அவனை ஏன் தொழுகை நடத்த விட்டீர்கள்; ‘எவசைன்’ ஹாஜியாரிடம், ஹக்கீம் பாய்ச்சல்

🕔 July 13, 2017

– அஹமட் –

– 01 –
சாய்ந்தமருது பிரதேசத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வருகை தந்திருந்தார். இதன்போது, தனது அமைச்சின் கீழுள்ள லங்கா அசோக் லேலன்ட் நிறுவனத்தின் கிளையொன்றினை சாய்ந்தமருதில் அமைச்சர் திறந்து வைத்ததோடு, சாய்ந்மதருது ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ஜனாஸா சேவைக்கான வாகனமொன்றினையும் அன்பளிப்பாக வழங்கினார்.

அது தொழுகை நேரம் என்பதால் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலிலேயே அமைச்சர் தொழ வேண்டியேற்பட்டது. இதன்போது, அங்கு தொழுகைக்காக வந்தவர்கள், அமைச்சரை இமாமாக முன்னின்று தொழுகையை நடத்துமாறு கேட்டதாகவும், அதற்கிணங்க, அவரும் இமாமாக தொழுகையை நடத்தியதாகவும் சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவுகள் இட்டிருந்தமையைக் காணக் கிடைத்தது. இந்தப் பதிவுகளை இட்டோரில் சிலர், அமைச்சர் இமாமாக தொழுகை நடத்திய படங்களையும் பதிவிட்டிருந்தனர்.

– 02 –
சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலின் ஜனாஸா நலன்புரி சங்கத்தினுடைய தலைவராகப் பதவி வகிப்பவரின் பெயர் உதுமாலெப்பை. ஆனால், அவரை ‘எவசைன்’ ஹாஜியார் என்றால்தான் ஊரில் தெரியும். சில காலங்களுக்கு முன்னர் ‘எவசைன்’ எனும் பெயரில், ஓர் அச்சகத்தை இவர் நடத்தி வந்தார். அதனால், நிறுவனத்தின் பெயரே, அவர் பெயராயிற்று. இந்த மனிதர் முஸ்லிம் காங்கிரசின் உள்ளுர் முக்கியஸ்தர்.

– 03 –
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர்  ‘எவசைன்’ ஹாஜியார், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை கொழும்பில் சந்திக்கச் சென்றிருந்தார். இவரைக் கண்டதும், மு.கா. தலைவர் திடீரென கோபப்பட்டிருக்கிறார்.  ஹாஜியார் மீது பாய்ந்து விழுந்து திட்டியிருக்கிறார். “அவனை ஏன் இமாமாக தொழுகை நடத்த விட்டீங்க” என்று கேட்டு,  ‘எவசைன்’ ஹாஜியாரை, கடித்துக் குதறாத குறையாகக் கேட்டிருக்கிறார்.

தலைவரைச் சந்திக்கப் போன மனிதருக்கு ‘அஞ்சும் கெட்டு, அறிவும் கெட்டுப் போன’ நிலை. அந்த இடத்தில் ஆட்களும் இருந்ததால் மனுசன் வெட்கப்பட்டுப் போய் விட்டார். இருந்தாலும் தலைவருக்கு தன்னிலை விளக்கமளித்த ஹாஜயார்; “நாங்க தொழுகை நடத்தச் சொல்லல்ல சேர். நாங்க தொழுதுட்டு வந்துட்டம். பிறகு அங்கு வந்தவர்கள் அவரை இமாமாக தொழுகை நடத்தச் சொல்லிக் கேட்டாங்க. அதனால்தான் அவரு இமாமாக தொழுகை நடத்தினாரு” என்று, தன்னிலை விளக்கத்துடன், நடந்த விடயத்தையும்  ‘எவசைன்’ ஹாஜியார் கூறியிருந்தார். ஆனாலும், ஹக்கீமுக்கு கோபம் அடங்கவில்லை. ஜனாஸா சேவைக்காக அமைச்சர் றிசாட்டிடமிருந்து வாகனத்தை அன்பளிப்பாகப் பெற்றதும், ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு ‘எவசைன்’ ஹாஜியார்தான் தலைவர் என்பதும் ஹக்கீமுக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

– 04 –
ஹக்கீம் இப்படி தனது முகத்தில் பாய்ந்தது,  ‘எவசைன்’ ஹாஜியாருக்குப் பிடிக்கவில்லை. மனிதருக்கு அவமானமும் கவலையுமாகப் போயிற்று. நியாயப்படி பார்த்தால், முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக இருந்த சாய்ந்தமருதை, அமைச்சர் றிசாட்டிடம் பறிகொடுப்பதற்குக் காரணமாக இருந்த ஹக்கீமை,  ‘எவசைன்’ ஹாஜியார்தான் திட்டியிருக்க வேண்டும்.

ஆனாலும், ஹக்கீமை நேரடியாகத் திட்ட முடியாத  ‘எவசைன்’ ஹாஜியார், கொழும்பில் – தான் சந்தித்த நண்பர்களிடம், நடந்த விடயத்தைக் கூறி, ஹக்கீமை விளாசியிருக்கிறார்.

புதிது பேஸ்புக் பக்கம்