ஹீரோ

🕔 June 9, 2017

(மூத்த ஊடகவியலாளரும், ஓய்வு பெற்ற விரிவுரையாளரும், சாரணியத்துறையில் பல பதவிநிலைகளை வகித்தவருமான எம்.ஐ.எம். முஸ்தபா, நேற்று முன்தினம் காலமானார். அவரின் மரணத்துக்கு சில வாரங்களுக்கு முன்னர், அவருடன் இடம்பெற்ற உரையாடலின் தொகுப்பு இந்தக் கட்டுரையாகும் . கடந்த மாதம் 22 ஆம் திகதி இது எழுதப்பட்டது)

– மப்றூக் – 

மிக சிறந்ததொரு சாரணிய செயற்பாட்டாளராகவும், அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் விரிவுரையாளராகவும்தான் எம்.ஐ.எம். முஸ்தபாவை சில ஆண்டுகளுக்கு முன்புவரை நமக்குத் தெரியும். அவர் ஓர் ஊடகவியலாளராகவும் இருந்தார் என்பதை அறிந்து கொண்டபோது ஆச்சரியமாக இருந்தது. அதுவும், அம்பாறை மாவட்டத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய தொகையினர் மட்டுமே, தமிழில் பிராந்திய ஊடகவியலாளர்களாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், எம்.ஐ.எம். முஸ்தபாவும் ‘வீரகேசரி’ பத்திரிகையின் கல்முனை பிராந்திய நிருபராகப் பணியாற்றினார் என்பது, நமக்கு அப்போது புதிய தகவலாக இருந்தது.

எம்.ஐ.எம். முஸ்தபா இப்போது ஊடகங்களுக்கு எழுதுவதில்லை. ஆனால், 1965ஆம் ஆண்டு தொடங்கி, கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலங்கள் எழுதுவதையே வாழ்க்கையாகவும், அதனையே வருமான வழியாகவும் கொண்டிருந்தார்;. ‘பிறகு என்னாயிற்று’ என்று கேட்டோம், ‘ஊடகவியலாளர் தொழிலை ராஜிநாமா செய்து விட்டேன்’ என்று சொல்லி சிரித்தார். அது நடந்தது 1982ஆம் ஆண்டு. அந்தக் கதைக்கு பிறகு வருவோம்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை, அண்மையில் ஆளுமைகள் சிலரைக் கௌரவித்திருந்தது. அவர்களில் எம்.ஐ.எம். முஸ்தபாவும் ஒருவர். ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காக நினைவுச் சின்னம் மற்றும் பொற்கிளி வழங்கி – இவர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த பாதைகள்

எம்.ஐ.எம். முஸ்தபா 1945ஆம் ஆண்டு பிறந்தவர். 72 வயதாகிறது. சாரணிய உடையுடன் சுறுசுறுப்பான ஒரு ‘ஹீரோ’வாக வலம் வந்தவர். இப்போது சற்று நோய்வாய்ப்பட்டுள்ளார். ஆனாலும், அவரைச் சந்தித்த ஒரு மாலைப் பொழுதில், பழைய நினைவுகளை ஆர்வத்தோடு நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

முஸ்தபா – பன்முக ஆளுமை கொண்டவர். 60 வருடங்களாக சாரணிய பணியில் கோலோச்சி வருபவர். சாரணிய மாவட்ட ஆணையாளராகவும் பதவி வகித்துள்ளார். சிறந்த சாரணிய பணிக்காக 03 தடவை ஜனாதிபதி விருது பெற்றுள்ளார். அம்பாறை மாவட்டத்தில் சாரணியர் பயிற்சி முகாம்கள் எங்கு நடந்தாலும், அந்த முகாமின் பொறுப்பாளராகவும், நெறிப்படுத்துநராகவும் முஸ்தபா இருந்துள்ளார்.

இன்னொருபுறம், 30 வருடங்கள் ஆசிரியத்துறையிலும் பணியாற்றியுள்ளார். உதவி ஆசிரியர், ஆசிரியர், அதிபர் என, அந்தத் துறையில் வளர்ந்தவர், இறுதியாக, அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

இவற்றுக்கு இடையில்தான் ஓர் ஊடகவியலாளராக இந்தக் கட்டுரையில் முஸ்தபாவை நாம் சந்திக்கப் போகின்றோம்.

ஊடகவியலாளர்

‘1965ஆம் ஆண்டு, தொழில்கள் எவையும் இல்லாமல் இருந்த காலம். அப்போதுதான் வீரகேசரியின் கல்முனை பிரதேச நிருபராக நியமனம் கிடைத்தது. வீரகேசரியிலிருந்து கிடைக்கும் வருமானம் ஆறுதலாக இருந்தது. நான் எழுதி பிரசுரமாகும் செய்திகளுக்கு கொடுப்பனவு வழங்கிக் கொண்டிருந்த வீரகேசரி நிறுவனம், ஒரு காலகட்டத்தில் மாதச்சம்பளம் வழங்கி, என்னை எழுதச் சொன்னது’ என்று, தனது ஊடகத்துறையின் ஆரம்ப நாட்களை முஸ்தபா நினைவு கூர்ந்தார்.

‘தமிழ் – முஸ்லிம் கலவரம், லிற்றா கப்பல் விவகாரம் மற்றும் சூறாவளி உள்ளிட்டவை பற்றி வீரகேசரியில் தொடர்ச்சியாக நான் எழுதிய செய்திகளும், அந்தச் செய்திகளை அனுப்புவதற்காக எடுத்துக் கொண்ட சிரமங்களும் மறக்க முடியாதவை’.

‘அது என்ன லிற்றா கப்பல்’ – தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்டோம்.

‘லிற்றா என்பது கிரேக்க நாட்டுக் கப்பல். கடலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளான அந்தக் கப்பல், கல்முனை கடற் பிரதேசத்தில் ஒதுங்கியது. கப்பலில் இருந்தவர்கள் தப்பித்து கல்முனைக்கு வந்தனர். இது எனக்கு நல்ல செய்தியாக அமைந்தது. லிற்றா கப்பல் குறித்தும், அது விபத்துக்குள்ளானமை தொடர்பிலும் நிறைய எழுதினேன். மேலும், அந்தக் கப்பலிலிருந்து தப்பித்தவர்களைப் பேட்டி கண்டு, அவற்றினையும் செய்தியாக்கினேன். அந்தச் செய்திகளை முன்னுரிமை வழங்கி வீரகேசரி பிரசுரித்தது’ என்றார் முஸ்தபா.

இந்த இடத்தில் முஸ்தபாவின் கல்வி மற்றும் பாடசாலைக் காலம் பற்றிச் சொல்ல வேண்டியுள்ளது.

படிப்பு

முஸ்தபாவின் சொந்த ஊர் கல்முனை. இவர் தனது கல்வியை கல்முனை வெஸ்லி கல்லூரியில் ஆங்கி மொழி மூலம் பெற்றார். அதனால், ஆங்கிலத்தில் முஸ்தபாவுக்கு நல்ல புலமையுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பும் முஸ்தபாவும் சிறுவயது நண்பர்கள். தான் ஊடகவியலாளராக செயற்பட்ட காலங்களில், சட்டத்தரணியாக அஷ்ரப் ஆஜரான வழக்குகள் பற்றி, ஏராளமான செய்திகளை எழுதியதாக முஸ்தபா சொல்கிறார்.

‘இப்போதுள்ள நவீன தொலைத் தொடர்பு வசதிகள் அப்போது இருக்கவில்லை. அவசர செய்திகளை தந்தி மூலமும், ஏனைய செய்திகளை சாதாரண தபாலிலும் அனுப்புவோம். அதற்கான கட்டணங்களை நாங்கள் செலுத்துவதில்லை. வீரகேசரி நிறுவனம் எமக்கு ஓர் அட்டை வழங்கியிருந்தது. அதனை தபாலகத்தில் காண்பித்தால் எம்மிடம் கட்டணம் அறவிட மாட்டார்கள். மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்லும் புகையிரதத்திலும் செய்திகளைக் கொடுத்து அனுப்புவோம். அஷ்ரப்பிடம் அப்போது கார் இருந்தது. அவர் மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு தொழில் நிமித்தம் அந்தக் காரில்தான் செல்வார். அப்போது, அவருடன் நானும் இணைந்து கொள்வேன். அவரின் காரிலேயே பயணித்து, கொழும்பு செல்லும் புகையிரதத்தில் எனது செய்திகளைக் கொடுத்தனுப்புவேன்’ என்று கூறும் முஸ்தபாவிடம், அஷ்ரப் பற்றியும், அவரின் அரசியல் கட்சி தொடர்பாகவும் ஏராளமான கதைகள் உள்ளன. அவற்றினையெல்லாம் இங்கு எழுதினால், இது ஓர் அரசியல் கட்டுரையாக மாறி விடும் என்பதால், அவை இங்கு வேண்டாம்.

பதிவுகள்

1978ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வீசிய சூறாவளி மறக்க முடியாதது. அந்தச் சூறாவளி பற்றிய செய்திகளை சேகரித்து அனுப்பிய அனுபவங்களை நம்மிடம் முஸ்தபா பகிர்ந்து கொண்டார். ‘சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளை செய்தியாகச் சேகரித்தேன். அப்போது கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர் இந்தப் பகுதிக்கு வந்தது. அது வெஸ்லி கல்லூரி மைதானத்தில் தரையிறங்கியது. அந்த ஹெலிகொப்டர் புறப்படும்போது எனது செய்திகளை விமானியிடம் கொடுத்தனுப்புவேன். இந்த ஏற்பாட்டினை வீரகேசரி செய்திருந்தது’ என்று கூறும் முஸ்தபா, அவ்வாறு அனுப்பி வைத்த செய்திகள், மறுநாள் வீரகேசரியின் முன்பக்கத்தில் வெளிவந்திருந்தமையினையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

ஊடகத்துறையில் ஈடுபடுகின்றவர்களுக்கு, அதனூடாக கிடைக்கும் வருமானத்தை விடவும், அவர்களின் செய்திகளும், படைப்புக்களும் ஊடகங்களில் வெளியாகும் போது கிடைக்கும் ஆத்ம திருப்திதான் பெரிதாகவும் – நிறைவாகவும் தெரியும். முஸ்தபாவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, இதனை அதிகமாகவே கண்டு கொள்ள முடிந்தது.

‘எழுதிய காலப்பகுதியில் சிக்கல்களுக்கு முகம் கொடுத்ததில்லையா? அவற்றினை எப்படிச் சமாளித்தீர்கள்?’ என்று கேட்டோம்.

‘அடங்காத் தமிழன் என்று அழைக்கப்பட்ட அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரலிங்கத்தை ஒரு முறை பேட்டியெடுத்துக் கொண்டிருந்தேன். எனது கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க, அவற்றினை குறித்துக் கொண்டிருந்தேன். அப்போது, நான் எழுதியவற்றினை வாசிக்குமாறு கூறினார். வாசித்தேன். அவருக்கு அதில் திருப்தியில்லை. அவரின் மொழி வழக்கிலேயே, அவருடைய பதில்களை எழுத வேண்டும் என்றார். சரி என்றேன். ஆனால், பொதுவான தமிழில்தான் அவரின் பதில்களை எழுதி – பேட்டியாக்கினேன். சில சிக்கல்களை இப்படித்தான் சமாளிக்க வேண்டியிருந்தது.

செய்திகளை மட்டும் எழுதுவதுடன் பத்திரிகை நிருபரின் பணிகள் நிறைவடைந்து விடுவதில்லை என்கிறார் முஸ்தபா. ‘பத்திரிகையாசிரியருக்கும் நிருபர்களுக்குமிடையில் அப்போது நல்ல உறவு இருந்தது. வீரகேசரி வாரமலரின் ஆசிரியராக அப்போது ராஜகோபாலன் பணியாற்றினார். என்னிடமிருந்த ஒரு யோசனையை அவரிடம் கூறினேன். கவிதைச் சமர் ஒன்றினை பத்திரிகையில் ஆரம்பிப்பதுதான் எனது யோசனையாகும். கல்முனை பிராந்தியத்தில் அப்போது புகழ்பெற்ற கவிஞர்கள் இருந்தனர். அவர்களை எழுத வைத்து வாரா வாரம் ஒவ்வொரு கவிஞரின் கவிதையினையும் பிரசுரிப்பதெனவும், அந்தப் பகுதிக்கு ‘சந்தாங்கேணி போர்’ என பெயரிடுவதெனவும் ஆசிரியரிடம் கூறினேன். சந்தாங்கேணி என்பது கல்முனையிலுள்ள பிரபலமானதொரு இடமாகும்.

எனது யோசனையினை உடனடியாக பத்திரிகையாசிரியர் ராஜகோபாலன் ஏற்றுக் கொண்டார். கல்முனை பிராந்தியத்தின் புகழ்பெற்ற கவிஞர்களான நீலாவணன், பாண்டியூரான், ஜீவா ஜீவரட்ணம், அன்பு முகைதீன், மருதூர்கனி, மருதூர்கொத்தன் மற்றும் மு. சடாட்சரன் ஆகியோரிடம் கவிதைகளை தேவையான தலைப்புக்களில் எழுதி வாங்கி, வாரா வாரம் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். அந்தப் பகுதியின் தொகுப்பாளராக பத்திரிகையில் எனது பெயர் இடம்பெற்றது’ என்று சொல்லி முடித்த போது, மூத்த ஊடகவியலாளர் முஸ்தபாவின் முகத்தில் ஒரு திருப்தியைக் காண முடிந்தது.

பிராந்திய ஊடகவியலாளராக – தான் பணியாற்றிய காலப் பகுதியில் சலீம், சிவப்பிரகாசம், கணபதிப்பிள்ளை, மிஸ்கின், எச்.எல். காரியப்பர், ஹமீட், சலாம் மற்றும் பகுர்தீன் உள்ளிட்ட சிலர் மட்டுமே அம்பாறை மாவட்டத்தில் தமிழில் எழுதும் பிராந்திய ஊடகவியலாளர்களாக இருந்தனர் என்பதை, முஸ்தபா நினைவுபடுத்திச் சொன்னார். கல்முனை பத்திரிகையாளர் சங்கம் எனும் பெயரில் பிராந்திய ஊடகவியலாளர்கள் இணைந்து செயற்பட்டதாகவும், அந்த சங்கத்துக்கு சலாம் தலைவராகவும், தான் செயலாளராகவும் இருந்து பணியாற்றியதாகவும் முஸ்தபா கூறினார்.

தான் எழுதியவற்றில் குறித்துச் சொல்லத்தக்க பல விடயங்கள் உள்ளன என்கிறார் முஸ்தபா. ‘விபுலாநந்தர் எங்கே பிறந்தார் என்பது தொடர்பில் சர்ச்சையொன்று ஏற்பட்டது. அதனையடுத்து, விபுலாநந்தரின் பிறந்த இடத்தை உறுதிப்படுத்தும் வகையில் எழுதுமாறு, வீரகேசரி ஆசியர் பீடத்தினர் கேட்டுக்கொண்டனர். விபுலாநந்தரின் பிறந்த இடமான காரைதீவுக்கு நான் சென்று, அவரின் உறவினர்களைச் சந்தித்துப்பேசி, அவற்றினை எழுதினேன். அது மறக்க முடியாத அனுபவமாகும்’ என்றார்.

பன்முகம்

விளையாட்டுத்துறையிலும் எம்.ஐ.எம். முஸ்தபா – ஒரு கால கட்டத்தில் கலக்கியிருக்கின்றார். உதைப்பந்து, குறுந்தூர ஓட்டம் மற்றும் பேஸ் போல் (Base Ball) போன்ற ஆட்டங்களில் இவர் மிகவும் திறமையானவர். இவரின் உதைப்பந்தாட்ட திறமையினையும், அந்தத் துறைக்காக இவர் ஆற்றிய பணியினையும் மதிக்கும் வகையில், இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் இவரைக் கௌரவித்துள்ளது. 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் குறுந்தூர ஓட்டப் பந்தையங்களில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று, அகில இலங்கை மட்டப் போட்டிகளில் இவர் கலந்து கொண்டுள்ளார். பேஸ் போல் விளையாட்டிலும் இவர் திறமையானவர்.

‘பேஸ் போல் விளையாட்டுக்குள் நான் நுழைந்ததே, சுவாரசியமான ஒரு கதையாகும். கல்முனை பற்றிமா கல்லூரியில் நான் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த காலமது. அப்போது, டெய்லி நியுஸ் பத்திரிகையில் ஒரு விளம்பரத்தைக் கண்டேன். இலங்கையில் பேஸ் போல் விளையாட்டினை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், ஆர்வமுள்ளோர் தம்மைத் தொடர்புகொள்ளுமாறும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விளம்பரம் செய்திருந்தது. எமது கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் கலாநிதி மத்தியுவிடம் அந்த விளம்பரத்தைக் காட்டினேன். அவர் உடனடியாக என்னை கொழும்பு புறப்படுமாறு கூறினார். என்னுடன் அவரும் வந்தார். இருவரும் அமெரிக்க தூதுவராலயம் சென்று, என்னை பதிவு செய்து கொண்டோம். பின்னர், பேஸ் போல் விளையாட்டு தொடர்பில், அமெரிக்க தூதரகத்தினால் எமக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இதனையடுத்து கிழக்கு மாகாணத்தின் முதலாவது பேஸ் போல் பயிற்றுநரானேன். கல்முனை பற்றிமா கல்லூரியில் பேஸ் போல் விளையாட்டு அணியொன்றினையும் உருவாக்கினோம். பேஸ் போல் விளையாட்டுக்கான சாதனங்களை எமக்கு அமெரிக்கத் தூதரகம் வழங்கியது’ என்று சொல்லி முடித்த முஸ்தபா, தமது கல்லூரிக்கு அமெரிக்க தூதுவராலயத்தினால் வழங்கப்பட்ட பேஸ் போல் விளையாட்டுச் சாதனங்களுடன் தொடர்புபட்ட இரண்டு கதைகளை நம்மிடம் சொன்னார். அந்தக் கதைகள் அதிர்ச்சியானவை, வெட்கம் கெட்டவை. அந்தக் கதைகள் எழுதப்பட வேண்டியவை. ஆனாலும், அவற்றினைச் சொல்லுவதற்கு முன்பாகவே, ‘இவற்றினை எழுதக் கூடாது’ என்று, மூத்த ஊடகவியலாளர் முஸ்தபா நம்மிடம் உறுதிமொழி வாங்கி விட்டார்.

இந்தக் கட்டுரை முழுக்கவும் ‘முஸ்தபா’ என்று அவரை நாம் குறிப்பிட்டாலும், ‘முஸ்தபா சேர்’ என்றுதான் அவரை நாம் அழைப்போம். நாம் அறிந்த வரையில் அவரை அநேகமானோர் அப்படித்தான் அழைப்பார்கள்.

அம்பாறை மாவட்டத்தில் இவரை அறியாதோர் என எவரும் இருக்க முடியாது. ஒரு சாரணிய செயற்பாட்டாளராக, ஓர் ஆசிரியப் பணி செய்தவராக, ஊடகவியலாளராக என்று, ஏதோ ஒரு வகையில் இவர் எல்லோருக்கும் தெரிந்தவராக இருக்கின்றார்.

ஊடகத்துறையில் இவர் ஆற்றிய பணியினைக் கௌரவித்து, 2013ஆம் ஆண்டு கலாபூசணம் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

‘ஊடவியராளராக ஏன் உங்கள் பணியினைத் தொடர முடியாமல் போயிற்று’ என்று கேட்டோம். ‘1979ஆம் ஆண்டு, உதவி ஆசிரியராக எனக்கு நியமனம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 1982ஆம் ஆண்டு பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் சில ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டியிருந்தது. அதனால், எனது பிரதேசத்து செய்திகளை என்னால் எழுத முடியாத நிலைவரம் உருவானது. எனவே, நிலைமையினை எனது ஆசிரியர் பீடத்துக்குத் தெரியப்படுத்தி விட்டு, எனது ராஜிநாமாக் கடிதத்தை அனுப்பி வைத்தேன்’ என்றார்.

ஊடகத்துறையில் மட்டுமன்றி, இலக்கியத்திலும் இவருக்கு ஈடுபாடு உள்ளது. கல்முனை எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர்களான நீலாவணன், எம்.ஏ. நுஃமான் மற்றும் மருதூர்கொத்தன் உள்ளிட்ட புகழ்பெற்ற இலக்கியவாதிகளுடனான தொடர்புகள் அவரின் இலக்கிய ஈடுபாட்டினை ஊக்குவித்தது.

1960ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘விவேகி’ எனும் சஞ்சிகையில் வெளியான தனது கவிதையொன்றினை நமது சந்திப்பின்போது, ஞாபகத்தில் வைத்துச் சொன்னார் முஸ்தபா.

‘தேன் போன்ற மொழியுடையாள் சிறு தேனி போல பறந்திடுவாள் மான்போல துள்ளிடுவாள் என்னை மீன் போல துடிக்க வைத்தாள்…’ என்று தொடர்கிறது அந்தக் கவிதை.

‘காதல் திருமணமா சேர்’ என்று கேட்டோம். ‘சொந்தத்தில் பேசி முடித்தது’ என்று சொல்லிச் சிரித்தார்.

நன்றி: விடிவெள்ளி (09 ஜுன் 2017)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்