
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை பயன்படுத்தாமல், மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாற்று வழிகளைப் பின்பற்றுமாறு சுற்றாடல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்காலிக வசதிக்காக வாங்கப்படும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் சுற்றுச்சூழலில் தங்கி, நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அன்றாடப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் – ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று கூறி, சுற்றுச்சூழலுக்கு உகந்த கண்ணாடிப் போத்தல்கள் அல்லது பிற பொருத்தமான மாற்று வழிகள் உட்பட, மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் போத்தல்களை பொதுமக்கள் எடுத்துச் செல்லுமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
அரச நிறுவனங்கள் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் கொள்முதல் மற்றும் பயன்பாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் அமைச்சின் தலையீட்டின் மூலம் வெளியிடப்பட்ட ஒரு விசேட அறிக்கையில், அத்தகைய போத்தல்களின் கொள்முதல் மற்றும் பயன்பாட்டைக் குறைக்குமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, அது, மே 31, 2026 அன்று நடைமுறைக்கு வந்தது.



