தலைப்புச் செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய ஆலய பூசாரிக்கு வழங்கப்பட்ட தண்டனையை, மேன்முறையீட்டு நீதிமன்றம் குறைத்தது

முல்லைத்தீவில் 17 வயது சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காகத் தண்டனை பெற்ற இந்து ஆலய பூசாரி ஒருவருக்கு, வவுனியா மேல் நீதிமன்றம் விதித்த 17 ஆண்டுகாலக் கடூழிய சிறைத்தண்டனையை, மேன்முறையீட்டு நீதிமன்றம் 13 ஆண்டுகளாகக் குறைத்துள்ளது. அதேவேளையில், அவர் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நித்தியானந்தன் மோகன் ராஜ் என்ற அந்த நபர், 2011-ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் நடந்த இந்தச் சம்பவத்திற்காக, வவுனியா மேல் நீதிமன்றத்தினால் 17 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

வன்புணர்வுக்குள்ளான சிறுமி, இடம்பெயர்ந்த நிலையில் கல்வி பயின்று வந்தவர் என்றும், அவர் தனது உயர்தரப் பரீட்சைக்காகத் தயாராகிக்கொண்டிருந்த வேளையில், குற்றவாளியின் இல்லத்தில் தங்கியிருந்தார் என்றும் தெரியவருகிறது.

வழக்கு விசாரணையின் போது, ​​குற்றவாளி தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியதாகவும், இந்தச் சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் சிறுமி சாட்சியமளித்தார்.

அதன்பிறகு, அவர் மீண்டும் இடம்பெயர்ந்தோருக்கான முகாமிற்குச் சென்றார்.

சிறுமி கர்ப்பமாக இருப்பதை சுகாதாரப் பணியாளர்கள் கண்டறிந்ததைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ (DNA) பரிசோதனையின் மூலம், அந்தச் சிறுமிக்கு பிறந்த குழந்தைக்கு, குற்றவாளியே உயிரியல் ரீதியான தந்தை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

மேன்முறையீட்டு விசாரணையின் போது, ​​இந்த பாலியல் உறவு இரு தரப்பினரின் சம்மதத்துடன் இடம்பெற்றதாகக் குற்றவாளி வாதிட்டார். இருப்பினும், மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த வாதத்தை நிராகரித்து, வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தியது.

இருப்பினும், குற்றவாளிக்கு – இதற்கு முன்னர் எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை என்பதையும், அவர் ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பதையும் கருத்தில் கொண்டு, அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை 17 ஆண்டுகளிலிருந்து 13 ஆண்டுகளாகக் குறைக்க நீதிமன்றம் தீர்மானித்தது.

மேலும், ஏற்கனவே விதிக்கப்பட்ட 5,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கப்பட வேண்டிய 300,000 ரூபாய் இழப்பீட்டுத் தொகையும் மாற்றமின்றி அப்படியே இருக்கும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.