
வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கணேசரூபன், ஓய்வுபெற்ற அரசாங்க உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் – போதையில் அத்துமீறி நுழைந்து, வீட்டையும் உடைமைகளையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கைதாகியுள்ளார்.
குறித்த பிரதேச சபை உறுப்பினர் தனது நண்பர்களுடன், யாழ்ப்பாணம் – நெல்லியடியிலுள்ள ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தரின் வீட்டுக்குள் நுழைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கணேசரூபனும் அவரது நண்பர்களும் கடந்த இரவு – நெல்லியடி பகுதியில் உள்ள வீட்டிற்குள் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் வீட்டின் பாதுகாப்பு கேமராவை சேதப்படுத்தியதாகவும், வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்ததாகவும், வீட்டாருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வீட்டு உரிமையாளர் 119 என்ற அவசர பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த நெல்லியடி பொலிஸார், பிரதேச சபை உறுப்பினரையும் அவரின் நண்பர்களையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.



