
– நூருல் ஹுதா உமர் –
நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 56 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தை, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இன்று திறந்து வைத்தார்.
பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம், நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம், கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர், ஏனைய கல்வி அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்புதிய கட்டடம், மாணவிகளுக்கான கற்றல் சூழலை – மேலும் மேம்படுத்துவதற்கும், கல்வி நடவடிக்கைகளைச் சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை விரிவுபடுத்தி, கல்வி நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான இத்தகைய அபிவிருத்திப் பணிகள், அவர்களின் எதிர்காலக் கல்வி முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் எனக் கல்விச் சமூகத்தினர் எதிர்பார்க்கின்றனர்.




