வர்தாவின் கோரம்; இயல்பு நிலையை இழந்தது சென்னை

🕔 December 12, 2016

vartha-033‘வர்தா’ புயல் காரணமாக தமிழகத்தின் சென்னை நகரில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மீட்புப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்பு ஏற்பட்டமையினால் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

‘வர்தா’ புயலின் மையப்பகுதி இன்று திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை துறைமுகம் பகுதியில் கரையைக் கடந்தது. இந்தப் புயல் இப்போது கிழக்குப் பகுதியைக் கடந்துகொண்டிருக்கிறது. மாலை 6.30 மணியளவில் புயல் முற்றிலும் கடந்துவிடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் மாலை 05 மணியளவில் தெரிவித்திருந்தது.

காற்றின் வேகம் மணிக்கு 70-ல் இருந்து 80 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்றும் இது 100 கிலோமீட்டர் வரை அதிகரிக்க சந்தர்ப்பம் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில் பிற்பகல் 3.20-ல் இருந்து 4.20 வரை சற்று அமைதி நிலவி வந்த நிலையில், மீண்டும் புயலின் தாக்கம் அதிகரித்திருந்ததோடு, கடுமையான மழையும் நீடிக்கிறது.

இதன் காரணமாக, சென்னையின் இயல்பு வாழ்க்கை முடங்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான மரங்கள் விழுந்த நிலையில், அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. vartha-022 vartha-044

Comments

புதிது பேஸ்புக் பக்கம்