேண்டும். ராஜாங்க, பிரதி அமைச்சர்கள் 40 பேர் இருக்க வேண்டும். தேசிய அரசாங்கமாயின் எத்தனை பேரையும் நியமிக்கலாம்; கட்டுப்பாடு இல்லை. ஆனால் அதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளவேண்டும். பெரும்பான்மையுள்ள ஒரு அரசாங்கத்துக்கு அனுமதிபெறுவது சிரமமல்ல.

இங்கு அமைச்சர்களின் எண்ணிக்கைக்குத்தான் அனுமதி பெற வேண்டுமே தவிர, தேசிய அரசாங்கம் அமைப்பதற்கல்ல. தேசிய அரசாங்கம் அமைப்பதற்கும் நாடாளுமன்றத்திற்கும் அல்லது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. நீங்கள் தேசிய அரசாங்கத்தை அமைத்துவிட்டு 30 இற்குள் அமைச்சரவையை மட்டுப்படுத்துவதென்றால், தேசிய அரசாங்கம் அமைத்ததாக நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கவே தேவையில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்கத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெளியேறியது. எனவே, அது தேசிய அரசாங்கம் என்ற வடிவத்தை இழந்திருக்கின்றதே தவிர, அரசாங்கம் கலையவில்லை.

உதாரணமாக கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற ஆசனங்கள் 115 என வைத்துக்கொள்வோம். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பையும் சேர்த்து தேசிய அரசாங்கம் அமைக்கிறது. அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியையும் பெறுகின்றது என வைத்துக்கொள்வோம்.

இப்பொழுது அரசாங்கத்தை விட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெளியேறுகின்றது. 115 ஆனங்களைக்கொண்ட அரசாங்கம் கலையுமா? கலையாது. தேசியஅரசாங்கம் என்கின்ற தன்மையை மாத்திரம்தான் இழக்கும். அதன்விளைவாக அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆகக்குறைக்க வேண்டும். அதனை சரத்து 43இன் படி செய்யலாம். எனவே, அது பிழையான வாதம். தேசியஅரசாங்கத்தைப் பொறுத்தவரை அமைச்சர்களின் எண்ணிக்கையைத் தவிர (தேசிய அரசாங்கத்துக்கான வரைவிலக்கணம் உட்பட) வேறு எதையும் 19வது திருத்தம் குறிப்பிடவில்லை.

இங்கு பிரதமர் நீக்கப்பட்டது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெளியேற்றத்தினால் பெரும்பான்மை இழந்தமையினாலாகும்.

ஜனாதிபதியின் அபிப்பிராயம்

முன்னைய பதிவில் குறிப்பிட்டது போல, “ஜனாதிபதியின் அபிப்பிராயத்தில் பெரும்பான்மை” என்ற 42(4) இலுள்ள சொற்றொடரில், “அபிப்பிராயம்” என்பது objective opinion தானே தவிர subjective opinion அல்ல என்கின்ற வாதம் இருக்கின்றது. அதாவது சொந்த விருப்பத்திற்கெல்லாம் அபிப்பிராயம் உருவாக்க முடியாது. விருப்பு வெறுப்புகளுக்கப்பால் யதார்த்தத்தின் அடிப்படையில் அபிப்பிராயம் இருக்கவேண்டும் என்பதாகும்.

அது சரியான வாதம். ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெளியேற்றத்தோடு பிரதமரின் பலம் 107 ஆகக்குறைந்தது தெளிவானபோது, அது எவ்வாறு objective opinion இல்லாமலிருக்க முடியும்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு விட்ட பின்தான், அபிப்பிராயம் உருவாக்க வேண்டுமென்று சட்டம் கூறவில்லை. அது நாடாளுமன்றத்திற்குரிய வேலையாகும்; ஜனாதிபதிக்குரியதல்ல.

அதேநேரம் “ நீக்குதல்” என்ற சொல் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆங்கிலப் பிரதியிலிருந்தே நீக்கப்பட்டிருக்கின்றது. சிங்கள, தமிழ் பிரதிகளில் அந்தச்சொல் இருக்கிறது. இவ்வாறான பேதம் வருகின்றபோது, சிங்கள மொழியில் எவ்வாறு இருக்கின்றதோ அதையே ஏற்றுக்கொள்ள வேண்டும். அது 19 வது திருத்தத்திலும் சொல்லப்பட்டிருக்கின்றது.

எனவே, ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியது செல்லுபடியாகும்.

இங்கு எழுப்பப்படவேண்டிய கேள்வி, ரணிலை நீக்கியது செல்லுபடியானதா? என்பதல்ல. 107  நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ( வெளிப்படையாக ) இருந்த ரணிலுக்குப் பெரும்பான்மையில்லை என்பது ஜனாதிபதியின் அபிப்பிராயமாயின், மொத்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பபிடம் 95 நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இருந்தனர்.

பெரும்பான்மைக்கு 113 தேவை. எனவே 107 ஐக் கொண்டவரிடம் பெரும்பான்மை இல்லையென்பது ஜனாதிபதியின் அபிப்பிராயமானால், 95 ஐக் கொண்டவருக்கு பெரும்பான்மை இருக்கின்றது என்று ஜனாதிபதி எந்த அடிப்படையில் அபிப்பிராயம் கொண்டார்?

நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தல்

சரி ஏதோ ஒரு விதத்தில் அபிப்பிராயம் கொண்டார் எனக்கொள்வோம். நாடாளுமன்றத்தைக் கேட்டு அவர் அபிப்பிராயம் உருவாக்கத் தேவையில்லை. ஆனால், ஜனாதிபதியின் அபிப்பிராயத்தைப் பரீட்சிப்பதற்கும் அது பிழையென்றால் ஜனாதிபதி நியமித்தவரின் பதவியை இழக்க வைப்பதற்கும், நாடாளுமன்றத்திற்கு உரிமையையும் அதிகாரமும் இருக்கின்றது. அந்த உரிமையிலும் அதிகாரத்திலும் தலையிடுவதற்கு, அந்த அதிகாரத்தைச் செயற்படுத்துவதைத் தடுப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை.

இப்பொழுது நாடாளுமன்றை இம்முறை ஒத்திவைக்க அவருக்கு அதிகாரம் இருந்ததா? என்ற கேள்விக்கு வருவோம்.

அதிகாரம் (இறைமை) மக்களுடையதும் பிரிக்க முடியாததுமாகும். இதில் சட்டவாக்க அதிகாரத்தைப் நாடாளுமன்றத்திற்கும் நிறைவேற்றதிகாரத்தை ஜனாதிபதிக்கும் தம் நம்பிக்கையாளர் சபையாக குறித்த நோக்கங்களுக்காக பாவிப்பதற்கு மக்கள் வழங்கியிருக்கின்றார்கள்.

Power belongs to the people and is inalienable. People have vested the power in the different organs of government through the Constitution for those organs to exercise it in trust for the People.

எனவே, இங்கு பிரதமரைத் தெரிவுசெய்வதில் யாருக்குப் பெரும்பான்மை இருக்கின்றது என்று, விருப்பு வெறுப்புகளுக்கப்பால் அபிப்பிராயம் கொள்ளுகின்ற, அவரைப் பிரதமராக நியமிக்கின்ற அதிகாரத்தை மக்கள் ஜனாதிபதிக்கு வழங்கியிருக்கின்றார்கள்.

அந்த அபிப்பிராயம் சரியானதாதா? என பரீட்ச்சிக்கின்ற அதிகாரத்தைப் நாடாளுமன்றத்திற்கு மக்கள் வழங்கியிருக்கின்றார்கள். இதனைத்தான் checks and balances through the mechanism of separation of power என்று கூறுகின்றார்கள்.

இங்கு நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்ததன் மூலம், ஜனாதிபதியின் முடிவைப் பரிசீலிப்பதற்கு நாடாளுமன்றத்திற்கு மக்கள் வழங்கிய அதிகாரத்தை செயற்படுத்தாமல் தடுத்து வைத்திருக்கின்றார். நாடாளுமன்றத்திற்கு மக்கள் வழங்கிய அதிகாரத்தை செயற்படுத்தாமல் தடுப்பதற்கு ஜனாதிபதிக்கு மக்கள் அதிகாரம் வழங்கினார்களா?

இல்லாத அதிகாரத்தை அல்லவா இங்கு ஜனாதிபதி பாவித்திருக்கின்றார். நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கின்ற அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அது உண்மையான தேவை ஏற்படுகின்றபோது பாவிக்கப்படலாம். இங்கு நாடாளுமன்றத்திற்கு மக்கள் வழங்கிய அதிகாரம், ஒரு முக்கிய தருணத்தில் பாவிப்பதைத் தடுப்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சட்டவாக்கத்துறையின் அதிகாரத்தை நிறைவேற்றுத்துறை அதிகாரமானது, முடக்க முடியாது. இது மக்களின் இறைமையில் தலையிடுவதாகும்.

எனவே, பிரதமரை நீக்கியது அரசியலமைப்புக்கு முரணுமல்ல, இறைமை மீறலுமல்ல. ஆனால் நாடாளுமன்றத்தை இந்த சந்தர்ப்பத்தில் ஒத்திவைக்க ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை. இது ஒரு அதிகார துஷ்பிரயோகமாகும். துஷ்பிரயோகம் செய்வதற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. இது அப்பட்டமான இறைமை மீறலாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்