இலங்கை வைத்தியர்களுக்கு துருக்கியில் பயிற்சி: பிரதியமைச்சர் பைசல் காசிம் நடவடிக்கை

🕔 August 30, 2018
கப்பேறு, சிறுபிள்ளை பராமரிப்பு மற்றும் அவசர சிகிச்சை போன்ற பிரிவுகளில் இலங்கை வைத்திய அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு துருக்கி அரசாங்கம் முன்வந்துள்ளது.

இது தொடர்பான முதற் கட்ட பேச்சுவார்த்தை இலங்கையில் உள்ள துருக்கி நாட்டு தூதரக அதிகாரிகளுக்கும் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமுக்கும் இடையில் நேற்று புதன் கிழமை அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இப்பேச்சுவார்த்தையின்போது பல விடயங்களில் இணக்கம் காணப்பட்டது. அதன்படி, இலங்கை வைத்திய அதிகாரிகள் மற்றும் வைத்திய ஆலோசகர்களை துருக்கிக்கு அனுப்பி, அந்நாட்டில் வைத்து பயிற்சிகளை  வழங்குவதற்கும் அதேபோல் துருக்கி வைத்திய அதிகாரிகள் இலங்கைக்கு வந்து பயிற்சிகளை  வழங்குவதற்கும் இந்தச் சந்திப்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இச்சந்திப்பின்போது இலங்கைக்கான துருக்கி தூதரகத்தின் இரண்டாம் நிலை செயலாளர் ஹக்கான் தான், மூன்றாம் நிலை செயலாளர் நஸான் தேனீஸ், கல்வி மற்றும் பயிற்சி  வேலைத்திட்டத்தின் இணைப்பாளர் முஸ்தபா ஹசீம் பொலாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கை சுகாதாரத் துறையின் தரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் இலங்கை மக்களுக்கு தரமான சுகாதார வசதிகளை வழங்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும், இதுபோன்ற மேலும் பல திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் இதன்போது ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

(பிரதியமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்