பிரதேச சபை கனவு

🕔 August 29, 2017

– ஏ.எல். நிப்றாஸ் –

றவும் பிரிவும் வாழ்வில் தவிர்க்க இயலா நியதிகள். தனிமனிதர்கள், குடும்பங்கள், மத்தியிலும் தேசங்களுக்கு இடையிலும் உறவுகள் வளர்வதும் பிரிவுகள் ஏற்படுவதும் பின்னர் சிலவேளைகளில் மீளத் துளிர்ப்பதும் உண்டு. ஆனால் சில உறவுகள் பௌதீக அடிப்படையில் பிரிவைச் சந்திக்கும். வேறுசில உறவுகள் ஆத்மார்த்த அடிப்படையில் பிரிவுகளை சந்திக்கும். இது யதார்த்தங்களன் விதி.

ஆட்சி அதிகாரத்தைப் பொறுத்தமட்டில் ஆட்புல எல்லைகளும் அதில் வாழும் மக்களும் ஆளுகைக்காக பிரிக்கப்பதும் உண்டு, பிரித்து ஆளப்படுவதும் உண்டு. பிரத்தியேகமான ஆளுகை ஒன்றுக்காக சுதந்திரமான பிரதேசங்களாக பிரிக்கப்படும் நிலப்பரப்புக்கள் பின்னொரு நாளில் ‘பிரித்தாளும் தந்திர’ அரசியலுக்காக பயன்படுத்தப்படுவதையும் நாமறிவோம்.

உலகில் முற்காலத்தில் ஒன்றாக இருந்த தேசங்கள் இரண்டு நாடுகளாக பிரிந்திரிக்கின்றன. இந்திய பெருநிலப்பரப்புக்குள் இருந்த இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் போன்றவை, அரபு தேசத்தின் நாடுகள் எனப் பல நாடுகள் பிரிந்ததை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இலங்கையில் மாகாணங்கள் பிரிந்திருக்கின்றன, ஊhர்கள் பிரிந்திருக்கின்றன. உள்ளுராட்சி மன்றங்கள் சேர்ந்தும் – பிரிந்தும் இருக்கின்றன. இந்தப் புன்புலத்தோடே இப்போது சர்ச்சைக்குரிய விவகாரமாக உள்ள சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை மற்றும் நுவரெலியாவில் புதிய பிரதேச சபைகளை உருவாக்கல் என்ற விடயத்தை நோக்க வேண்டியிருக்கின்றது.

இலங்கை அனுபவம்

இலங்கையில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட பிறகு வடக்கு,கிழக்கு என்ற இரு நிலப்பரப்புக்கள் வடகிழக்கு என்ற தனியொரு மாகாணமாக 19 வருடங்கள் இருந்தன. பின்னர் தனித்தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்டன. அதுபோல மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதற்குப் பிறகு முல்லைத்தீவு போன்ற ஓரிரு மாவட்டங்களும் ஒருபெரிய ஆட்புல எல்லையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தனி மாவட்டங்களாக பிரகடனம் செய்யப்பட்டன.

ஆரம்ப காலத்தில் இருந்த தேர்தல் தொகுதி மற்றும் உள்ள10ராட்சி மன்றக் கட்டமைப்புக்கள், ஆட்புல எல்லைகளில் இப்போது எத்தனையோ மாற்றங்கள் உருவாகியிருப்பதை நாம் காண்கின்றோம். கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்கள் அமைந்துள்ள அம்பாறை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், அம்பாறை என்ற தொகுதி உருவானது. நிந்தவூர் என்று உருவாக்கப்பட்ட தொகுதி இல்லாமலாக்கப்பட்டுள்ளது. அப்போதிருந்த அரசியல்வாதி ஒருவரின் நலனுக்காக அக்கரைப்பற்று என்ற ஊர் இரு தேர்தல் தொகுதிளாக பிரிக்கப்பட்டது.

அதுமாத்திரமன்றி, இந்த மாவட்டத்தில் ஒரே கிராம சபையாக, பிரதேச சபையாக இருந்த பிரதேசங்கள் வேறுவேறு உள்ளுராட்சி சபைகளின் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. உதாரணமாக, அக்கரைப்பற்று உள்ளுராட்சி மன்றத்திலிருந்து, திருக்கோவில், அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு பிரதேசங்கள் தனியாகப் பிரிந்து சென்றன. பிறகு அக்கரைப்பற்று மாநகர சபை உருவாக்கப்பட்ட போது அதில் ஒரு பகுதி தனியொரு பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டது. சம்மாந்துறை பிரதேச சபையின் கீழிருந்த இறக்காமம், நாவிதன்வெளி ஆகியன தனித்தனிப் பிரதேச சபைகளாக உருவாகின. நிந்தவூர்பற்று உள்ளுராட்சி சபையின் கீழிருந்த மாளிகைக்காடு, காரைதீவு, மாவடிப்பள்ளி பிரதேசங்கள் பிரித்தெடுக்கப்பட்டு பின்னர் காரைதீவு பிரதேச சபையாக பிரகடனப்படுத்தப்பட்டன.

மிக முக்கியமாக, முன்னொரு காலத்தில் கரவாகு வடக்கு, கரவாகு தெற்கு, கரவாகு மேற்கு கிராமாட்சி சபைகள் மற்றும் கல்முனை பட்டிண சபை என நான்கு உள்ளுராட்சி சபைகளாக இருந்த கல்முனை, சாய்ந்தருது உள்ளிட்ட முஸ்லிம் பிரதேசங்களையும் ஓரிரு தமிழ் கிராமங்களையும் ஒன்றாக இணைத்தே கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டது. பின்னர் அதுவே கல்முனை நகர சபையாக, மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டது. இவ்வாறு சேர்ப்பும் – பிரிப்பும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தேயிருக்கின்றது.

அந்த தொடரிலேயே இன்று கல்முனை மாநகர சபையில் இருந்து பிரிந்து தனியொரு பிரதேச சபையாக தமது பிரதேசத்தை உருவாக்குவதற்கு சாய்ந்தமருது மக்கள் விரும்புகின்றனர். இருப்பினும், அதனால் கல்முனைக்கும் அங்குள்ள முஸ்லிம்களிற்கும் ஏற்படக் கூடிய பாதக நிலைமைகளின் காரணமாக அவ்வாறான ஒரு பிரிப்பை மேற்கொள்ள வேண்டாமென கல்முனை மக்கள் சாய்ந்தமருதைப் பார்த்து கோரி நிற்கின்றனர்.

சாய்ந்தமருது பிரதேச சபையை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்ற நேரத்தில், ‘அதனை பிரிக்க வேண்டாம்’ என்ற குரல்களும், ‘பிரித்தே ஆகவேண்டும்’ என்ற குரல்களும் சற்று உரக்க ஒலிக்கத் தொடங்கியுள்ளன. விவாகரத்துச் செய்வதென தீர்மானித்த கணவனும் மனைவியும் நீதிமன்றத்திற்கு சென்ற பிறகு அங்குவைத்து கணவனோ மனைவியோ – பிரிவு வேண்டாம் சேர்ந்து வாழலாம் என்று ஒருவரை பார்த்து மற்றவர் கேட்பதை, இது ஞாபகப்படுத்துகின்றது.

சமகாலத்தில், நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக ஏழு உள்ள10ராட்சி சபைகளை உருவாக்குவதற்கான முஸ்தீபுகளும் இடம்பெற்றுள்ளன. இது விடயத்தில் மனமுடைந்து போன அமைச்சர் மனோகணேசன் உள்ளிட்ட குழுவினர், தம் முயற்சியில் சற்றும் மனம்தளராது கூட்டாக இணைந்து இறுதிக்கட்ட அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர். ஆனால், அங்கு புதிய சபையை பிரித்தெடுக்க வேண்டாம் என எந்தப் பிரதேச சபை மக்களும் தடுக்கவில்லை. அதற்கு காரணங்களும் உண்டு. எது எவ்வாறிருப்பினும் எல்லாத் தரப்பு மக்களின் அபிலாஷகளும் நடுவுநிலையுடன் நோக்கப்பட வேண்டும்.

சகோதர ஊர்கள்

கல்முனையும் சாய்ந்தமருதும் பாரம்பரிய உறவுகளை கொண்ட சகோதர ஊர்களாகும். சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவிற்குள் முஸ்லிம்கள் கிட்டத்தட்ட நூறுவீதமாக இருக்கின்ற போதும், கல்முனையில் தமிழ் மக்களும் கணிசமானளவுக்கு வாழ்கின்றனர். இவ்விரு பிரதேசங்களும் வர்த்தகர்களை பெருமளவுக்கு கொண்டவை என்றாலும் கூட கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வர்த்தகத்தில் சாய்ந்தமருது மக்கள் சமபங்கு ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர் எனலாம். தமிழர்களின் செல்வாக்கும் இருக்கின்றது.

இவ்வாறிருக்கையில், கல்முனை மாநகர சபையில் இருந்து பிரிந்து தனியொரு பிரதேச சபையாக உருவாக வேண்டும் என்ற உணர்வு பல வருடங்களாகவே சாய்ந்தமருது மக்களுக்கு இருந்து வந்தது. வியாபார போட்டி, அரசியல் களநிலை, தனித்தனி உள்ள10ராட்சி சபைகளாக இருப்பதல் கிடைக்கக் கூடிய நன்மைகள் என இதற்கு பல காரணங்கள் இருந்தன. கல்முனை மக்களும் அதிலுள்ள நியாயங்களை ஏற்றுக் கொண்டே இருந்தனர்.

பக்க விளைவுகள்

இந்த நிலையிலேயே, கல்முனை மாநகர சபையின் மேயராக முஸ்லிம் காங்கிரஸினால் நியமிக்கப்பட்டிருந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த சிராஸ் மீராசாஹிப் இரு வருடங்களுக்குப் பிறகு முன்னமே இணக்கம் காணப்பட்டதன் பிரகாரம் அப்பதவியில் இருந்து இராஜினாமாச் செய்ய வைக்கப்பட்டு, கல்முனையைச் சேர்ந்த நிசாம் காரியப்பர் மேயராக நியமிக்கப்பட்டார். மு.கா. தலைவர் மேற்கொண்ட இந்த சாணக்கிய நகர்வு வேறு ஒரு பக்கவிளைவை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.

அதாவது, சிராஸ் பதவியிறக்கப்பட்ட பின்னர் சாய்ந்தருதுக்கான பிரதேச சபை கோஷம் வலுவடைந்தது. சிராஸ் மு.கா.வில் இருந்து கட்சி தாவி தேசிய காங்கிரஸிற்கும் மக்கள் காங்கிரஸிற்கும் அவர் சென்ற வேளை சாய்ந்தமருதுக்கு தனிப் பிரதேச சபை என்ற கோஷமும் அவருக்குப் பின்னால் சென்றது என்றால் மிகையில்லை. எனவே, இப்போது சாய்ந்தமருது மக்களின் வாக்குகளை பெற வேண்டுமாயின் அல்லது அம்மக்களை திருப்திப்படுத்த வேண்டுமாயின் பிரதேச சபை ஒன்றை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகி விட்டது.

அந்த வகையில் அப்போது உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சராக ஏ.எல்.எம். அதாவுல்லா பதவி வகித்த போது அவரது கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு வரப்பட்டது. அவர், கல்முனை மாநகர சபையில் இருந்து தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்குமாக 4 புதிய நகர சபைகளை உருவாக்குவதற்கு திட்டமிட்டிருந்ததார். அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் தயாராகி இருந்தது. கடைசிநேரத்தில் தம்முடைய அரசியல் நலனுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடும் அழுத்தங்களை கொடுத்து அதை தடுத்ததாகவும் அதாவுல்லா பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

அதற்குப் பிறகு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் அண்மைக்காலத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதில் யார் இதற்காக அதிகம் பாடுபட்டது என்பதை மக்கள் அறிவார்கள். கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனால் சாய்ந்தமருதுக்கு அழைத்து வரப்பட்ட உள்ள10ராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவும், மு.கா. தலைவர் றவூப் ஹக்கீமால் கல்முனைக்கு அழைத்து வரப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ‘சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை வழங்கப்படும்’ என்ற வாக்குறுதியை மக்களுக்கு வழங்கிச் சென்றனர்.

இப்போது உள்ளுராட்சி சபை தேர்தல் ஒன்றை நாடு எதிர்நோக்கியிருக்கின்ற நேரத்தில், சாய்ந்தமருதுவுக்கான பிரதேச சபையை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட உள்ள10ராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் தோன்றியுள்ளன.

இருபக்க நியாயங்கள்

இவ்வாறு கடைசிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சமயத்தில், கல்முனையைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்களும் கணிசமான மக்களும் உஷாரடைந்திருக்கின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சாய்ந்தமருது தனியான பிரதேச சபையாக உருவாவதை எப்போதுமே கல்முனை மக்கள் எதிர்த்தவர்கள் இல்லை. அதற்காக பொறாமைப்படவும் தேவையில்லை. ஆனால், ஏனைய (தமிழர் செறிவு) பிரதேசங்கள் எல்லாம் கல்முனை மாநகர சபையின் கீழ் இருக்கத்தக்கதாக முழுமையாக முஸ்லிம்களைக் கொண்ட சாய்ந்தமருதை தனியாக பிரித்துக் கொடுப்பதால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் பற்றி அவர்கள் சிந்திப்பது நியாயமானதே.

இந்த அடிப்படையில், கல்முனை முக்கியஸ்தர்கள் குழுவொன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமையும் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனையும் ஒரே நாளில் சந்தித்து இதனது பாரதூரத்தன்மையை எடுத்துரைத்திருக்கின்றார்கள். தம்பக்கத்தில் எல்லாக் கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இவ்விடயம் சம்பந்தப்பட்ட அமைச்சரின் கைக்கு சென்று விட்டதால் இந்த வர்த்தமானி வெளியிடுவதற்தோ, அதனை தடுப்பதற்கு தமக்கு அதிகாரமில்லை என்ற தொனியில் அவர்களால் பதிலளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இருபக்கத்திலும் முயற்சிகள் நடக்கின்றன.

கல்முனை மக்கள் இவ்வாறு செயற்படுவதை அறிந்த சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘முன்னாள் உள்ளுராட்சி சபை அமைச்சர் 4 மன்றங்களை உருவாக்க முற்பட்டபோது அதை தடுத்தவர்கள் இன்று அதனையே கேட்கின்றனர். இப்புதிய சபை பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் என்றாலும் அது கல்முனையின் வீழ்ச்சிக்கு வித்திடும் என்ற கருத்தை விதைக்க முற்படுவது கவலையளிக்கின்றது. நாம் ஒற்றுமையாக வாழவே விரும்புகின்றோம். எனவே இதில் உள்ள நியாயங்களை ஏற்றுக் கொண்டு வழிவிட வேண்டும்’ என்ற குரலில் சாய்ந்தமருது பெரியபள்ளிவாசல் கோரிக்கை விடுத்திருக்கின்றது.

சாய்ந்தமருது பிரதேச சபையை நாம்தான் உருவாக்குகின்றோம் என்று இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் முண்டியடித்துக் கொண்டு பிரசாரம் செய்த போதும் இது விடயத்தில் ஒருவித அரசியல் தர்மசங்கட நிலை தற்சமயம் உருவாகியிருக்கின்றது. மக்கள் காங்கிரஸிற்கு சாய்ந்தமருதிலேயே அதிக வாக்குகள் இருப்பதாலும் முஸ்லிம் காங்கிரஸிற்கு கல்முனையில் அதிக ஆதரவு இருப்பதாலும் இந்நிலைமைக்குள் மு.கா.வே கடுமையாக சிக்கியுள்ளது எனலாம்.

பிரதேச சபை ஒன்றை உருவாக்குவதற்காக நடவடிக்கை எடுப்பதாக மு.கா., சாய்ந்தமருது மக்களுக்கு அவ்வாறான வாக்குறுதிகளை வழங்கி வந்தது. கல்முனை மக்களிடம் அதற்கு மாற்றமான கருத்துக்களை கூறியது. குறிப்பாக, பிரதியமைச்சர் ஹரீஸ், சாய்ந்தமருது மக்களுக்கு கல்முனை மக்களையும் சமாளித்துக் கொண்டு வந்தார்.

ஆனால் இப்போது மக்கள் காங்கிரஸிற்கு போட்டியாக, ‘மு.கா.வின் முயற்சியாலேயே புதிய பிரதேச சபை உருவாகின்றது’ என்று அவசரப்பட்டு அறிக்கை விட்டு சாய்ந்தமருது மக்களின் பாராட்டை பெற முயற்சி செய்தமையால் கல்முனை மக்களின் அதிருப்தியை மு.கா. எதிர்கொண்டுள்ளது. சமகாலத்தில் கல்முனை – சாய்ந்தமருது மக்களை இருபக்கம் சமாளிக்க வேண்டிய நிலை மு.கா.தலைவருக்கும், பிரதியமைச்சர் ஹரீஸிற்கும் மட்டுமன்றி மக்கள் காங்கிரஸ் தலைவருக்கும் ஏற்பட்டிருக்கின்றது எனலாம்.

நலன்களின் மோதல்

உலகம் எனும் மாபெரும் நிலப்பரப்பில் இருந்துதான் கண்டங்கள், நாடுகள் பிரிந்தன. நாடுகளில் மாகாணங்களும் மாவட்டங்களும் உருவாகின. ஓவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி நிர்வாக, ஆளுகை அலகுகள் தோற்றம்பெற்றன அந்த அடிப்படையிலேயே சாய்ந்தமருது மக்கள் தனியான ஒரு பிரதேச சபையை கோரி நிற்கின்றனர். இது வழக்கமானதும் நியாயபூர்வமானதுமான கோரிக்கையே என்பதில் இரு கருத்துக்கள் இருக்க முடியாது.

1980களின் பிற்பகுதி வரை கரைவாகு தெற்கு கிராமாட்சி சபையாக இருந்த சாய்ந்தமருது பிரதேசம் பின்னர் எவ்வித எதிர்ப்பையும் வெளியிடாமல் கல்முனை மாநகர சபை எல்லைக்குள் தன்னையும் உள்ளடக்கிக் கொண்டது. இத்தனை வருடங்கள் கல்முனை உள்ளுராட்சி மன்றத்தின் கீழ் சாய்ந்தமருது ஆளப்பட்ட அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டே தனியான பிரதேச சபை கோரும் முடிவுக்கு அம்மக்கள் வந்திருக்கின்றனர். இதற்கு பல நியாயங்கள் இருக்கின்றன.

ஆனால், கல்முனை மக்களின் பக்கத்திலும் நியாயங்கள் இல்லாமலில்லை. கல்முனை மாநகர சபையில் இருந்து சாய்ந்தமருது தனியாகப் பிரிந்து சென்றால் முஸ்லிம்களின் பெரும்பான்மைப் பலம் குறைவது உள்ளடங்கலாக பல பாதக சூழல்கள் ஏற்படும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அவ்வாறாயின், நான்கு உள்ளுராட்சி சபைகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிவோரும் உள்ளனர்.

இதேபோன்று, நுவரெலியா, அம்பகமுவ, வலப்பனை, கொத்மலை, ஹங்குராங்கெத்த ஆகிய 5 சபைகளின் ஆட்புல எல்லைக்குள் இலட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். முதல் இரு உள்ளுராட்சி சபைகளில் மாத்திரம் 2 இலட்சம் பேர் உள்ளனர். எனவே, இங்கு புதிய உள்ள10ராட்சி மன்றங்களை உருவாக்க வேண்டும் என்று மனோகணேசன் மற்றும் மலையக அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அதற்கு பிரதமர் சம்மதமும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், ‘எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் புதிய உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்க முடியாது’ என்ற கருத்தை தெரிவித்தார். இது நுவரெலியா மக்களுக்கு மட்டுமல்ல சாய்ந்தமருது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியையும் மீறும் செயலே. எனவே, மனோகணேசன் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். ஆனால் றவூப் ஹக்கீம் போன்றோர் தொடர்ந்தும் அங்கிருந்தனர் எனக் கூறப்படுகின்றது.

தேர்தலுக்கு முன்னர் புதிய பிரதேச சபைகளை உருவாக்க முடியாது என்று பிரதமர் கூறியதற்குப் பிறகு மலையக தலைவர்கள் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரை சந்தித்து உத்தரவாதங்களைப் பெற்றுக் கொண்;ட போதும் சாய்ந்தமருது விவகாரம் ஒருவித தேக்கநிலைக்கு வந்துள்ளது. சாய்ந்தமருதுக்கு புதிய பிரதேச சபை இப்போதைக்கு வழங்கக் கூடாது என்று அரச உயர்மட்டம் ஊடாக முக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள் ஓரிருவர் கடுமையாக அழுத்தம் கொடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.

இந்நிலைமைகள் மாற வேண்டும்;. பட்டின சபைக்குள் கிராம சபை மக்களை பெரும் மனம்கொண்டு உள்வாங்கிய கல்முனை மக்களின் கருத்துக்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். மறுபுறத்தில் அந்த பட்டின சபையோடு விருப்பத்தோடு இணைந்து, இன்று பிரிவேண்டுமென கோரும் சாய்ந்தமருது மக்களின் விருப்பங்களும் நிறைவேற்றப்பட வேண்டும். அதுபோலவே, நுவரெலியா மக்களின் அபிலாஷைகளும் புறந்தள்ளப்பட முடியாதவை. பிரிய வேண்டும் என கனவுகாணும் பிரதேசங்கள் இன்னும் 10 வருடங்களுக்குப் பிறகாவது பிரிந்தே தீரும் என்பதை மறந்து விடாமல் செயற்படுவது நல்லது.

மக்களின் கனவுகள், பகல் கனவாகிவிடக் கூடாது!

நன்றி: ஞாயிறு வீரகேசரி (27.08.2017)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்