மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஊடகவியலாளர் மப்றூக்; ஹக்கீமுக்கு ஏற்பட்டுள்ள பாரிய தலைவலி

🕔 March 29, 2017

– நவாஸ் –

முஸ்லிம் காங்கிரசை கடுமையாக விமர்சித்து எழுதுகின்ற ஊடகவியலாளர் ஒருவருக்கு, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர்தான் முக்கிய தகவல்களை வழங்குவதாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் குற்றம் சுமத்தினார்.

கட்சியின் முக்கிய கூட்டங்கள் நடைபெறும்போது, குறித்த ஊடகவியலாளருக்கு சம்பந்தப்பட்ட உயர்பீட உறுப்பினர் தனது கைத்தொலைபேசியிலிருந்து அழைப்பெடுத்து, கூட்டங்களில் பேசப்படும் விடயங்களைக் கேட்கும்படி செய்வதாகவும் மு.கா. தலைவர் மேலும் கூறினார். எவ்வாறாயினும், அந்த ஊடகவியலாளர் யார் என தனக்குத் தெரியும் என்றும் மு.கா. தலைவர் ஹக்கீம் குறிப்பிட்டார்.

இருந்தபோதும், அந்த ஊடகவியலாளர் மற்றும் உயர்பீட உறுப்பினர்களின் பெயர்களை மு.கா. தலைவர் கூறவில்லை.

இதன்போது எழுந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம். ஜவாத்;

“தலைவர் என்னைப் பற்றிப் பேசுகிறீர்களோ என அச்சப்படுகிறேன். ஊடகவிலாளர் மப்றூக் எனது நண்பர். அவருக்கும் எனக்கும் நட்புறவுண்டு. ஆனால், இப்போது தலைவர் கூறியது போன்ற இழிவான வேலைகளை, ஆண்டவன் மீது சத்தியமாக, ஒதுபோதும் நான் செய்ததில்லை. எனக்கு தலைவருடன் ஏதாவது முரண்பாடுகள் இருந்தால், அவை குறித்து நேரடியாகவே தலைவரின் முகத்தின் முன்னால் எனக்குப் பேச முடியும். எனது கருத்துக்களை அப்படித்தான் நான் வெளியிட்டு வருகிறேன்.

அட்டாளைச்சேனையைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவுள்ளதாக பேசப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படுமாயின் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீருக்குகே அது வழங்கப்படும் என்றும் கதைகள் உலவுகின்றன. அப்படி நசீருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டால், அவர் வகிக்கும் சுகாதார அமைச்சர் பதவி ஜவாத்துக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதை ஜீரணித்துக்கொள்ள முடியாத, அமைச்சுப் பதவிகளுக்குப் பின்னால் அலைகின்ற ஒருவர்தான்  – ஊடகவியலாளர் மப்றூக்குக்கும் எனக்குமிடையிலான நட்பினை இப்படி முடிச்சிட்டு உங்களிடம் கூறியிருக்க வேண்டும். ஆனால், நீங்கள் கூறுகின்றமை போல் இல்லை” என்றார்.

இதன்போது பேசிய மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்; நான் கூறிய உயர்பீட உறுப்பினர் நீங்கள் இல்லை ஜவாத்” என்றார்.

எது எவ்வாறாயினும், மு.காங்கிரசின் உயர் மட்டக் கூட்டங்களில் பேசப்படுகின்ற மிக ரகசியமான விடயங்களைக் கூட, ஊடகவியலாளர் மப்றூக் – தனது எழுத்துகளில் அம்பலப்படுத்துகின்றமையானது, மு.கா. தலைவருக்கு பாரிய தலைவலியை ஏற்படுத்தியிருப்பதாக, கட்சியின் முக்கியஸ்தர்கள் இதன்போது பேசிக் கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்