மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு அமைச்சின் திட்டப் பணிப்பாளராக தௌபீக் நியமனம்

🕔 August 1, 2018

– மப்றூக் –

மீ
ள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளராக, ஐ.எல். தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று புதன்கிழமை அவர் தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அம்பாறை கச்சேரியில் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த நிலையிலேயே, மேற்படி பதவிக்கு ஐ.எல். தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனையை சொந்த இடமாகக் கொண்ட இவர், ஆங்கில ஆசிரியராக 1988ஆம் ஆண்டு தனது அரச பணியினை ஆரம்பித்தார்.

பின்னர் 1990ஆம் ஆண்டு திட்டமிடல் உத்தியோகத்தராக அம்பாறையில் பணியாற்றத் தொடங்கிய தௌபீக், சிறிது காலத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்று, பொத்துவில் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகங்களில் கடமையாற்றினார்.

அதன் பின்னர் ‘நெக்டெப்’ (வடக்கு கிழக்கு சமுதாய அபிவிருத்தி) திட்டத்தின் அம்பாறை மாவட்ட திட்டப் பணிப்பாளராக, 2004ஆம் ஆண்டிலிருந்து 2011ஆம் ஆண்டு வரை இவர் பணியாற்றினார்.

பிறகு 2011ஆம் ஆண்டிலிருந்து அம்பாறை மாவட்டக் கச்சேரியில் பிரதி திட்டப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த நிலையிலேயே,  தற்போது மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளராக ஐ.எல். தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments