கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவு தரமற்றது: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு

🕔 July 14, 2017

– எம்.ஜே.எம். சஜீத் –

றக்காமம் பிரதேச செயலகத்தினால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் போஷாக்கு உணவுப் பொருட்கள் தரமற்றதாகவும், சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியதாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்படும் புகார் தொடர்பில், உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம், இணைத்தலைவர்களான  பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோரின் தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இறக்காமம் பிரதேச செயலகத்தினால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் போஷாக்குப் பொதி தொடர்பான முறைகேடுகள் தொடர்பில், இணைத்தலைவரான பொறியியலாளர் எஸ்.எல் மன்சூர்  சபையில் பிரஷ்தாபித்தார்.

அண்மைக்காலமாக வழங்கப்பட்டு வரும் போஷாக்கு பொதியிலுள்ள உணவுப் பொருட்கள் பழுதடைந்தும், துர்நாற்றம் கொண்டதாகவும்,  சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியதாகவும் உள்ளன என்று, மக்கள் தன்னிடம் முறையிட்டதாக, பொறியலாளர் மன்சூர் கூறினார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் கருத்து தெரிக்கையில்;

“கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவுப் பொருட்கள் தரமாற்றதாக இருப்பதை அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்றார்.

இதற்கிணங்க, போஷாக்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் பிரதேச செயலகத்தின் கேள்வி சபையில் இப்பிரதேசத்தின் பிரதேச வைத்திய அதிகாரியையும் உள்ளீர்க்க வேண்டும் என்றும், இம்முறைகேடுகள் தெர்பில் உடன் விசாரணை நடத்தி முறைகேடுகள் இடம்பெற்றிருப்பின் தகுதி, தராதரம் பாராது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்