
கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றிற்கான தேர்தல்களை நடத்துவது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள், எல்லை நிர்ணய செயல்முறை நிறைவடைந்த பின்னரே அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய பணிகள் இன்னும் முழுமையடையவில்லை என்று – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியுள்ளார்.
கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபையின் செயல்பாடுகள் – அடுத்த ஆண்டு மார்ச் 15-ஆம் திகதி முதல் தொடங்கும் என, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் மற்றும் நகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்த வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் 13-ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இருப்பினும், இந்த இரண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேர்தல்களை நடத்துவதற்கு முன்னதாக, எல்லை நிர்ணய பணிகளை நிறைவு செய்து, தேர்தல் வட்டாரங்களை வரையறுக்க வேண்டியது அவசியம் என்று தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதற்காக தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் இரண்டு எல்லை நிர்ணய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அவற்றின் அறிக்கைகளின் அடிப்படையில் தேர்தல் தொகுதிகளும், வட்டாரங்களும் அறிவிக்கப்படும்.
கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை தேர்தல்களுக்கான வேட்புமனுக்களைக் கோரும் திகதி, தேர்தல் தொகுதிகளை வரையறுப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்னரே அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.



