தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும், வேலை நிறுத்த போராட்டத்தில் இணைவு

🕔 February 28, 2018

– எம்.வை. அமீர் –

ல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசை வலியுறுத்தும் விதத்தில் இன்று புதன்கிழமை தொடக்கம்,  தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் பல்கலைக்கழக முற்றலில் ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.எம். நௌபர் தலைமையில் இடம்பெறுகின்றது.

குறித்த போராட்டத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் தற்காலிக மற்றும் சமயாசமய ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர்

இங்கு கருத்துத் தெரிவித்த ஊழியர் சங்கத்தலைவர் நௌபர்;

“பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்களால் 2016.07.27 முதல் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குளுவின் தலைவரால் கையெழுத்திட்டு வழங்கப்பட்ட உடன்பாட்டு கடிதத்தின் அடிப்படையில் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்மை அனைவரும் அறிந்ததே.

மேற்கண்ட உடன்பாட்டிற்கு இசைவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை, மற்றும் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் உயர்மட்ட பதவிகள் நிரப்பப்படுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமை என்பவற்றோடு, அப்பதவிகள் மூலம் நிறைவேற்றப்படவேண்டிய கடமைகளில் காணப்படும் சீரற்ற தன்மையை நிவர்த்தி செய்யும்படி  அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவால் வழங்கப்பட்ட அழுத்தத்தை கவனத்திற் கொள்ளாத்தன்மையை காணமுடிகின்றது.

எனவே அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் இணைந்த, ஒருங்கிணைந்த கூட்டுக்குழுவின் 2018 பெப்ரவரி 06ஆம் திகதி இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் முடிவில் இம்முடிவு எடுக்கப்பட்டதோடு, இம்முடிவானது 25.02.2018 அன்று கொழும்பு கட்புல அரங்க பல்கலைக்கழகத்தில்  இடம்பெற்ற நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னர் உறுதிசெய்யப்பட்டது.

இத்தீர்மானத்திற்கமைவாக 28.02.2018 புதன்கிழமை முதல் தென்கிழக்குப் பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் 25.02.2018 கொழும்பு கட்புல அரங்க பல்கலைக்கழகத்தில்  இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட சங்கப் பிரதிநிதிகள் அக்லந்துரையாடலில் 28.02.2018 புதன்கிழமை ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் கவனஈர்ப்பு போராட்டங்களை நிகழ்த்துவது என்றும் 02.03.2018 வெள்ளிக்கிழமை மீண்டும்  கொழும்பு கட்புல அரங்க பல்கலைக்கழகத்தில் அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு கூடி நிலமைகளை ஆராய்வதோடு பத்திரிகையாளர் சந்திப்பினை நிகழ்த்துவதும்.

வேலைநிறுத்தம் தொடருமாயின் 06.03.2018 செவ்வாய்கிழமை அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த போதனைசாரா பணியாளர்களும் கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு நோக்கி பேரணியாகச் சென்று அங்கு கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்