பிரதமருக்கு எதிரான ஹரீஸின் அரசியல்; ‘குட்டு’ நாளை வெளிப்படும்

🕔 April 3, 2018

– முன்ஸிப் அஹமட் –

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அண்மைக்காலமாக கடுமையாய் விமர்சித்து வருகின்ற மு.காங்கிரஸ் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பாரா எனும் கேள்வி அரசியலரங்கில் எழுந்துள்ளது.

அம்பாறை நகரில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல்களால் சேதமடைந்த இடங்களை பார்வையிடாமல் ஒலுவில் பிரதேசத்துக்கு வந்து, அம்பாறை விவகாரம் தொடர்பில் பேசி விட்டுச் சென்ற பிரதமரை, ‘தைரியமற்ற ஒருவர்’ என்று, பிரதியமைச்சர் ஹரீஸ் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ‘அமைச்சர் தயா கமகேயின் அழுத்தத்துக்குப் பணிந்தே, அம்பாறை நகருக்கு ரணில் விக்ரமசிங்க செல்லவில்லை’ எனவும், அப்போது பிரதியமைச்சர் ஹரீஸ் குற்றம்சாட்டியிருந்தார்.

அதுமட்டுமன்றி, நாடாளுமன்றிலும் பிரதமரை விமர்சித்து ஹரீஸ் பேசியமையும் நினைவு கொள்ளத்தக்கது.

இவ்வாறான நிலையில், பிரதமரை உண்மையாகவே ஹரீஸ் விமர்சித்தாரா? அல்லது முஸ்லிம்கள் மத்தியில் தன்னை ஒரு ஹீரோவாகக் காட்டிக் கொள்ளும் அரசியலுக்காக, பிரதமரை விமர்சிப்பது போல நடித்தாரா என்பதை, தெரிந்து கொள்வதற்கான நேரம் கனிந்துள்ளதாகவும் அரசியலரங்கில் கூறப்படுகிறது.

முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதல் விவகாரத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க சரியாக நடந்து கொள்ளவில்லை என ஹரீஸ் முன்வைக்கும் விமர்சனங்கள், அரசியல் சித்து விளையாட்டுத்தனமானவை அல்ல என்றால்; பிரதமருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணையை ஹரீஸ் ஆதரிப்பார் என்றும், அரசியலரங்கில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும், பிரதியமைச்சர் ஹரீஸின் அரசியல் நேர்மை குறித்து நாளை அறிந்து கொள்ள முடியும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்